Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலைஇலக்கியமும் அரசியலும் : சி. கா. செந்திவேல்

மனிதர்களின் ஓசை வெளிப்பாடானது உழைப்புக்கும் உற்பத்திக்கும் ஏற்றவாறான மொழியின் தேவையை விருத்தி செய்து கொண்டது. உழைப்பு, உற்பத்தி, ஓய்வு அவற்றின் அடிப்படையிலான சமூக வளர்ச்சி வாய்மொழி இலக்கியத்தையும் ஏற்கனவே உருவாகிய கலைகளையும் புதிய கட்டத்திற்கு வளர்ச்சியடைய வைத்தது. இங்கே மனிதர்களின் பன்முக ஆற்றல்கள் மூலமான கலை இலக்கியச் செழுமைப்பாடுகள் இடம் கால நிலைச் சூழலுக்கு ஏற்றவாறு முன் சென்றன. அதேவேளை கலை இலக்கியம் எனக் கூறப்படுபனவற்றின் ஆரம்பக் கூறுகள் அக் காலத்திய மனிதர்கள் யாவருக்கும் பொதுவானதாக அவர்களது உழைப்பு உற்பத்தி ஓய்வு மற்றும் மகிழ்ச்சி துன்பம் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. அத்துடன் வழிபாட்டுச் சடங்குகளின் விருத்தியுடனும் இக் கலைகள் இணைந்திருந்தன. இக் கால கட்டம் குறிப்பிட்டளவு காலத்திற்குப் பின் மாற்றமடைய ஆரம்பித்தது.

ஆரம்ப கால மனிதர்கள் மத்தியில் நிலவி வந்த பொதுவுடைமைச் சமூக அமைப்பு முறை தனிச் சொத்துடைமையின் தோhற்றத்தால் சிதைவுற ஆரம்பித்தது. வர்க்க வேறுபாடுகளும் அரசும் தோற்றம் பெற்றது. வர்க்க சமூகத்தின் மத்தியில் உற்பத்தி விரிவாக்கம் பெற்ற அதே வேளை மனிதர்களின் உழைப்பு அபகரிக்கப்படும் நிலை வளர்ச்சி கண்டது. சமூக ஏற்றத் தாழ்வுகள் உருவாகின. அடிமைகள் எசமானர்கள் அமைப்பு உருவாகி ஏகப் பெரும்பான்மையான மக்களின் உழைப்பு பலாத்காரத்தின் ஊடாக உறுஞ்சப்பட்டு எசமானர்களின் சுகபோக வாழ்வுக்கு வழிவகைகள் தேடப்பட்டன. மக்கள் மத்தியில் பொதுவானதாக இருந்து வந்த கலைகளும் இலக்கிய வெளிப்பாடுகளும் உயர் வர்க்கத்தினரின் தேவைக்கானவையாக மாற்றப்பட்டது. வர்க்க வேறுபாடுகள் போன்றே கலை இலக்கியங்களும் ஆளும் வர்க்கங்களுக்குரியனவாகவும் ஆளப்படும் மக்களுக்குரியனவாகவும் பிளவுண்டன. ஆனால் அரசு நிறுவனத்தை விரிவாக்கி வந்த ஆளும் வர்க்க சக்திகள் கலை இலக்கியங்களைத் தமது உல்லாச வாழ்வின் நுகர்வுக்குரியதாக்கியதுடன் தம்மைப் பாதுகாக்கும் பண்பாட்டுக் கவசமாகவும் மாற்றி முன்னெடுத்தன. இந் நிலை அடிமை சமூகம் நிலவுடைமை சமூகம் அதன் பின்னான இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போக்கினை கலை இலக்கியம் பற்றிய வரலாற்றுப் பொருள் முதல் வாதப் புரிதலின் ஊடாகக் காண முடிகிறது.

