Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலாநிதி ந. இரவீந்திரனின் ‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்’ நூல் பற்றிய கருத்தாடல்கள் :லெனின் மதிவானம்

கலாநிதி ந.இரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்ட இந்துத்துவம், இந்துசமயம், சமூகமாற்றங்கள் என்ற நூல் தொடர்பாக நான்கு தடவைகள் நாம் கூடிக் கருத்தாடியுள்ளோம். இந்தக் கருத்தாடலின் பிரதான நோக்காகக் கொண்டிருந்த அம்சங்கள் மேல்வருமாறு,

 காத்திரமான இப்படைப்பின் குறை நிறைகளை அல்லது புதிய விளக்கம் என்பவற்றைக் குழு நிலைக் கலந்துரையாடல் மூலம் பெற்றுக்கொள்ளல்.

 சமூக மாற்றத்திற்கான உந்து விசையாகவோ அல்லது சமூகப்பயன் மிக்கதாகவோ நூல் அமைந்திருக்கும் பட்சத்தில் மக்கள் நுகர்விற்கு வழி சமைப்பது.

 படைப்பின் புதிய சிந்தனை வீச்சை செயற்களத்தில் நடைமுறையாக்கல்.

 பயனுள்ள வௌ;வேறு நூல்கள், கட்டுரைகள் கருத்தாடப்பட்டு சமூகம் பயன்பெற முன்னெடுப்பது.

இந்துத்துவம், இந்துசமயம், சமூகமாற்றங்கள் என்ற இப்படைப்பின் எடுத்துரைப்பை நோக்குகின்ற போது அவதானிக்கப்பட்ட பிரதானமான அம்சங்கள் மேல்வருமாறு,

 மரபுகளில் சரியானவற்றை உள்வாங்கலும் தவறானவற்றை நிராகரித்தலும்.

 மதங்களையும் மக்களையும் மார்க்சிஸ அணுகுமுறையில் கையாள முனைதல்.

 பக்திஇயக்க முன்னோடிகள் தொடர்பான மதிப்பீட்டின் மூலம் பண்பாட்டுத் தளத்தில் அதிகாரத் துவத்துக்கு எதிரான கலாசாரப் புரட்சியும் அதனோடு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும் இனங்காணல்.

 இந்துத்துவம் இந்துசமயம் இவற்றை வௌ;வேறாக அடையாளப்படுத்தல்.

 தலித்தியப் போராட்டம் குறித்து மறு மதிப்பீடு செய்தல்.

 ஐக்கியமும் போராட்டமும் சமூக விடுதலைக்கு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தல்.

 பாரதியின்; யதார்த்தச் செயற்பாட்டு அம்சங்களை முதன்மையாக்குதல்.

 பன்முகமான சிந்தனைப் பரிமாணத்தையும் விவாதக் களத்தையும் உருவாக்கிவைத்தல்.

இந்தக்கருத்தாடல் பல வகையில் நூலின் உள்ளடக்கப் பொருளைக் கண்டறியச் சிறந்த முயற்சியாக அமைந்தது. இருப்பினும் இப்படைப்புத் தொடர்பான எதிர் நிலை விமர்சனங்களும் எழுந்தன. அவற்றை நோக்குகின்ற போது,

 இதுவொரு இந்துசமயம்சார் நூலா? இந்துசமயம்சார் கருத்துக்களை சிறப்பித்துக் கூற முற்படுகின்றதா? ஆன்மீகத்தையும் மார்க்சிஸத்தையும் இணைக்கும் பாலமாக அமைகின்றதா?

 தலித்விடுதலைப் போராட்டத்திற்கும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கும் இடையே சமரசம்செய்ய எத்தனிக்கின்றதா?

 சமகால ஈழத்துச் சூழலுக்குப் பயனுள்ளதாக அமைகின்றதா?

 மார்ச்சிஸக் கோட்பாட்டு வரைமுறைகள் மீறப்பட்டுள்ளதா?

 சமுதாய மாற்றச் சிந்தனைப் போக்கிற்கு சமய நெறிமுறைகள் வழிகாட்டுமா?

கருத்தாடல் குழு நண்பர் ஒருவரது உணர்வோட்டம் இங்கே இவ்வாறு அமைகின்றது. இந்நூலை இளயத் தலைமுறை அவதானமாகவும், ஆழமாகவும் உள்வாங்குதல் நல்ல முயற்சியாகும். ஏனெனில் இதன் பின்புலம் அடிநிலை மக்களையும், உழைக்கும் மக்களையும் தலித் பிரிவினரையும், ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தையும் முன்னிறுத்தி ஏகபோக எதிர் நிலைகளை எதிர்ச்;சக்திகளை மோதி, புதிய சமூகக் கட்டமைப்பை நிர்மாணம் செய்யும் ஆவல் நூலெங்கும் இழையோடி விரிகின்றது. படைப்புத் தருகின்ற கவனிப்புக்குரிய பிரதான அம்சங்கள்:

 சமூக யதார்த்த நிலையைப் புறநிலையில் நின்று படம்பிடிக்க எண்ணுகின்றது.

 இந்துசமயம் தொடர்ந்தும் பலம்வாய்ந்த சமூகப் பின்புலத்தைக்கொண்டு இருப்புக் கொள்கின்றது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காண்பிக்கின்றது.

 மார்க்சிஸம் சமூகச் சூழலுக்கு ஏற்பத் தனது, இயக்கச் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை இங்குண்டு பண்ணுகின்றது.

 பரந்துபட்ட வெகுசன விடிவிற்கு ஐக்கியமும் போராட்டமும் அவசியக் கூறாக வலுத்து நிற்பதைத் தெரிவிக்கின்றது.

இந்த உண்மைதான் எம்மை படைப்பின் சார்பில் நின்று பேசவோ எழுதவோ வைக்கின்றது. பன்முகமான திசைகளில் நின்று தற்போது இந்நூல் பேசப்பட்டு வருகின்றது. கருத்தரங்கை ஏற்பாடு செய்து, இன்னும் விரிவாகப் பேசும் ஆவல்கொண்டு அறைகூவுகின்றோம்.

படைப்பாளியின் கையிலிருந்து விலகியதன்பின் படைப்புக்குச் சொந்தக்காரர்கள் சமூகம்.

இதுவரையான வாசிப்பை விட இனியுள் வாங்கப்படும் வாசிப்பையே அர்த்தபுஷ்டியுள்ளதாகக் கருதுகின்றோம்.

இதுவரை கருத்தாடப்பட்டவற்றை விட இனியெழும் கருத்தாடல்களையே வலிமையாகப் பார்க்கின்றோம்.

கலாநிதி ந.இரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்ட இந்துத்துவம், இந்துசமயம், சமூகமாற்றங்கள் என்ற நூல் ஒன்பது இயல்களைக் கொண்டது. இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்ட காலம்முதல் இந்தியச் சமூகத்தின் சமூக அசைவியக்கத்தினை, வரலாற்றுப் பொருள் வாதக் கண்ணோட்டத்தில் ஆய்யவுக்குட ;படுத்துகின்றார். எனவே இதன் ஆய்வுக்களம் பரந்துவிரிந்த பரப்பினையும் சிக்கலான இயங்கு விசையினையும் கொண்டு, இன்றுவரை எல்லோராலும் புரிதலுக்குத் தடையாக இருப்பதால் நூலின் ஒன்பது இயல்களும் பேசும் உள்ளடக்கத்தினையும், கருத்தாடலுக்கு உட்படுத்தும் விடயங்களையும் முடிந்தளவு சுருக்கித் தருகின்றோம். இவற்றினை வாசித்துப் புதிய கருத்தாடலுக்குத் தயாராக வருவதற்காகவே, இக்கையேடு தயாரிக்கப்பட்டது என்பதை மனங்கொண்டு, தொடர்ந்து வாசிக்கும்படி வேண்டுகின்றோம்.

