Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்விளான் மற்றும் முழங்காவில் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய துணுக்காய்க்கு தென்மேற்கில் உள்ள கல்விளான் பகுதியை நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கடுமையான பலநாள் எதிர் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆயினும் வவுனியா நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று இராணுவத்தினருக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால், வவுனியா பாலமோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

வவுனிக்குளம் மற்றும் வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் 5 விடுதலைப் புலிகளும், 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

Exit mobile version