வர்க்கங்களாகப் பிளவு பெற்ற மனித சமூகத்தில் கலை இலக்கியங்களும் அந்தந்த வர்க்கங்களின் தேவைகள் நலன்கள் இருப்பு தொடர்ச்சி போன்றவற்றுக்குரியனவாக அணி பிரிந்து காணப்பட்டன. பிற்கால ஆய்வுகளின் ஊடாக நோக்கும் போது செவ்வியல் கலை இலக்கியங்கள் சொத்துடையோரினதும் ஆளும் வர்க்கம் சார்பானதாகவும் நாட்டார் கலை இலக்கியங்கள் உழைக்கும் மக்களின் இலக்கியங்களாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். இதிகாசங்கள் புராணங்கள் சங்க இலக்கியம் எனப்படுவனவற்றில் பெரும் பகுதியும் பின் வந்த பக்தி இலக்கியங்கள் போன்றன யாவும் ஆளும் வர்க்கத்தையும் சொத்துடையோரையும் அவர்களின் அரசு நிறுவனங்களையும் நியாயப்படுத்தியும் பாதுகாத்தும் வந்ததுடன் அத்தகைய சக்திகளின் சுகபோக வாழ்வின் நுகர்வுக்குரிய நியதிகளாக்கப்பட்டன. நிலவுடைமைமைக்கால சிற்பங்கள் ஓவியங்கள் கலை அழகு மிக்க கோவில்களும் கோபுரங்களும் மற்றும் இயல் இசை நாடகங்கள் செய்யுள்கள் காப்பியங்கள் நாடகங்கள் அரண்மனை கலை நிகழ்வுகள் யாவும் கலை இலக்கியம் ஆளும் வர்க்கத்தினருக்குரியதாகவே உருவாக்கப்பட்டிருந்தன. அதேவேளை உழைக்கும் மக்களான விவசாயிகள் கைவினைத்திறன் கொண்டோர் மத்தியில் கலைகளும் இலக்கியங்களும் இருந்து வரவே செய்தன. அத்தகையனவற்றில் உற்பத்தி உழைப்பு வாழ்க்கை அனுபவங்கள் போன்றன பிரதிபலித்து நின்றன. மக்கள் கலை இலக்கியமான நாட்டார் வாய் மொழியான பாடல்கள் ஓசை நயத்துடன் தத்தமது சூழலின் ஊடாக கலைத்துவங்களுடன் வெளிப்பட்டிருந்தன. வயலிலே உழுது பயிரிட்டு களையெடுத்து அறுவடை செய்து நிலவுடைமைமையாளர்களின் வீடுகளில் சேர்க்கும் வரையான காலங்களில் பல்வகைப் பாடல்கள் முதுமொழிகள் உரையாடல்கள் தாலாட்டுக்கள் ஒப்பாரிகள் குல தெய்வ வழிபாடுகளின் போதான சடங்குப் பாடல்கள் அவற்றையொட்டிய கூத்து நிகழ்வுகள் போன்றவற்றில் மக்களின் கலை இலக்கியக் கூறுகளையும் அவற்றின் செளுமைகளையும் காண இயலும். உழைக்கும் மக்களைச் சாதிகளாகப் பிரித்து படி நிலைப்படுத்தியதன் மூலம் அவர்களுக்குரிய சமூகக் கடமைகள் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. அவர்களுக்குரிய சிறு தெய்வ வழிபாடுகள் மீற முடியாத நியதிகள் என நிர்ணயிக்கப்பட்டன. அதன் அடிப்படையிலான கலைகளும் இலக்கிய செயற்பாடுகளும் எல்லைகளுக்குட்பட்டதானவாக இருந்து வந்தன. எவ்வாறாயினும் கலை இலக்கியங்கள் ஒட்டு மொத்த சமூக வாழ்வையும் அதன் அசைவியக்கத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தன.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்ட வரலாறாகவே அமைந்திருந்தது. அவர்கள் உழைக்கும் மக்களான ஆளப்பட்ட மக்களின் வரலாற்றைச் ஒரு போதும் சொல்லியதில்லை. அவ்வாறு தான் தமிழ்ச் சூழலில் உயர்வாகக் கொண்டாடப்படும் கலை இலக்கியம் எனப்படுபவை யாவும் சொத்து சுகம் படைத்த ஆளும் வர்க்கத்தினராக இருந்து வந்த மன்னர்கள் தளபதிகள் பிரதானிகள் நிலவுடைமையாளர்கள் உயர் சாதிய மேட்டுக் குடியினரின் தேவை நலன்கள் இருப்பு நீட்சி என்பனவற்றைப் பாதுகாப்பவையாகவே இருந்து வந்துள்ளன. அந்த வர்க்கத்தினரின் நுகர்வுக்கும் ரசனைக்கும் உரியவையாகவே அவை படைக்கப்பட்டன. அத்துடன் அக்கலை இலக்கியப் படைப்புகளில் ஏற்றத்தாழ்வும் உழைப்பு அபகரிப்புகளும் நியாயப்படுத்தப்பட்டன. விவசாயிகளும் ஏனைய உழைப்பாளர்களும் விதியின் காரணமாக உழைக்கப் பிறந்தவர்களாகவும் அவர்கள் படும் துன்பங்கள் முற் பிறப்பின் காரணமானது என்றும் இக் கலை இலக்கியங்பள் ஊடாக எடுத்தியம்பப்பட்டது. புலவர்கள் புலமையாளர்கள் கலைத்திறன் மிக்கோர் இலக்கியம் படைத்தோர் யாவரும் அத்தகைய உயர் வர்க்கத்தையும் ஆளுவோரையும் அவர்களது கடவுளர்களையும் மையமாக வைத்தே தமது கலை இலக்கிய ஆக்கங்களை உருவாக்கினர். இவர்கள் உருவாக்கிய இவ்வாறான உயர் வர்க்க நலன் பேணும் கலை இலக்கியங்களுக்கு கடவுள்களோடு இணைத்து புனிதம் மேன்மை தூய்மை என்பனவற்றை ஏற்றி மெருகூட்டி மக்கள் முன் நிறுத்திக் காட்டினர். மக்கள் தத்தமது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று அவற்றை பக்திப் பரவசத்தோடு கேள்வி எழுப்பாதவாறு ஏற்றுக்கொள்ளுமாறு பண்பாட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இவற்றின் மற்றொரு பகுதியாக மத நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் தரிசன வழிபாட்டு முறைமைகளும் மக்கள் மீதான விலங்குகளாகப் பூட்டப்பட்டன. இவை அனைத்தும் கலை இலக்கியப் பண்பாட்டுச் செயற்பாடுகள் என்றவாறே முன்னெடுக்கப்பட்டன.