நன்றி.
கருத்தாடற் குழு.

இந்தியச் சமூக அமைப்புக்கள் கருத்தியல் செல்நெறி ஷகாலப்பரப்பு

1.சிந்துவெளிப்பண்பாடு

கி.மு.6000
கிராம உருவாக்கம் – வேளாண்மைச் சமூகம்
கி.மு. 3000 (எழுச்சி) – கி.மு. 1500 (வீழ்ச்சி)
நகர் நிர்மாணம்
சமூக சக்திகள்:

இனக்குழுக்கள், விவசாயி வர்க்கம், வணிகவர்க்கம், கைவினைஞர்கள், பூசகர், நிர்வாகஸ்தர்.
கருத்தியல்: வர்க்க முறைமை – ஆகம மரபு

2. சிந்துவெளி – இருக்குவேதம் கலப்புப் பண்பாடு

கி.மு.1500 – கி.பி. 250 (வட இந்தியா) பிராமண மதமும் எதிர்ப்பு மதங்களும் நிலவிய காலம் சமூக சக்திகள்: அரசர்கள், பிராமணர்கள் (சிந்துவெளிப் பூசகர், இருக்குவேதப் பிராமணர் ஆகியோரது கலப்பு) விவசாய வர்க்கம் (கோத்திரம்), பணியா (வைசியர்), கைவினைஞர்கள், நிர்வாகஸ்தர்கள், சாதிகள், இனக்குழுக்கள் கி.மு. 500 – கி.பி. 300 (தமிழகம்)

– இயற்கை வழிபாடு பிராமண – எதிர்மதங்களின் பிரவேச காலம் அரசர்கள், முடிவேந்தர்கள், கிழார்கள், வணிகவர்க்கம், கைவினைஞர், மதப்பிசாரகர்கள், பூசகர்கள், கூத்தர் விறலியர், இனக்குழுக்கள்

கருத்தியல்:
நிலக்கிழார்களினதாகப் பிராமண மதமும், வணிகவர்க்கச் சாதிகளினதாக ஆசீவகம்,சமணம், பௌத்தம் போன்ற மதங்கள்.

3. நிலப்பிரபுத்துவக் கட்டம்

கி.பி. 250 – கி.பி. 1300 பிராமண மதம் – புதிய இனக்குழுக்கள் கலப்பின் பரிணமிப்பிலான இந்துமத தோற்றமும் வளர்ச்சியும். சமூக சக்திகள்: பேரரசர்கள், நிலவுடைமையாளர்கள் (பிராமணர் உயர்சாதியினர்) வணிகச் சாதிகள், விவசாயிகள் (சூத்திரர்கள்), கைவினைஞர்கள், ஏனைய சாதிகள், பழங்குடியினர்.

(கி;பி; 250 – கி.பி. 500 வரையான காலம் தமிழகத்தில் வணிகவர்க்கச் சாதியினர் ஆதிக்கம் சமண – பௌத்த எழுச்சிக்காலமாக அமைந்திருந்தது.)

கி.பி. 1300 – கி.பி 1800 நிலப்பிரபுத்துவ உச்சமும் சிதைவும் (இஸ்லாமியத் தாக்குறவு உடன் நிகழ்வாக இருந்தது.) பேரரசர்கள், நிலப்பிரபுக்கள் (பிராமணர் உயர்சாதியினர் முஸ்லிம் நிலவுடைமையாளர்) வணிக சாதிகள், சூத்திரர், கைவினைச்சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடிகள்.

கருத்தியல்:
இந்துமதம், இஸ்லாம், சீக்கிய மதம், (பிற்காலத்தில்) கிறிஸ்தவம், கருத்தியல் வயப்பட்ட படைத்துக் காத்து அழிக்கும் ஒரு கடவுள் அல்லது இந்துமதம் வெளிப்படுத்தும் பரம்பொருள் நிலப்பிரபுத்துவக்காலச் சிந்தனை முறைமையின் வெளிப்பாடாக. பகவத்கீதை, மனுதர்ம சாத்திரம், பிரம்மவாதங்கள், சைவசித்திதாந்தம்)

4. காலனித்துவ – பின் காலனித்துவக் காலம்

கி.பி. 1800 – இன்றுவரை சமூக சக்திகள்: நிலப்பிரபுக்கள், முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கம், மத்தியதரவர்க்கம், தலித்மக்கள், இடைச் சாதிகள், பழங்குடிகள்.

கருத்தியல் :-

சுத்தசமரச சன்மார்க்கம், ஆரியசமாஜம், பிரம்மசமாஜம்,விவேகானந்தரின் இந்துவிடுதலைநெறி.
சூபியிஸம், கிறிஸதவம், இஸ்லாமிய விடுதலை இறையியல். பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற எதிர்ப்பண்பாட்டியம் புதிய பண்பாட்டியமான பாரதியம் மார்க்சியம் மற்றும் பிந்திய மேலைத்தேசச் சிந்தனைகள்.

முதலாவது இயல் :- (வேற்றுமைகளில் ஒற்றுமை)

உள்ளடக்கம் :-

அதிகாரத்துவத்துக்கு எதிரான போர்க்குணம் படைத்த இந்து நெறியைப் புரிந்து கொள்ளவும், இனக்குழுக் குல வாழ்முறை தகர்க்கப்படாமல் சாதியாக மாற்றப்பட்ட அடிப்படையை விளங்கவும், இந்துசமயத் தோற்றுவாயின் ஊற்று மூலங்களை ஆராய்தல் அவசியம். அத்தகைய மூன்று ஊற்றுக்களை இனம்காண முடியும்.

 சிந்துவெளிப் பண்பாடு
 இருக்கு வேதம்
 புதிய இனக்குழுக்கள்

இதில் மூன்றாவது சக்தியாக விளங்கியதில், தமிழகம் வகித்த பங்குப் பாத்திரம் முக்கியத்துவம் உடையது. அவற்றின் இரண்டு கட்டங்களாவன,

 தமிழகத்தின் பக்திப்பேரியக்கம்
 சைவசித்தாந்த தத்துவ நெறி

இவற்றின் மூலம் இந்துசமயம் புதிய வளர்ச்சிக் கட்டத்தை எய்தியது. இந்த இயக்கப் போக்குகளில் அதிகாரத்துக்கு எதிரான போர்க்குணம் காணப் படுவதை அவதானிக்க முடியும்.

விவாதிக்கப்படும் விடயங்கள் :

 சிந்துவெளிப் பண்பாடு பரந்தபிரதேசத்தில் நிலவியது. அது வர்க்க ஏற்றத்தாழ்வுக்கான சமூக முறைமையை உடையது. அதற்கு அமைவான கடவுட்கோட்பாடும் உடையதாக இருந்தது.

