லண்டனில் இருந்து நாடு திரும்பிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின மீது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்த அவரது கட்சியின் ஆதரவாளர்கள் விக்கிரமபாகு மீதான தாக்குதலைத் தடுக்க முற்பட்டபோத ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக விக்கிரமபாகு கருணாரத்தினவின் வருகையையொட்டி விமான நிலையத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தடுக்க முயன்ற விமான நிலையப் பொலிசாரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் விமான நிலைய வாடகை வாகனங்களின் சாரதிகள் ஆகியோரே கூட்டாக இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பிரதியமைச்சர் சரத் குணரத்தினவின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்றே விக்கிரமபாகு கருணாரத்தின உள்ளிட்ட ஏனையோர் மீதான தாக்குதலில் பங்குபற்றியதாக விமான நிலையத்தின் உயரதிகாரியொருவர் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக காயமடைந்தோரில் விக்கிரமபாகுவின் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பிரியந்த, அகில இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய, சிரச ஊடகவியலாளர் பிரேமலால் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சாந்த விஜேசூரிய தலையில் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற வைபவமொன்றில் பங்குபற்றிய விக்கிரமபாகு கருணாரத்தின தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அராஜகங்களை விமர்சித்திருந்ததுடன், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டிருந்தார். அதன் பின் ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் போது தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பலை காரணமாக .ஜனாதிபதி தனது நிகழ்ச்சி நிரலை இடைநடுவில் கைவிட நேர்ந்தது.
அவ்வாறான சூழலின் பின்னணியில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட விக்கிரமபாகு கருணாரத்தின மற்றும் தமிழ் மக்களின் கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் மீது அரசாங்கத்தின் கோபப்பார்வை திரும்பியிருந்தது.
அதன் அடுத்த கட்டமாக ஜயலத் ஜயவர்த்தன பாராளுமன்றத்தில் வைத்தே இரண்டு அமைச்சர்களால் தாக்கப்பட்டுள்ளார். இன்னொரு அமைச்சரும் பேர்போன சண்டியருமான மேர்வின் சில்வாவோ அதற்குமப்பால் சென்று ஜயலத் ஜயவர்த்தனவை இலங்கையின் எந்த ஒரு அங்குலத்திலும் ஒளிந்து வாழக் கூட விடமாட்டேன், கண்ட இடத்தில் கொலை செய்து விடுவேன் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார். ஆனாலும் அவ்வளவுக்குப் பின்னும் இலங்கையின் நீதித்துறையும் காவல் துறையும் தூங்கிக் கொண்டுதான் இருந்தன.
அதே நேரம் எப்போதும் போன்று ஜயலத் விடயத்திலும் ஜனாதிபதி தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டுள்ளார். கார்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு அரச மட்டத்தில் கௌரவம் அளிக்கப்பட்ட நிகழ்வின் போது அமைச்சர்களின் தாக்குதல் காரணமாக காயமேற்பட்ட தழும்புகளைக் கொண்ட ஜயலத்தின் கையைத் தடவி ஆறுதல் கூறியிருக்கின்றார். அதற்குப் பதில் தாக்கிய அமைச்சர்களை அவர் ஒரு வார்த்தை தானும் கண்டிக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் ஆளுனர் அலவி மௌலானா தலைமையிலான ஒரு குழுவினர் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக விக்கிரமபாகு கருணாரத்தினவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர். அவரை நாட்டுக்குள் வரவிட வேண்டாம் என்று அவர்கள் கோஷமெழுப்பியுள்ளனர்.
அதன் பின்னணியிலேயே விக்கிரமபாகு கருணாரத்தின மீதான தாக்குதல் பல்லாயிரம் மக்கள் நடமாடும் விமான நிலையத்தில் வைத்து பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லாவிடில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அவ்வாறு துணிச்சலுடன் செயற்பட்டிருக்க முடியாது. தவிரவும் அரச அதிகாரிகளான விமான நிலைய ஊழியர்கள் தாம் கடமையில் இருந்து கொண்டே ஒருவரைத் தாக்குவதென்பது அரச சேவை தாபன விதிக் கோவையின் பிரகாரம் பதவியிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதுவான காரணமாகும். ஆயினும் இங்கே அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை. காரணம் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாவிட்டால் விக்கிரமபாகுவை மட்டுமன்றி பொலிசாரையும் தாக்கும் அளவுக்கு அவர்கள் துணிந்திருக்க மாட்டார்கள்.
இலங்கையின் சட்டமும் நீதியும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி வருவதுடன் அராஜகம் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பதையே இவ்வாறான நிகழ்வுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.