இவற்றை எதிர்த்த குரல்களும் அதிருப்தியுற்றவர்களின் கேள்விகளும் அவ்வப்போது சமூக நிகழ்வுப் போக்குகளிலே வெளிப்படவே செய்தன. குறிப்பாக சித்தர்களின் பாடல்களிலே அவை எதிரொலித்து வந்திருப்பதை அவதானிக்கலாம். ஆனால் அவை இலக்கியத் தளங்களில் மேலெழும்புவது ஆளும் வர்க்கத்தினரால் தடுக்கப்பட்டது. அத்தகையவர்கள் சமூகத்திற்கு ஒவ்வாதவர்கள் என்றும் ஆண்டிகள் பரதேசிகள் என்றும் ஓரங்கட்டப்பட்டனர். பக்தி இலக்கியங்களில் ஆங்காங்கே கூறப்பட்ட சில அதிருப்திக் குரல்கள் கூட பிரதான ஒட்டத்தால் கண்டு கொள்ளப்படவில்லை அல்லது முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலவுடைமைமைக் கால கலை இலக்கியத்தின் ஆளும் வர்க்க ஆதிக்கப் போக்கானது இன்றுவரை பழைமை, மரபு, மதம், சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு என்பனவற்றின் பெயரால் தொடரப்படுகிறது. அத்தகைய ஆளும் வர்க்க உயர் சாதிய மேட்டுக்குடிக் கருத்தியலின் அடிப்படையிலேயே இன்று வரை கலை இலக்கியங்கள் பிரதான போக்காக முன்னெடுக்கப்படுகிறது. பிரித்தறியப்படுவது கேள்வி எழுப்பி மாற்று கலை இலக்கியக் கருத்து முன் வைக்கப்படுவது ஒடுக்கப்படும் மக்களுக்கான கலை இலக்கியம் வற்புறுத்தப்படுவது பல்வேறு நிலைகளிலும்; எதிர்க்கப்படுகின்றது. அவற்றுக்கு உரிய பதில் கூற முடியாத விடத்து கலை இலக்கியத்தில் அரசியல் புகுத்தப்படுகிறது எனப் பெருங்குரல் வைக்கப்படுகிறது.