 பல்வேறு காரணங்களினால் சிந்துவெளிப் பண்பாடு வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வெளியே இருந்துவந்த பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட ஆரியர்களின் வருகை அமைந்தது. அந்த இனக்குழுக்கள் வர்க்க ஏற்றத்தாழ்வைப் பெறாத சமத்துவ குணாம்சங்களை உடையன. அதற்கமைவான இயற்கை வழிபாட்டு முறை அவர்களிடம் காணப்பட்டன. இயற்கையிடம் இருந்து தமக்கானவற்றைப் பெறும் வேண்டுதல்கள் சார்ந்த பாடல்கள் இருக்குவேத இலக்கியமாக அவர்களிடம் வடிவம் பெற்றன. அவற்றை மந்திரங்களாக உச்சாடனம் செய்து, பெரும் வேள்விகளை நிகழ்த்துவது அவர்களது வழிபாட்டு முறையாக இருந்தது.
 சிந்துவெளிப் பண்பாட்டின் வர்க்ககுணாம்சம் உள்ள கடவுளுக்கான கோயில், தலம், தீர்த்தம், லிங்கவழிபாடு என்பவற்றோடு முரண்பட்ட இருக்குவேதப் பண்பாடு, காலப் போக்கில் மாற்றங்களைத் தழுவிக்கொண்டது. அந்தப் பூசகர்களும் வேதப்பிராமணர்களும் இணைந்து உருவாக்கிய புதிய பிராமண மதம் வேதப் பண்பாட்டிலிருந்து, பல மாற்றங்களைப் பெற்றிருந்தது.

 வர்க்க சமூக உடைவின் அதிர்வை உள்ளேதக்க வைத்துக்கொண்டு, மேல் வர்ணங்களில் வர்க்கப் பண்பாட்டை மிகையாக உள்வாங்கியபடியே, இனக்குழுமுறையை வர்ணக் கோட்பாட்டினூடாகச் சாதிகளாக வடிவமைத்த, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்துசமயம் குப்தர் காலத்துக்குரியது.

கி.மு. 6–5ஆம் நூற்றாண்டுகளில் சமண – பௌத்த எழுச்சியால் பிராமண மதம் ஏறத்தாழ அழிவு நிலைக்கு உள்ளாகியது. சமண – பௌத்தம் வணிகவர்க்க ஆட்சிநிலவிய காலத்துக்குரிய மதக்கருத்தியல்கள். கி.பி 4ஆம் நூற்றாண்டில் விவசாயவர்க்க எழுச்சிக்கு அமைவாகப் பிராமண மதம் எனைய இனக்குழுக்களின் சமயங்களோடு இணைந்து இந்துசமயம் எனும் புதிய பரிணமிப்பைப் பெற்றது.

 கி.பி 5–6ஆம் நூற்றாண்டுகளில் பக்திப்பேரியக்கத்தின் ஊடாக இந்துசமயம் தமிழகத்தில் புதிய வளர்ச்சிக் கட்டத்தை எட்டியது. அதற்கான தத்துவார்த்த வடிவத்தை தமிழகம் சைவசித்தாந்தமாக கி.பி 13ஆம் நூற்றாண்டில் வெளிப்படுத்தியது.

இரண்டாவது இயல் :- ( சாதிகளின் மதம் )

உள்ளடக்கம் :-

 ஆளும் வர்க்கக் கருத்தியல் சார்ந்த பெரு மரபுக்கு மாறாக நாட்டார் வழிபாடு மக்களிடம் கொண்டுள்ள வலுவான பிடிப்பினை விளக்குவது.

 இனக்குழு முறைமையும் பண்பாடும் அழிக்கப்படாமல் சாதிகளாக்கபட்டு, வர்க்கபேத முறைமைக்கு அனுசரணையாக்கப்பட்ட சமயம்.

 சாதிகளின் சமயங்கள் அனைத்தின் தொகுப்புமாக இந்துசமயம் விளங்க முடிகிறது.

விவாதிக்கப்படும் விடயங்கள் :

 இந்துசமயம் என்பது பல கடவுளரை இணைத்துத் தலைமை தாங்கும் பரமாத்மாவைக் கொண்டது. பரமாத்மா – சைவத்தில் சிவன்: வைணவத்தில் – விஷ்ணு : சாக்தத்தில் – சக்தி.

 நாட்டார் தெய்வங்கள் என்பவை இந்துசமயத்தின் பரம்பொருட் கோட்பாட்டுக்கும், அதன் அதிகாரத்துவ வடிவத்திற்கும் மாறாகப் பரந்துபட்ட மக்களிடம் வழக்காறாக உள்ளது.

ஒவ்வொரு சாதிகளும் தத்தமக்கான நாட்டார் வழிபாட்டு முறைகளையும் குலதெய்வங்களையும் கொண்டுள்ளன. இவ்வாறு அமையும் சாதிகளின் சமயங்களை இணைத்து வர்க்க சமூகத்துக்கு அமைவான ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக்கொண்டது இந்துசமயம்.

மூன்றாவது இயல் : ( சாதியம் )

உள்ளடக்கம் :-

சாதியம் நிலைபெற ஏதுவான சமூக பொருளாதார உறவு முறைகளான, வர்ணம் – சாதி சாதி – வர்க்கம் : இவற்றினிடையேயான தொடர்புகள். எதிர்ப்பு இயக்கம் பற்றியதும் – இரட்டைத் தேசியம் பற்றியதுமான வரலாற்று அடிப்படையை இனங்காணல்.

விவாதிக்கப்படும் விடயங்கள் :

 ஆரியர்கள் இந்தியாவினுள் பிரவேசிக்கும் போது ஒரு இனக்குழுவுக்கு உள்ளேயே பிராமணர், சத்திரி;யர், வைசியர் என்ற வர்ண வேறுபாடுகள் நிலவுவதாக வர்ணக் கருத்தியல் இருந்தது. இந்த வர்ணங்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தது இல்லை. ஒருவர் ஒருவர்ணத்திலிருந்து மாறுவதற்குத் தடையும் இருந்தது இல்லை. ஒரே குடும்பத்தில் மூன்று வர்ணத்தவர்களும் இருக்கக் கூடியவகையில் இந்தவர்ணக்கருத்தியல் நெகிழ்வுடையதாயிருந்தது.

 சிந்துவெளிப் பண்பாட்டுக்குரிய பூசகர்களும் ஆரியப் பிராமணர்களும் இணைந்த பண்பாட்டுக் கலப்புக்குப் பின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புக்கான பிராமணியம் வர்ணக்கருத்தியலைச் சாதியமாக வளர்த்தெடுத்தது.

 குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரு சாதிக்கு உரியவராவர். ஒரு சாதியிற் பிறந்த ஒருவர் இறக்கும்வரை அதே சாதி அடையாளத்தைக் கொண்டவராகவே இருப்பார். சாதியொன்று ஒட்டுமொத்தமாகத் தமது வர்ணத் தளத்தினை மாற்றக்கூடியதாக இருக்கலாம், சாதியொன்றில் உள்ளவர் தமது சாதியை மாற்றமுடியாது என்ற வகையில் சாதியம் இறுக்கமாகக் கட்டமைக்கப் பட்டது.

 முன்னேறிய இனக்குழுக்கள் தம்மை உயர் சாதியாகக் கட்டமைத்து, வென்றடக்கப்பட்ட இனக்குழுக்களை ஒடுக்கப்பட்ட சாதிகளாக கட்டமைப்பதற்குச் சாதியம் வழியமைத்துக் கொடுத்தது. இத்தகைய ஆளும் மற்றும் ஒடுக்கப்படும் வர்க்க இருப்பில் சாதிகள் கட்டமைக்கப்படுவது, நிலவுடமைச் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமுடையதாக இருந்தது. குறித்த பிரதேசம் ஒன்றில் நிலவுடைமை ஆதிக்கத்தைப்பெற்ற ஆதிக்க சாதியுடன் இந்தியா முழுமையிலும் பிராமணர் கூட்டுச்சேர்ந்து நிலவுடைமையாளர்களானதுடன் ஆன்மீகத் தலைமையையும் கையேற்றுக்கொண்டனர்.

