Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் இருளர்களுக்கு இடமில்லை- பேராசிர்யர் கல்யாணி.

தமிழக அரசின் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் இருளர்கள் பயன் அடைய முடியவில்லை என அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று மாவட்ட இருளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேராசிரியர் கல்யாணி வருத்தம் தெரிவித்தார். அரக்கோணத்தை அடுத்த கல்லாறில் புதன்கிழமை நடைபெற்ற வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் இருளர் முன்னேற்றச் சங்க ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்விமணி()கல்யாணி பேசியது: தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். இதில் 1 சதவிகிதம் மட்டுமே இருளர்கள். இந்த இருளர்களிலும் 12.5 சத மக்கள் மட்டுமே எழுத்தறிவு உள்ளவர்கள். இதில் 100க்கு 4 பேர் மட்டுமே நிலமுள்ளவர்கள். இருளர்கள் சிதறி வாழ்வதால்தான் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.முதலில் இவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். தமிழகத்திலேயே முதன் முதலாக தற்போது விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள இருளர்கள் 50 சதவிகிதம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பார்த்தால் இருளர்கள் பட்டா இல்லாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். காரணம் பட்டா வழங்கப்பட வேண்டிய இடத்தில் அவர்கள் குடியிருக்கவில்லை. இருளர்கள் இன்னமும் ஓடை புறம்போக்கு, கால்வாய் புறம்போக்கு ஆகிய பகுதிகளிலேயே வாழ்ந்து வருவதால்தான் அவர்களுக்கு பட்டா தரஇயலவில்லை. தமிழக அரசின் திட்டங்களிலேயே சிறந்த திட்டம் கலைஞரின் வீட்டுவசதி திட்டம். இப்படிப்பட்ட சிறப்பான திட்டத்தால் இருளர்கள் பயன் அடைய முடியவில்லை. ஏனெனில் பட்டா இருப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற முடியும்.ஆகவே இருளர் இன மக்களின் முதல் கோரிக்கையே பட்டாதான். இவர்கள் இனச்சான்று பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றார் பேராசிரியர் கல்யாணி. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வந்த திரளான இருளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு இருளர் முன்னேற்றச் சங்க தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க நிர்வாகி பெர்ணார்ட்பாத்திமா, மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி வெங்கட், கிராம பெண்கள் விடுதலை இயக்கத் தலைவி சாந்தி, தலித் மக்கள் இயக்க நிர்வாகி அமிர்தம்மாள், உடல்நலபாதுகாப்பு சங்கத் தலைவி ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version