அரசியல் என்பது தனிச் சொத்துடைமையும் வர்க்கங்களும் தோன்றியதிலிருந்து வளர்ச்சி பெற ஆரம்பித்து விட்டது. தனியுடைமையும் பொருள் உற்பத்தி முறைமையும் மக்களின் உழைப்பை ஒரு சிலர் அபகரித்துச் செல்வம் பெருக்குவதும் வளர்ச்சி கண்டது. அத்தகையோரின் நலன்கள் தேவைகள் இருப்பு என்பனவற்றைப் பாதுகாக்கும் அரசும் ஆளும் வர்க்கமும் தோன்றி வளர்ந்து விரிவு பெற்று வந்த சூழலில் அதற்கான அரசியலும் வளர்ச்சி பெற்று வந்தது. அந்த அரசு நிறுவனத்தையும் அதன் அரசியலையும் பாதுகாக்க பொல்லுகளும் தடிகளும் அம்பும் வில்லும் சவுக்கும் சாட்டைகளும் அன்றைய ஆயுதங்களாகி மக்களை ஒடுக்கி நின்றன. அதேவேளை மற்றொருவகை கருத்தியல் ஆயுதங்களாக அமைந்தனவே கலை இலக்கியங்களும் மதங்களுமாகும். இவற்றின் நீட்சியும் வளர்ச்சியும் தான் இன்றைய நவீன ஆயுதங்களும் அவற்றை நியாயப்படுத்தும் நவீன கலை இலக்கியங்களும் தற்கால தகவல் தொழிநுட்ப சாதனங்களுமாகும். இவை அனைத்தும் ஆளும் வர்க்க அரசியலின் தொடர்ச்சியை அவற்றின் இருப்பை வற்புறுத்தி நிற்பவையாகும். அவை திட்டவட்டமாக சொத்துடையவர்க்க அரசியலுக்கே சேவை செய்கின்றன. இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில் கலை இலக்கியங்களில் எத்தகைய நவீன வடிவங்கள் தோன்றிய போதும் அவற்றின் வெளிப்படுத்தல்களில் புதிய சொல்லாடல்கள் வடிவ மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட தாயினும் அவை யாவும் யாருடைய தேவைக்காக யாரால் முன்வைக்கப்பட்டு எந்த நோக்கங்களுக்கு பரப்புரை செய்யப்படுகின்றன என்பதே சாராம்சமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

நிலவுடைமைமைக் கருத்தியலும் சிந்தனை நடைமுறைகளும் உடைந்து நொருங்காத ஒரு சமூகத்தில் முதலாளித்துவத்தை உள்வாங்கிய நிலையில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். இவை இரண்டினதும் கெட்டியான பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுச் சூழலின் மத்தியிலே தான் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இச் சூழலில் வெளிவரும் கலை இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்றும் ஆதிக்க வர்க்க கருத்தியல் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. அவற்றின் உள்ளார்ந்தம் மேட்டுக்குடி அரசியலாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் அவற்றை கலை இலக்கியமாகக் காட்டுவார்களே தவிர அதனுள் உள்ளடங்கி நிற்கும் அரசியலை அரசியல் என ஏற்றுக் கொள்வதில்லை. மகாபாரதமும் கம்பராமாயணமும் போற்றுதலுக்கும் புனிதத்திற்கும் உரிய இலக்கியமாகவே கொண்டாடப்படுகிறது. அவற்றுக்கான விழாக்களும் எடுக்கப்படுகின்றன. அவற்றின் இலக்கியப் பெருமைகளுக்குள் எத்தகைய வர்க்க அரசியல் உள்ளடங்கி இருக்கின்றது என்பதை யாரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது. அதே போன்று அவற்றை முன்னெடுக்கும் அமைப்புகளும் பெருமனிதர்கள் எனப்படுவோரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட புனிதர்களாகவே காட்டப்படுவர். ஆனால் அவர்கள் பேசும் கலை இலக்கியங்களில் உறைந்து காணப்படும் பழைமைவாத உயர்வர்க்க மேட்டுக்குடி அரசியலைப் பற்றி எவரும் காணக் கூடாது என்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட கலை இலக்கியம் என்றும் தூய்மையான கலைத்துவ அளவு கோல்களைக் கொண்ட கலை இலக்கியம் என்றும் பேசப்படுவதையும் எழுதப்படுவதையும் பார்க்க முடிகிறது. கலை கலைக்காகவே என்றும் ரசனைக்கும் மன மகிழ்வுக்கும் உரியதே கலை இலக்கியம் என்றும் பரப்புரை செய்யப்படுகின்ற போக்கு இன்று வரை தொடர்கின்றது. இவை யாவும் அபத்தம் நிறைந்த ஆதிக்க வர்க்கத்தைப் பாதுகாக்கின்ற அவற்றின் சாராம்சமான உயர் வர்க்க அரசியலை மறைத்துக் காட்டுகின்ற முயற்சிகளேயாகும்.