நான்காவது இயல் : ( பெண் )

உள்ளடக்கம் :

பெண் ஒடுக்குமுறைக்கு சமூக பொருளாதாரக் காரணிகளாயினும் மதம் ஊடாக வெளிப்படுவது தனிவகை ஆய்வுக்குரியது. இயற்கையின் பிரதியாகப் படைப்பாற்றல் கொண்டவள் பெண், மந்திரசக்தி வாய்ந்தவள் அவ்வகையில் படைப்புக்கடவுள் பெண் என்றிருந்த நிலை எப்படி ஆணாதிக்க சமூகத்தில் ஆண் தெய்வங்களிடம் கையளிக்கப்பட்டன? இம்மாற்றங்கள் செய்த முன்னோடிகளில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் பற்றிய பார்வை.

விவாதிக்கப்படும் விடயங்கள் :

 தமிழர் வீரயுகத்தின் வழிபாட்டில் கொற்றவை முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. பேய்மகளிர் பூசகர்களாக விளங்கினர். பக்திப் பேரியக்கத் தொடக்குனரான காரைக்காலம்மையார் தன்னைப் பேய்மகளிர் என அடையாளப் படுத்திக்கொண்டு, சிவன் எனும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளாகிய ஒரு கடவுள் வழிபாட்டை மேலோங்கச் செய்தார்.

 பக்திப்பேரியக்கத்தின் ஊடாக அதிகாரத்துவ மதமாகிய சைவம் பின்னர் பெண்களுக்கான சமூகப் பங்களிப்பினை மென்மேலும் மறுதலித்து வந்தது.

ஐந்தாவது இயல் : ( இந்து விடுதலை நெறி )

உள்ளடக்கம் :

நிலவுடமை அமைப்பின் மிகப் பொருத்தமான தத்துவத்தை வழங்கிய இந்துசமயம் தனக்குள் தாக்குறவு செலுத்திய எதனையும் உட்கிரகித்து வெற்றிபெற வலிமை பெற்றிருந்தது. வர்க்கச்சிந்தனையும் இனக்குழுக்குல வர்ணக் கோட்பாடும் இணைந்து உருவாகிய சாதியம் அதிர்ச்சி தாங்கும் உறுப்பாக அமைந்து, இந்து சமயத்தைப் பாதுகாக்க முடிந்தது. ஆயினும் ஆங்கில ஆட்சியால் சற்று அதிர்வுக்குள்ளானது. 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்த இயக்கங்கள், அதிர்வுக்குட்பட்ட இந்துசமயத்தை இசைவுத்தன்மை அடையச் செய்து, இந்துசமயத்துக்கான நவீன வடிவத்தை வழங்கின.

விவாதிக்கப்படும் விடயங்கள் :

 தமிழகத்தில் சித்தர் தத்துவ சமத்துவ நெறிப் பரிணமிப்பாக வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்கம் 19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது.

 மேற்கு இந்தியாவில் (குஜாரத்) தயானந்த சரஸ்வதியின் வேதக் கோட்பாட்டின் மீட்டுருவாக்கமாக ஆரிய சமாஜம் தோற்றம் பெற்றுத் தேசிய உணர்வை ஊட்டுவதாக அமைந்தது.

 கிழக்கிந்தியாவில் (வங்காளம்) ராஜாராம் மோகன்ராயின் பிரம்மசமாஜம் சாதியம், பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக சமத்துவ உணர்வை ஊட்டியது.

 19ஆம் நூற்றாண்டின் இத்தகைய இயக்கப் போக்குகளின் பரிணமிப்பாகத் தோற்றம் பெற்ற இந்து விடுதலை நெறி, 20ஆம் நூற்றாண்டின் தேசிய எழுச்சிக்கு உந்வேகம் ஊட்டுவதாக அமைந்தது.

 இந்துசமயப் போர்க்குணாம்சம் விவேகானந்தர் ஊடாக இந்துவிடுதலை நெறியாக வளர்த்தெடுக்கப்பட்டது. அவர் ஐரோப்பியப் பயணங்கள் ஊடாக சோஸலிச மாற்றியமைத்தலுக்கான போராட்டத்தின், மனிதகுல முயற்சிகளை அறிந்தவர். அத்தெளிவோடு இந்திய வறுமை ஒழிப்பு, சாதியத் தகர்ப்பு, பெண்விடுதலை போன்ற மனுக்குல விடுதலைக்கான மார்க்கத்துக்கு ஏற்புடையதாக, இந்துசமயக் கருத்தியலை பிரயோகிக்கும் அவரது முயற்சியே, இந்துவிடுதலை நெறிக்கான வடிவத்தை வழங்குகின்றது.

ஆறாவது இயல் : ( எதிர்ப்பு இயக்கங்கள் )

உள்ளடக்கம் :-

இந்தியத் தேசியம் ஒன்றுக்கான முயற்சி இறுதியில் பிராமணிய நலன் பேணும் அமைப்பையே கட்டி எழுப்பும், சாதி ஒடுக்குமுறையை மேலும் வலுப்படுத்தும் என்ற புரிதலுடன், இந்து எதிர்ப்பு இயக்கங்கள் இருபதாம் நூற்றாண்டில் எழுச்சியுற்றன.

இந்தியாவின் தெற்கில் (தமிழகத்தில்) பெரியாரின் தலைமையில் திராவிடர் இயக்கமும், வடக்கில் அப்பேத்கர்; தலைமையில் தலித் இயக்கமும் எழுச்சி பெற்றன.

விவாதிக்கப்படும் விடயங்கள் :

 இந்திய சுதந்திரப் போராட்டம் தமிழகத்திலும்; பிராமணியத் தலைமையை உடையதாக வளர்வதை இனம்கண்ட அயோத்திதாஸர், இரட்டைமலை சீனிவாசர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, சாதியத் தகர்ப்புக்கான முன்முயற்சி இயக்கமொன்றைக் கட்டியெழுப்பினர். இதன் தொடற்சியாகப் பெரியாரின் திராவிடரியக்கம் எதிர்த்தேசியத்தைக் கட்டி எழுப்பியது.

 இந்தியத் தேசியம் பிராமணத் தேசியமே என இனங்கண்டு காட்டிய ஜோதிராவ்புலேயின் வழியில் அப்பேத்கர் மகாராஷ்டிரத்தில் தலித் இயக்க வடிவம் வாயிலாக எதிர்த்தேசியம் ஒன்றைக் கட்டி எழுப்பினார்.

 பெரியாரின் பிராமண எதிர்ப்பு அவரை நாத்திக வாதியாக வளர்ச்சியடையச் செய்தது. அப்பேத்கரின் தலித்தியம் பௌத்த மதமாற்றத்திற்கு வழிகோலியது.

 பெரியாரிஸமும், அப்பேத்காரிஸமும் மாக்சியத்துடன் உடன்பட்டும் முரண்பட்டும் இயங்கின.

ஏழாவது இயல் : ( சமயமல்லாத சமயம் )

உள்ளடக்கம் :-
உயர் பண்பாட்டு வரலாற்று வளர்ச்சியூடான விடுதலை மார்க்கம், தலித்விடுதலை என்பன இனியும் ஒன்றை மற்றது நிராகரிக்க முடியாது. இத்தகைய இரட்டைத்தேசிய யதார்த்தத்தை மாற்றியமைத்து மக்கள் விடுதலை மார்க்கத்தில் சகல அதிகாரங்களையும் தகர்ப்பதற்காகப் போராடுவது அவசியமானதாகிறது.

