காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கடந்த வாரம் ஐ.நா. சபையில் உரையாற்றுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். காஷ்மீர் என்பது ஐ.நா. அமைப்பின் தோல்வியின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர். ஜர்தாரியின் கருத்து நியாயப்படுத்த முடியாதது என்றார்.
கஷ்மீரில் மக்கள் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடிவருகிறார்கள். இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை சில பாகிஸ்தானிய ஆதரவுக் குழுக்கள் ஊடாக சிதைக்க அந்த நாடு முற்படுகிறது. இப்போது பெரும்பாலான மக்களும் பல குழுக்களும் பாகிஸ்தானின் தலையீடிற்கு எதிரான போராட்டத்தையும் இணைந்தே நடத்தி வருகின்றனர். ஈழப்போராட்டத்தில் இந்திய, தமிழ் நாட்டு அதிகாரவர்க்கத்தின் தலையீடு போன்றே கஷ்மீரில் பாகிஸ்தானிய தலையீடு பெரும்பாலனா மக்களில் விருப்பத்திற்கு மாறாகவே உருவாகின்றது.
ஐ.நா. சிறப்பு அரசியல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் நிரந்தர துணை பிரதிநிதியான ராஜாபஷீர் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு ஐ.நா.வின் காலனிமய எதிர்ப்பு திட்டம் நிறைவு தராது. இந்த பிரச்சினைக்கு காஷ்மீர் மக்கள் உட்பட அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அமைதியான தீர்வை காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.