கலை இலக்கியத் தளத்தில் மட்டுமன்றி சகல சமூகத் தளங்களிலும் அரசியல் பொதிந்து காணப்படுகிறது. வெளிவெளியாகப் பேசப்படுகின்ற அரசியலை மட்டுமே அரசியலாகப் பார்ப்பது மிகை எளிமைக்குரியதாகும். பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் உழைப்பிலும் விநியோகத்திலும் மட்டுமன்றி கல்வி சுகாதாரம் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் அரசியல் உள்ளார்ந்தமாகவும் உறுதி பெற்றதாகவும் இருந்து வருகின்றன. நடைமுறையில் ஏற்றத்தாழ்வானதும் சுரண்டல் முறை கொண்டதும் சமூக நீதி மறுப்புக்களையும் உள்ளடக்கியுள்ள இன்றைய வர்க்க இன சாதிய பெண் ஒடுக்கு முறைகள் கொண்ட சமூக அமைப்பில் அடிப்படைக் கேள்விகள் எழுப்பப்படாத வரை கலை இலக்கியத்தில் அரசியல் என்பது பிரச்சினையாக இருக்கமாட்டாது. ஆனால் பலமான கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் புரட்சிகர சிந்தனைகளும் முன்வைக்கப்படும் போதே அரசியல் வந்து விட்டதாக ஊளைச் சத்தங்கள் எழுவதைக் காண முடியும். வர்க்க வேறுபாடுகள் பற்றியும் வர்க்க சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அழுத்தம் பெறும் போது ‘இது அரசியல் என்றும் நமக்கும் நமது கலை இலக்கியத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிரானது’ என்ற கோபாவேசமும் பழைமைவாதக் கலை இலக்கியப் பரப்பிலிருந்து வெளிப்படுவதைக் காண முடியும்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கூற முடியும். வடபுலத்தில் உள்ள ஒரு சனசமூக நிலையத்தில் காந்தி நேரு கென்னடி போன்றவர்களின் படங்கள் இருந்து வந்தன. கால வோட்டத்தில் அக்கிராமத்தில் அரசியல் விழிப்புற்ற சில இளைஞர்கள் அதே படங்களுடன் லெனின் மாஓசேதுங் ஆகியோரின் படங்களையும் சன சமூக நிலையத்தில் வைக்க முற்பட்டனர். உடனே அதற்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அரசியலை இங்கு புகுத்த வேண்டாம் என உரத்துக் கூறப்பட்டது. அப்படியாயின் காந்தி நேரு கென்னடி ஆகியோரும் அரசியலாளர்கள் தான் எனச் சுட்டிக் காட்டப்பட்டதும் அதனை அத்தகையோரால் உள்வாங்க முடியவில்லை. லெனின் மாஓ என்போர் கம்யூனிசப் புரட்சிகர அரசியலாளர்கள் என்றே விளக்கமளிக்கப்பட்டது. இத்தகைய நிலை தான் கலை இலக்கியத் தளத்திலும் நீடிக்கிறது. மாற்றுச் சிந்தனைகளும் புரட்சிகர சமுதாய மாற்றக் கருத்துக்களுமே அரசியல் என முத்திரை குத்தப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தமிழ்மொழி, தமிழர் பண்பாடு இந்து மதம் போன்றவற்றுக்கான பலவேறு அமைப்புகள் செயல்படுகின்றன. அவை நிலவுடைமைக் கருத்தியலின் பழைமைவாத செயற்பாட்டையே அடி ஆதாரமாகக் கொண்டே இயங்குகின்றன. அவற்றை வழி நடத்துவோர் பழைமை பேண் வாதிகளாகவே இருப்பர். இவர்கள் தமக்கு இயைபுடைய அரசியல் கருத்துக்கள் பேசப்படுவதை வரவேற்பார்கள். ஆனால் மாற்றுக் கருத்துக்கள் பேச முற்பட்டால் அதனை அரசியல் என ஊழையிட்டு எதிர்க்க ஆரம்பித்து விடுவர். மேட்டுக்குடி சார்பாகப் பேசுவோர் மெச்சப்படுவதும் ஒடுக்கப்பட்டோர் சார்பாக பேசப்படுவது மறுக்கப்படுவதும் இயல்பாகவே உள்ளது.

மேலும் கலை இலக்கியத்தில் உருவம் உள்ளடக்கப் பிரச்சினை வரும் போதும் மரபு பற்றிய விவாதங்கள் இடம் பெறும் வேளைகளிலும் இவ் அரசியல் என்பது பிரச்சினையாக்கப்பட்டு வந்த நிலை தமிழ்ச் சூழலில் நீடித்து வந்திருக்கிறது. மக்கள் படும் அவலங்கள் துயரங்கள் வாழ்க்கை இடர்கள் பற்றி ஒரு இலக்கியப் படைப்பில் கலைத்துவத்துடன் சித்தரிக்கப்படுவதையும் அவற்றுக்கான காரணகாரியங்கள் பற்றிக் கூறாது விடுவதும் அவற்றுக்கான ஒரு தெளிவான மாற்றுப் பற்றிக் குறிப்பிடாது விடுவதையும் நல்லதொரு இலக்கியம் எனக் கருதப்படும். அத்தகைய மக்கள் தமது துன்பதுயரங்களுக்கு கோவிலில் சென்று மனமுருகி வழிபடுவதையும் அல்லது சிலர் தானதருமம் செய்வதையும் தரமான இலக்கிய முடிவாகப் போற்றப்படும். ஆனால் அதே படைப்பு மக்களின் துன்பதுயரங்களுக்கு சமூகத்தின் வர்க்க- சாதிய ஏற்றத்தாழ்வு காரணம் என்றும் சமூக மாற்றம் அவசியம் எனவும் வற்புறுத்திய கருத்துக்களுடன் நேர்த்தியான கலைத்துவ நடையில் ஆக்கங்கள் அமைந்திருந்தால் அது அரசியல் பிரச்சாரம் கலைத்துவச் சிதைவு என்றெல்லாம் பரப்புரை செய்யப்படுவதை இன்றும் கலை இலக்கியத் தளத்திலே காண முடிகிறது.