இத்தகைய இரட்டைத் தேசியச் செல்நெறிக்குக் காரணமாயுள்ள இந்துசமயப் பண்பைப் புரிந்து கொள்ளல் அவசியமாகிறது. இந்து சமயம் என்பதே இல்லாத ஒன்று எனும் குரல்மேவி வருகின்றது. இது யதார்த்தத்;தை விலக்கிக் கற்பனையில் மிதந்து பிற்போக்குவாதம் இறுதியில் வலுப்பெற உதவும் கைங்கரியமாகும்.

சமயமே இல்லாமல் இருக்க முடிகிறது இந்துசமயத்தால், பின் அப்பிடியெதுவும் இல்லை எனக் கண்மூடிப் பயன் என்ன? அந்தச் சமயமே அல்லாத சமயம் பெற்றுள்ள விஷேடித்த இயல்புபற்றிப் பேசுகிறது.

விவாதிக்கப்படும் விடயங்கள் :
 இந்துசமயம் ஒருமுகப்பட்ட நிறுவனவடிவம் பெறவில்லை. உயர்வர்க்க கருத்தியலாகப் பரம்பொருளும் சாதிகளின் சமயங்களாக குலதெய்வங்களும் இயங்கும் வாழ்முறை இந்தியச் சமயப் பண்பாக அமைய முடிந்தது. நிறுவனமயப்பட்ட வடிவம் கொள்ளாமல், இவ்வகையில் சமயம் அல்லாத சமயமாகவும் சாதிகளின் சமயமாகவும் இந்துசமயம் விளங்குகின்றது.

 மதம் குறித்த ஐரோப்பியப் பார்வையில் நிறுவனமயப்பட்ட, தீர்க்கதரிசி ஒருவரைக் கொண்டுள்ள, புனித நூலை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவையே சமயங்கள் எனக் கருதப்படும். இத்தகைய பொதுத்தன்மைகள் அற்ற வாழ்முறையை உடைய இந்தியச் சூழலில் இந்துசமயம் சமயமல்லாத சமயமாகத் திகழ்கின்றது.

 அப்பேத்கர் இந்து எதிர்ப்புணர்வாக பௌத்த மதமாற்றத்தைக் கருதினார். அவர் நவபௌத்தத்தைத் தனது கருத்தியலாக வரித்தபோதிலும் நடைமுறையில் பௌத்தம் புத்தரைப் பரம்பொருளாகவும் அவரது ஏவலுக்குட்பட்ட பல கடவுளரையும் கொண்டியங்கும், இந்துசமயத்துக்கான ஒரு வடிவத்திலேயே இன்று காணப்படுகின்றது. அந்தவகையில் அவரது மதமாற்றம் சாதிய தகர்ப்புக் குறிக்கோளை அடையக்கூடியதாக அமையவில்லை.

எட்டாவது இயல் ( இந்துத்துவம் )

உள்ளடக்கம் :
 இந்து விடுதலை நெறியை வழங்கிய இந்துசமயம் இந்துத்துவத்துக்கு வழிவிட்டிருப்பது எப்படி என்பது ஆராயப்படுகின்றது.

 இந்துசமயத்தின் பன்மைத் தன்மையை மறுதலித்து, இராமர் கோவில் விவகாரம் போன்ற ஒற்றைப்படைத் தன்மையதாக மாற்றும் அரசியல் வடிவமே இந்துத்துவம். இந்துத்துவத்தை 1920களில் தொடக்கிவைத்த ஷசாவர்க்கர்| முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு அரசியல் வடிவமே இந்துத்துவம் என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தார். தனக்கு இந்துசமயப்பற்றோ, நம்பிக்கையோ கிடையாதென்பதையும் அவர்கூறி இருந்தார். அந்தவகையில் ஒரு அதிகாரவர்க்க கருத்தியலே அன்றி, ஒரு சமய வடிவம் எவ்வகையிலும் அதற்குரியதல்ல.

விவாதிக்கப்படும் விடயங்கள் :
 வணிக அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக இந்துசமயம் புதிய சமூகமாற்றத்துக்கு உரியதான வடிவத்தை கி.பி. 4ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவிலும் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும் எடுத்திருந்தது. இதனூடாக அதிகாரத்தைப் பெற்ற விவசாய வர்க்கம் 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து நிலப்பிரபுத்துவமாகப் பரிணமித்து, அதிகாரத்தைச் செலுத்தும் போது, அதன் கருத்தியல் வடிவமாகவும் இந்துசமயம் மாற்றம் பெறுகிறது. அந்தவகையில் சமூகமாற்றப் போர்க்குணாம்சக் கருத்தியலைக் கொண்டிருந்த நிலைமாறி ஆதிக்க சக்திகளுக்கான கருத்தியலாக மாற்றம் பெறுகிறது.

 இருபதாம் நூற்றாண்டின் இந்துத்துவம் அடிப்படையில் மதத்தன்மை அற்ற ஒரு அரசியல் வடிவம், அதேவேளை இந்துசமயத்தின் ஆதிக்கப்போக்கு இந்துத்துவத்துக்கு உதவும்தன்மையினதாகவும் அமைகிறது. அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதை விடுத்து சகோதரர்களான முஸ்லீம்களை எதிரிகளாகக்காட்டி, இந்துத்துவம் சுரண்டல் அமைப்பைப் பேணும் செயற்பாட்டை முன்னிறுத்துகிறது.

ஒன்பதாவாவது இயல் :- ( புதிய கலாசார இயக்கமும் சமூகமாற்றங்களும் )

உள்ளடக்கம் :
 இந்து விடுதலை நெறியை மிகவும் முனைப்பாக மக்கள் விடுதலைத் திசைக்குரிய தத்துவமாக்கியவர் பாரதி. இந்துசமயசாரத்தை உள்ளிருந்தே கரைத்தழித்து, அதனுள் உறைந்திருந்த இயங்கியல் – பொருள் முதல்வாதக் கூறை பாரதி வெளிக்கொணர்ந்தார்.

 பாரதியின் அந்த ஆளுமையை ஒத்த தலைமை காங்கிரசில் இருந்திருப்பின், காங்கிரஸ் பிராமணியச் சார்பெடுக்காமல் பெரியாரின், அப்பேத்கரின் எதிர்ப்பியக்கத்தைத் தவிர்த்திருக்கலாம்.

 சுரண்டலுக்குச் சார்பான அதிகாரத்துவம், முஸ்லீம்களுக்கு எதிரான போக்கு என்பவற்றால் மக்கள் சக்தி சிதறடிக்கப்படலாயிற்று. இந்துத்துவத்துக்கு எதிரான இந்துநெறியின் வீச்சான பக்கத்தை வளர்த்தெடுத்து, மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய நாட்டார் வழிபாட்டின் ஏற்புடைய அம்சங்களை உள்ளெடுத்து, பரந்துபட்ட ஐக்கியமுன்னணியை அமைத்தல் பற்றிய கருத்துரைகள்.

விவாதிக்கப்படும் விடயங்கள் :
 பாரதி ஏகாதிபத்திய தகர்ப்பையும், சாதிய ஒழிப்பையும் பண்புகளாகக்கொண்ட தேசியவிடுதலைப் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியவர். இவ்வாறு தேசிய விடுதலையுடன் பண்ணை அடிமைத்தனத்தை ஒழிப்பதாகிய தேசியமாக விளங்கத்தக்க சாதியத் தகர்ப்பையும் ஒரே வேளையில் இலட்சியமாகக் கொள்பவராய் பாரதிபோல் வேறொருவரும் இருக்கவில்லை. இந்தியக்காங்கிரஸ் தமிழகத்திலும் பிராமணர்களது ஆதிக்கத்தோடு, சாதியத் தகர்ப்புக்கான எந்த இயக்கத்தையும் முன்னெடுக்கத் தயாராக இருக்கவில்லை. அந்தவகையில் பிராமணத் தேசியமாக இந்தியத் தேசிய இயக்கம் முடங்கிப்போனது.

 தேசிய காங்கிரசுக்குள் பிராமணர் அல்லாதார் நலனை முன்னிறுத்த முயன்று, தோல்வியடைந்த பெரியார் 1925 இல் வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்பினார். திராவிடர் கழகமாகப் பரிணமித்து, சாதியத்தகர்ப்பு தேசியத்தைத் தனது கருத்தியலாகச் சுயமரியாதை இயக்கம் வரித்துக்கொண்டது. இவ்வகையில் இந்தியத்தேசியம் அதற்கு எதிரான சாதியத் தகர்ப்புத் தேசியம் எனும் இரட்டைத் தேசியம் இந்தியத் தேசிய வரலாற்றுக்குரிய குணாம்சமாகியது.

 இத்தகைய இரட்டைத்தேசியப் பிளவு பாரதியிடம் காணப்படாதது போலவே, மார்க்சியர்களிடமும் மனிதகுல விடுதலைக்கான அம்சங்களாய் அநநியத் தகர்ப்பும், சாதியத் தகர்ப்பும் இணைந்த போராட்ட வடிவங்கள் அவசியப்படுகின்றன. சாதியக்கருத்தியலானது அந்நிய ஊடுருவலுக்கும் தொடர்ந்து களம் அமைத்துக் கொடுக்கின்ற எமது சூழலில், எமக்கான சமூகமாற்றப் போராட்டம் பண்பாட்டுப் புரட்சி வடிவத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

கலாநிதி ந. இரவீந்திரனின்

இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்
என்ற நூல் சமூகமாற்றத்திற்கான தொடக்கப் புள்ளி

கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் நன்கு அறியப்பட்ட விமர்சகர் சமூக பண்பாட்டு ஆய்வாளர் – மற்றும் புனைகதை இலக்கியவாதி. அவரால் எழுதப்பட்ட நூலே ஷஇந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்’ (2003) ஆகும். இந்நூல் வெளிவந்து ஆறு வருடங்களாகின்றன. இந்நூல் பல தளங்களிலிருந்தும் கோணங்களிலிருந்தும் விமர்சனத்திற்குள்ளாகியது. இவ்விமர்சனங்களில் தாக்குதல் முனைப்புக் காணப்பட்ட அளவிற்கு புறநிலைப்பட்ட விமர்சனத்தை முன்வைக்கத் தவறிவிட்டனர். எனவே இந்நூல் குறித்து இதுவரை ஆரோக்கியமான விமர்சனங்கள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறானதோர் சூழலில் முற்போhக்குக் கலை இலக்கியப் பேரவை இந்நூல் குறித்த விமர்சன நிகழ்வொன்றினைக் கடந்த 09.08.2009 (ஞாயிறு) அன்று கொழும்பு தர்மராஜா மாவத்தையில் அமைந்துள்ள பெண்கள் ஆய்வு வட்ட நிறுவன மண்டபத்தில் நடாத்தியது.

இந்நிகழ்விற்கு மூத்த கவிஞர் ஏ.இக்பால் அவர்கள் தலைமை தாங்கினார். விமர்சன உரைகளை இதயராசன், லெனின் மதிவானம், பாபு ஆகியோர் நிகழ்த்தினர். இந்நூலில் இடம்பெற்ற உரைகளின் சாராம்சங்களை வாசகர்களின் நலன் கருதி இங்கொருமுறை குறித்துக்காட்ட வேண்டியது அவசியமானதாகும்.

தலைமையுரையில் கவிஞரல் ஏ. இக்பால் அவர்கள் கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் மார்க்ஸிய கண்ணேட்டத்தின் பல நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் யாவும் சமுதாய மாற்றத்தை வேண்டிநிற்பனவாகவும் காணப்படுகின்றன. உழைக்கும் மக்கள் தம்விடுதலை அடைவதற்கு ஏற்ற தத்துவமாக மார்ஸிஸத்தை காணுகின்றார். அதன் ஒளியிலேதான் தமது ஆய்வுகளை முன்வைத்து வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் அவரால் எழுதப்பட்ட ஏனைய நூல்களைவிட இந்நூல் கடினமான வசன நடையைக் கொண்டிருப்பதாகக் கருதுகின்றேன். எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மறுப்பதிப்புகளில் இதனை எளிமையாக்கித் தரவேண்டியது ஆசிரியரின் கடைமையாகும்..

கவிஞர் இதயராசன் தமதுரையில்,

இந்நூலாசிரியர் மார்க்ஸிய செயற்பாட்டாளராகவும் விமர்சகராகவும் இருந்துகொண்டே இந்துசமய கற்கை நெறியினை மேற்கொண்டவர் என்றவகையில் இந்துசமயத்தில் அகவயமாகி அதன் தத்துவம், அற்புதம், பக்தி என மூழ்கிவிடாமல், புறவயமாக நின்று வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணேட்டத்தில் இந்துசமயத்தினைப் பார்த்ததன் எதிர்விளைவே இந்நூல் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். மேலும் இந்நூல் இந்தசம பாடபோதனையாக எழுதப்படவில்லை. அதே சமயம் அப்படி நினைத்துப் படித்தால் அவர்களுக்குக் கிடைப்பது வெறும் ஏமாற்றமே.அனைத்துவிதமான அடிமைத்தனங்களிற்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடத் துடிக்கும் உள்ளங்களின் தேடலினை விரிவுபடுத்தவும் எமது பண்பாட்டுத் தளத்தின் ஆணிவேரிலிருந்து அனைத்து அம்சங்களையும் சமூக அசைவியக்கத்திற்கு ஊடாகவும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்துசமயம் எனும் பெருவிருட்சத்;தை விளங்கிக் கொள்ளவும் அதன் கேடான அம்சங்களை விலக்கி, புதிய பண்பாட்டுத் தளத்தில் மக்களை அணிதிரட்டி புத்தெழிச்சி பெறவும் முடியும் எனலாம்.

இன்றைய சமூகவமைப்பில் குறிப்பாக இலங்கை, இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையால் மக்கள் பிளவுபட்டு, ஒரு குழுவுக்கு நடக்கும் அநீதியை மற்றைய குழுக்கள் வேடிக்கை பார்ப்பதும்: பண்பாடு, கலாசாரம் என்ற பேரால் மூடப்பழக்க வழக்கங்கள் சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு அடிமையாகி தமது உழைப்பினையும் சிந்தையையும் அடகுவைத்து, அல்லற்படும் வாழ்முறையிருந்து உண்மையான விடுதலைக்கான முன்முயற்சியில் ஈடுபடுவதற்கு இந்துசமயம் கொண்டிருக்கும் வேரினையும் வேரடி மண்ணினையும் பற்றிய ஆழ அகலமான வாசிப்பும் புரிதலும் அவசியம். அதற்கான அடித்தளத்தை இந்நூல் வழங்குகின்றது.

திரு. லெனின் மதிவானம் தமதுரையில்,

சமுதாய கட்டமைப்பின் மீதும் சமூகவுறவுகளின் மீதும் மதம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை அடக்கியாள்வதிலும் மக்களின் எழுச்சியைத்தடுத்து மறுபிறப்பு சுவர்க்கலோகம் போன்ற மாயைகளின் ஊடாக மக்களை மயக்கும் சக்தியாக மதம் இருந்தமையினால் மதத்தை அபினி என விளக்கியுள்ளார். அந்தவகையில் மதம் என்ற சிறைச்சாலையிலிருந்து மனிதனை விடுதலை செய்தவர் மார்க்ஸ்.