மாக்சிசத்தின் தோற்றத்துடனும் லெனினிசத்தின் வளர்ச்சியின் ஊடாகவும் கலை இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவு பற்றிய தெளிவு விரிவு பெற்றது. 1917ன் ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியும் அதற்குப் பின்னான சீனப்புரட்சி உட்பட்ட சமூக மாற்றத்திற்காக இடம் பெற்ற புரட்சிகளில் விடுதலைப் போராட்டங்களில் எல்லாம் கலை இலக்கியம் வகித்த பாத்திரமும் பங்களிப்பும் உலகறிந்ததாகும். உலகப் புகழ் வாய்ந்த உழைக்கும் மக்களுக்கான கலை இலக்கியங்கள் உருவாகின. அவற்றை ஆக்கித் தந்த புகழ் மிக்க எழுத்தாளர்களும் கலைஞர்களும் உலக மக்களால் போற்றப்பட்டனர். அவர்களது கலை இலக்கிய படைப்புகளின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அடிப்படை கலை இலக்கியம் பற்றிய வரலாற்றுப் பொருள் முதல் வாதத் தெளிவும் அதன் மூலமான மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டு வழங்கலுமேயாகும்.

1942ல் தோழர் மாஓசேதுங் நிகழ்த்திய தனது புகழ் பெற்ற யெனான் கலை இலக்கியக் கருத்தரங்கு உரையின் போது சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை இங்கே மீட்டுரைப்பது பயன் தருவதாக அமையும்.

‘கலை இலக்கிய விமர்சனத்தில் அரசியல் கலையியல் என இரண்டு வரையறைகள் உண்டு…….

அங்கு அரசியல் வரையறையும், கலையியல் வரையறையும் உண்டு. இவை இரண்டுக்கும் உள்ள உறவு யாது? அரசியலைக் கலையுடன் சமப்படுத்த முடியாது. ஒரு கலைப் படைப்பு கலை பற்றிய விமர்சன முறையுடன் பொது உலக நோக்கையும் சமப்படுத்த முடியாது. ஒரு சூட்சுமான முற்றிலும் மாறாத கலையியல் வரையறை உண்டு என்பதையும் நாம் மறுக்கின்றோம். வர்க்க சமுதாயங்களிலுள்ள ஒவ்வொரு வர்க்கத்துக்கும் அதற்குரிய அரசியல் கலையியல் வரையறைகள் உண்டு. ஆனால் எல்லா வர்க்க சமுதாயங்களிலுள்ள எல்லா வர்க்கங்களும் விதிவிலக்கின்றி அரசியல் வரையறையை முதலிடத்திலும் கலையியல் வரையறையை இரண்டாமிடத்திலும் வைக்கின்றன…. நாம் அரசியல் கலை இரண்டின் ஐக்கியத்தை உள்ளடக்கம் வடிவம் இரண்டின் ஐக்கியத்தை புரட்சிகர அரசியல் உள்ளடக்கம் சாத்தியமான அதி உயர்ந்த அளவு பூர்த்தியான கலையியல் வடிவம் இரண்டின் ஐக்கியத்தைக் கோருகின்றோம். கலையியல் பண்பு குறைந்த கலைப் படைப்புகள், அரசியல் ரீதியில் எவ்வளவு முற்போக்குடையவையானாலும் அவ்வளவு சக்தி வாய்ந்தவையல்ல. எனவே தவறான அரசியல் கண்ணோட்டமுடைய கலைப் படைப்புகள் சரியான அரசியல் கண்ணோட்டமுடைய ஆனால் கலை ஆற்றல் குறைந்த ‘சுவரொட்டி அல்லது முழக்கமிடும் நடை’ தழுவிய போக்கு இரண்டையும் நாம் எதிர்க்கிறோம். கலை இலக்கியப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வகையில் நாம் இரு முனைகளிலும் போராட்டம் நடத்த வேண்டும்.’

ஆதலால் தமிழ்ச் சூழல் இன்றைய உலகமயமாதலின் கீழான கலை இலக்கிய பண்பாட்டுச் சீரழிவுகளை உள்வாங்கி வரும் ஒரு அபாயத்தை எதிர் நோக்கி நிற்கின்றது. பழைமைவாதம் பேசுவோரும் மரபு பற்றிச் சிலாகிப்போரும் தம்மளவில் சுய இன்பமடைந்து நிற்க அந்நிய சீரழிவு நச்சுக் கலை இலக்கிய ஊடுருவல்கள் புற்று நோய் போன்று சத்தமின்றிப் பரவி வருகின்றன. அதற்கான வலுவான தளத்தை ஒலி ஒளி ஊடகங்கள் குறிப்பாகக் காட்சி ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடகங்களும் வழங்கி வருகின்றன. இவற்றுடன் சினிமாவும் கணனி வலையமைப்புகளும் கூட உச்ச நிலைச் சீரழிவுகளுக்கு வழிவகுத்து நிற்கின்றன. இவை அனைத்துமே உலகமயமாதல் அரசியலையையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இவற்றின் நச்சுத்தனம் மிக்க கருத்துக்கள் இந்தியாவில் தமிழகத்திலிருந்து இறக்குமதியாக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடர்களாகவும் இசை நிகழ்வுகளாகவும் மோசமான நடையுடை பாவனை கொண்ட ஆட்டம் பாட்டுக்களாகவும் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. முன்பு கொலனிய காலத்தில் பழைமைவாதிகள் நிலவுடைமைக் கால கலை இலக்கியங்களைப் போற்றிப் புகழ்ந்து முன்னெடுத்தனர். அவர்களது அந்நியர்களுக்கு அடிபணிந்து சேவையாற்றும் அரசியலுக்கும் சாதிய மேன்மையின் பாதுகாப்பிற்கும் அத்தகைய கலை இலக்கியங்கள் பயன்பட்டன. ஆனால் கொலனியத்திற்குப் பின்னான கால கட்டத்தில் இப் பிற்போக்கு கலை இலக்கியங்களை எதிர்த்து முற்போக்கான கலை இலக்கிய எழுச்சியானது எதிர் நீச்சலிட்டு மேல் எழுந்தது. மரபு வாதிகளையும் பண்டித வாதிகளையும் எதிர்த்து வீச்சுடன் எழுந்த சமூக சார்பு மிக்க முற்போக்கு கலை இலக்கியங்கள் செழுமையடைந்தன. ஆனால் அவை பலமடைந்து மக்கள் கலை இலக்கியமாகவும் புரட்சிகர கலை இலக்கியமாகவும் வளரக்கூடிய சூழலை 1977க்குப் பின்னான பொருளாதார அரசியல் சமூக முன்னெடுப்புக்கள் தடுத்து திசை திருப்பிக் கொண்டன. தாராளமயம் தனியார் மயம் உலகமயமாதல் என்பன மூன்றாம் உலக நாடுகளில் உட்புகுத்தப்பட்டது. அதன் அழிவுகரமான தாக்கம் ஏனைய துறைகளைப் பாதித்தது போன்று கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தையும் கடுமையாகப் பாதித்துக் கொண்டது.