இத்தகைய பின்னணியில் பிறப்பெடுத்த மார்க்ஸிஸம் அதன் விஞ்ஞானபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்ததே தவிர மனித குல வரலாற்றின் எதிர்காலம் குறித்து சோதிடம் கூறியதாக மார்க்ஸிஸம் அமைந்து காணப்படவில்லை. அது காலத்திற்குக் காலம் அவ்வவ் சூழலுக்கு ஏற்றவகையில் விருத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. அதன் வளர்ச்சியான லெனியம், மாஓவியம், ஸ்டாலினிஸம் ஆகிய கோட்பாடுகளைக் கூறலாம். அந்தவகையில் மார்க்ஸ் மதம் குறித்துக் கூறிய கருத்துக்கள் அதன் ஒரு பக்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவே அமைந்திருந்தது.

மார்க்ஸிக்குப் பிற்பட்ட காலங்களில் பண்பாடு குறித்த சவால்களை மார்க்ஸிஸர்கள் எதிர் நோக்கக் கூடியவர்களாக இருந்தனர். பண்பாடு குறித்த மார்க்ஸிஸப் பார்வை இதுவரை இருந்துவந்த மரபுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் அதனை முற்றாக நிராகரிக்கவும் இல்லை. கடந்த கால பண்பாட்டில் காணப்பட்ட போர்க்குணமிக் உள்ளடக்கங்களை நிகழ்காலத்திய சமூகமாற்ற ஜனநாயக போராட்டங்களுக்கு ஏற்றவகையில் ஒழுங்கமைத்துக் கொண்டனர். அவ்வகையில் மரபு, பண்பாடு என்பவற்றினை ஏற்றுக் கொள்கின்ற போது அதனை பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க வேண்டும் என்பதை மார்க்ஸியர்கள் எப்போதும் வலியுறுத்திவந்துள்ளனர். 1960களில் இலங்கையில் எழுந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் இந்தப் பின்னணியிலே எழுந்தாகும். இதன் முக்கிய அம்சங்களாகக் காணப்பட்ட ஆலயப்பிரவேச போராட்டமானது அதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. இதன் பின்னணியில் எழுந்த கந்தன் கருணை என்ற நாடகமும் இத்தகைய பண்பாட்டு கலாசார தளத்தினையே கொண்டதாக அமைந்திருந்தது எனலாம்.

இந்நூலில் சாதியம், பெண் அடக்குமுறை என்பன குறித்து நோக்குகின்றார். இவற்றுக்கான சமூக பொருளாதார பின்னணியைச் சுட்டிக் காட்டிய கட்டுரையில் இவற்றுக்கு எதிரான கலகக் குரல்கள் என்பது இந்துசமயத்தினுள் வளர்ந்து வந்துள்ளன என்பது குறித்த சிந்தனை போர்க்குணம் சமூகமாற்றப் போராட்டத்திற்கு ஏற்றவகையில் உதவும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தத் தவறவில்லை. யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலில் இந்துமதம் எவ்வாறு இந்துத்துவமாக, இந்து பாஸிஸமாக வளர்த்தெடுக்கப்பட்டு முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தவர்க்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான வன்முறையாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளவற்றினையும் இன்னூல் வெளிக்கொணர்கிறது. இதுகுறித்து மேலும் ஆய்வுகளைச் செய்யவேண்டியது அவசியமானதாகும்.

இன்னூலாசிரியர் கூறுகின்ற இரட்டைத் தேசியவாதம் குறித்த பார்வை முக்கியமானது. இந்திய வரலாற்றில் காங்கிரஸில் பிராமணர்கள் அதிகமாக பிரதிநிதித்துவப் படுத்தியதால் அவர்களின் சிந்தனை அதிகமாக இவ்வியக்கத்தில் காணப்பட்டது. அதே சமயம் இவர்களின் செயற்பாட்டில் பிரித்தானியர் எதிர்ப்புக் காணப்பட்டமை முக்கியமானதோர் அம்சமாகும். மாறாக பிராமணியத் தலைமையை நிராகரித்த பெரியார் மற்றும் தாஸன் முதலானோர் பிராமணிய எதிர்ப்புக் கொண்டிருந்த அதேசமயம் வெள்ளையர் சமரசம் செய்து கொள்கின்றவர்களாகக் காணப்பட்டனர். இவ்விரு அடக்கு முறைக்கு எதிரான போர்க்குணம் கவனத்திலெடுத்தல் காலத்தின் தேவையாகும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் அறுபதுகளில் சாதிய தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் முனைப்புப்பெற்றிருந்ததைப் போல எழுபதுகளில் இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் முனைப்புக் கொண்டிருந்தது. இது தொடர்பாக இடதுசாரிகள் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தவறிவிட்டனர். அதே சமயம் இப்போர்க்குணத்தை முற்று முழுதாக இனவாதத்தில் அழுத்திச் சென்றதுடன், இன்று தமிழ் மக்களின் போராட்டத்தைப் படுதோல்வி காணச்செய்ததில் தமிழ் முதலாளித்துவ சக்திகளிற்கு முழு பொறுப்பும் உள்ளது. இன்று தமிழர் மத்தியில் சாதிகள் என்பது மறந்துவிட்டது என்பதோ அல்லது தமிழரின் சகல உரிமைகளும் பெற்றுச் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவதோ அபத்தமாகும். இந்நிலையில் இவ்வொடுக்கு முறைக்கெதிரான சிந்தனையும் ஒன்றிணைக்கப்பட்டு இரட்டைத்தேசியவாத இலங்கையில் சமூகமாற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்ற வகையில் இந்நூல் புத்தகவாத சிந்தனைகளுக்கு அப்பால் கோட்பாடும் நடைமுறையையும் இணைந்த சிந்தனையை முன்வைக்கின்றது.

திரு.பாபு அவர்கள் தமது உரையில்

இந்துசமயம் பற்றி வௌ;வேறு கோணங்களிலிருந்து ஆய்வுசெய்ய முனைகின்றது இன்னூல். ஒன்று இந்துசமயம் பற்றியும் மற்றொன்று இந்துசமயத்திலிருந்து ஊற்றெடுத்த இந்துத்துவப் பாஸிஸவாதம் பற்றியும் கூறுகின்றது. இந்துசமயத்தில் உள்ள பிற்போக்குத் தனங்களையும் இறுக்கமான மரபுகளையும் இவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.

இந்துசமயத்தின் பிற்பட்டகால விடுதலை நெறியாகப் பக்தி இயக்கம் காணப்படுவதை இனங்கண்டு விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இந்துசமயத்தில் காணப்பட்ட பிற்போக்கு அம்சங்கள் இந்துவிடுதலை நெறியாக வளர்ச்சியடைகிறது. இந்தவகையிலே நூலாசிரியர் இந்துசமயத்தின் பண்புகளை எடுத்து விளக்குகிறார்.

ஆங்கிலேயருடைய வருகை இந்துசமயத்தினை ஆட்டம்காண வைத்தது. இக்கால கட்டத்தில் இத்தகைய அதிகாரப்போக்குகயை எதிர்த்து தமது பண்பாட்டை உறுதிசெய்யும் வகையில் இந்துசமய சீர்திருத்த இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இவ்வமைப்புக்கள் 19ஆம் நூற்றாண்டு களுக்குப்பின் தேசிய எழுச்சியையும் அரசியல் விழிப்பினையும் ஏற்படுத்தியது. இவ்வகையான இயக்கங்கள் சமூக சீர்திருத்தங்களையும் சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளையும் செய்துவந்தன. இத்தகையதளத்தில் சித்தர்களின் கலகக்குரல் வள்ளலார்வாயிலாகத் தமிழ்நாட்டில் சன்மார்க்க தர்மமாக வெளிப்பட்டது. இந்துமதத்தின் அடக்குமுறைகளுக்கும் பிற்போக்குத் தனங்களிற்கும் எதிராகக் குரல்கொடுத்த சித்தர்மரபின் தொடர்ச்சியே பாரதியாகும். இதை நூலாசிரியர் சிறப்பாக அடையாளம் காட்டியுள்ளார்.