உலகமயமாதலின் கீழான நச்சுக் கலை இலக்கியங்களும் அந்நிய பண்பாட்டுக் கோலங்களும் நவீன தகவல் தொழில் நுட்பங்கள் மூலமாகப் மக்கள் பரப்பிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு நிலவுடைமை வழி வந்த பழைமைவாதிகளும் முதலாளித்துவத்தை உள்வாங்கி நிற்கும் பிற்போக்கு சக்திகளும் கருத்தியல் சிந்தனைப் பக்கபலத்தை வழங்குகின்றனர். புலம் பெயர்ந்த நம்மவர்களின் பண வருவாயும் இதனை ஊக்கப்படுத்தி வருவதுடன் என். ஜீ. ஓக்கள் எனப்படும் அந்நிய உள் நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பணக்கத்தைகளுடனும் கருத்தியல் சீரழிவுகளுடனும் களத்தில் இறங்கி நிற்கின்றன. மக்கள் மத்தியில் ஏற்கனவே வேர் பிடித்து நின்ற பழைமைவாதக் கருத்தியல் சிந்தனைகளும் மரபு மதம் பற்றிய ஒற்றைப் பரிமாண மூட நம்பிக்கைகளும் மேலும் வலுவடைந்துள்ளன. ஏற்கனவே ஓரளவு தானும் விருத்தி பெற்று வந்த சமூக சார்புச் சிந்தனைகள் உலகமயமாதலின் தனிநபர்வாத பணம் குவிக்கும் சுயநலப் போலிப் புகழ் சேர்க்கும் போக்குகளால் மூழ்கடிக்கப்பட்டன. அண்மைய உதாரணம் ஒன்றைக் காண முடியும். கோவில்களில் வருடத்தில் ஒரு நாள் இழுக்கும் தேர் செய்வதற்கும் கோபுரங்கள் எழுப்புவதற்கும் இன்றைய இன்னல்கள் மிக்கப் போர்ச் சூழலிலும் கோடிக் கணக்கில் செலவிடப்படுகிறது. அதேவேளை பொது மருத்துவ மனைகளில் நோயுற்ற மக்கள் மருந்துகள் இன்றியும் தங்கிச் சிகிச்சை பெற இடமின்றியும் படுக்க கட்டில்கள் இல்லாதும் அல்லற்படுகின்றனர். இந்த இரட்டை நிலையைச் சுட்டிக் காட்டினால் பழைமைவாதக் கனவான்களுக்கு கன்னம் சிவந்து கோபம் வந்து விடுகிறது. கோவில்களுக்கு கோடிகோடியாகச் செலவு செய்வதை விமர்ச்சிக்கவோ எதிர்க்கவோ கூடாது என வாதிப்பதுடன் பொது மருத்துவமனைகளுக்கு அதன் மீது அக்கறைப்படுவோர் பணம் சேரித்துக் கொடுக்கலாம் தானே என்றும் கூறுகிறார்கள். இத்தகைய சிந்தனை பழைமைவாதிகளினது மட்டுமன்றி உலகமயமாதலின் கீழ் எவரும் எப்படியும் பணம் சேகரிக்கலாம் செலவு செய்யலாம் என்ற கருத்தியலின் வழிப்பட்டதுமாகும். பணம் உள்ளவர்கள் வசதி வாய்ப்புள்ளவர்கள் எதையும் எப்படியும் செய்து கொள்ளலாம். வசதியற்றவர்கள் பார்த்திருக்க வேண்டியது தான் என்பதே உலகமயமாதலின் அரசியலாகும். இத்தகைய அரசியலே சமகாலக் கலை இலக்கியத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. முற்றிலும் வர்த்தமயமாக்கப்பட்டு பணம் குவிக்கப்படுவதை நோக்காகக் கொண்ட நுகர்வுக் கலை இலக்கியப் பண்பாடு பல நிலைகளிலும் ஊக்குவிக்கப்படுகின்ற அபாயப் போக்கானது வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு வழிகாட்டும் கருத்தியலே பின் நவீனத்துவமாகும். இதன் பிரதான இலக்கு மக்கள் கலை இலக்கியத்தை சிதைத்து சின்னப்படுத்தி மக்கள் கலை இலக்கியத்திற்கு உந்து விசையாக இருக்கும் வெகுஜன அரசியல் மார்க்கத்தை மறுத்து நிராகரிப்பதுமாகும்.

ஆதலால் மக்கள் கலை இலக்கியத்தை முன்னெடுப்போரின் முன்னால் இரட்டைக் கடமைகள் உள்ளன. முதலாவது, பழைமைவாதக் கருத்தியல் சிந்தனை வகைக்குட்பட்ட கலை இலக்கியப் போக்கினை எதிர்த்து முன்செல்லல். இரண்டாவது, உலகமயமாதலின் கீழான நவதாராள பொருளாதார அரசியலை நியாயப்படுத்தி முன்னெடுக்கும் நச்சுத்தன கலை இலக்கிய சீரழிவுகளை முறியடித்து முன்னேறுவது.

இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு சமத்துவம் பன்மைத்துவம் சமூக மாற்றம் என்பனவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட மானுட விடுதலையை நோக்கிய மக்கள் கலை இலக்கியத்தை உரிய திசை வழியில் முன்னெடுக்க வேண்டும். சமூக நேர்மையும் மக்கள் சார்பும் கொண்ட ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பாளிகளதும் கலை இலக்கிய ஆர்வலர்களினதும் மக்களதும் சமகாலச் சமூகக் கடமையாகும்.
இனியொருவிற்காக சி.க.செந்தில்வேல்

Exit mobile version