இத்தகைய பின்னணியில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டங்கள் எழுச்சி பெற்றன. இக்காலகட்டத்தில விடுதலைபற்றிய கருத்தியலில் நான்குவிதமான போக்குகள் காணப்பட்டன. ஒன்று சமூகவிடுதலையும் தேசவிடுதலையும் இணைந்த போக்கு. இரண்டாவது தேசவிடுதலையை மாத்திரம் முனைப்பாக்கம் கொண்ட போக்கு. மூன்றாவது பழமைக்கருத்துக்களையும் கற்பனாவாதச் சோஸலீசக் கருத்துக்களையும் கொண்டது. நான்காவது வெறும் ஆங்கில அதிகாரத்தைத் தம்மிடம் மாற்றுவததகவும் காணப்படுகின்றன. இதில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் தோற்றம்பெற்றது. பார்ப்பனிணம் தகர்க்கப்படாமல் பொதுவுடைமை சாத்தியப்படாமற் போனது. அவ்விதமே அம்பேத்கரின் மதமாற்றச் சிந்தனையும் இந்துமதத்தைக் குறிவைத்துத் தாக்கியது.

பெரியார் சாதியம் பார்ப்பனியம் வர்க்கம் அனைத்தும் இந்துசமயத்தின் ஊடாகவே தோன்றிவையாகும் என இனங்காண்பதாலும் பெரியார் இந்துசமயத்ததைத் தகர்ப்பதன் மூலமாகவே விடுதலை அடையலாம் எனக் கூறுகின்றார். பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தை முதன்மைப் படுத்தினார் என்பதாகப் பொதுவுடமைச் சிந்தனையை கைவிட்டாரா என்ற விடயம் கேள்விக்குரியது. பெரியாரிஸம்; என்ற சிந்தனையை உருவாக்குகின்ற அளவில் அவரது சிந்தனை வளர்ச்சி பெற்றிந்தது. தலித்மக்களின் அச்ச உணர்வை தகர்ப்பதையும் அதேசமயம் அடக்கி யொடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கவும் பெரியார் முயற்சித்தார். ஆனால் பெரியாரைக் கடந்து இந்துத்துவத்தின் வளர்ச்சி அமைந்தது. ஆனால்இத்தகைய பின்னணியில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டங்கள் எழுச்சி பெற்றன. இக்காலகட்டத்தில் விடுதலைக்குரிய கருத்தியலில் நான்கு விதமான போக்குகள் காணப்பட்டன. ஒன்று சமூக விடுதலையும் இணைந்த போக்கு, இரண்டாவது தேசவிடுதலையை மாத்திரம் முனைப்பாக்கம் கொண்ட போக்கு, மூன்றாவது பழமைவாதக் கருத்துக்கள் கற்பனாவாதச் சோசலிஸக் கருத்துக்களையும் கொண்டது. நான்காவது வெறும் ஆங்கில அதிகாரத்தைத் தம்மிடம் மாற்றுவதாகக் காணப்படுகின்றது. இதில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக தமிழகத்தில் சுயமாரியாதை இயக்கம் தோற்றம் பெற்றது.பார்ப்பனியம் தகர்க்கப்படாமல் பொதுவுடைமை சாத்தியப்படாமற் போனது. அவ்வாறே அம்பேத்கரின் மதமாற்றச் சிந்தனையும் இந்துமதத்தைக் குறிவைத்துத் தாக்கியது.

பெரியார் நண்பன் யார்? எதிரியார்? என்பதில் தவறிழைத்தார். இத்தகைய தவறு பெரியாரிஸத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனை இந்நூலாசிரியர் சிறப்பாக அடையாளம் கண்டுள்ளார். எனவே சமூகமாற்றத்தின் ஊடாகத்தான் இந்த மாற்றத்iதாக்கொண்டுவரமுடியும் என்பதை இந்நூலாசிரியர் இனங்கண்டுள்ளார். பிராமணியம் தேசியகாங்கிரஸ் மூலமாகவும், தலித்தேசியம் அம்பேத்கர் மூலமாகவும் பிராமணர் அல்லாதார் தேசியம் – பெரியார் மூலமாகவும் பார்ப்பனர்க்கும் முதலாளித்துவத்துக்கும் எதிரான தேசியம் பாரதி மூலமுமம் வெளிப்பட்டவாற்றை இந்நூலாசிரியர் இனம் காட்டுகின்றார்.

கலாநிதி ந. இரவீந்திரன் தமது உரையில்

‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றம்’ எனும் நூல் மீதான இன்றைய கவன ஈர்ப்பும் இங்கு இடம்பெற்ற மூன்று விமர்சன உரைகளும் மிகுந்த மனமகிழ்வை தருவனவாய் உள்ளன. கலந்துக் கொண்ட ஆர்வலரிடமிருந்து எதிர்பார்த்த விமர்சனக் கருத்தாடல் சாத்தியப்படாமை வருத்தமளிக்கிறது. படிப்பதற்கு நூல் கிடைக்காத சூழலில் எப்படி விவாதிப்பது என்ற கேள்வி நியாயமானதே. இப்போது ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தின் உந்துதல். எதிகாலத்தில் நூல் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தலாம்.

இந்நூல் எழுதுவதற்கான காரணம் குறித்து – நூலுருவாக்கச் சூழல் குறித்து- என்னைக் கேட்டுக் கொண்டதன் பேரில் சில விடயங்களைச் சுருக்கமாக முன்வைக்கி;னறேன்.

ஒக்டோபர் புரட்சியின் அறுபதாவது ஆண்டு விழா ஒன்றில் உரையாற்றிய நான் ‘மாகாளி கடைக்கண் வைத்தாள்! ஆகாவென்றழுந்தது பார் யுகப் புரட்சி’ என்ற பாடலடிகளுடன் நிறைவு செய்திருந்தேன். ஒரு முதலாளிய பிற்போக்கு ஆன்மீகவாதக் கவிஞனை ருஷ்யப் புரட்சி பற்றிய அரசியல் பேச்சில் மேற்கொள் காட்டுவதா என கடுமையாக நான் விமர்சிக்கப்பட்டிருந்தேன். முன்னதாகக் காசார புரட்சி வேகத்தில் பாரதி முதலாளித்துவ முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலை காணப்பட்டிருந்தது. ஆயினும் மணியம் தோழர் பாரதிக் குறித்துக் கவனிப்புக்குரிய பக்கங்களையே வலியுறுத்தியிருந்தார்.

பாரதி நிராகரிப்பு விமர்சனத்தால் விலகியிருந்த என் பார்வையை பாரதி நூற்றாண்டு விழாக் கருத்தரங்க ஈடுபாடு மீண்டும் ஈர்ப்பததாக அமைந்தது. ‘அரசியல் இலக்கியமும் பாரதியும்’ என்ற கைலாசபதி தெரிவு செய்து வழங்கிய ஆய்வுக் கட்டுரைக்காக பாரதியைப் படித்த போது பாரதியிடம் மனித சக்தியே புத்துலகம் படைக்கவல்லது- கடவுள் எதையும் செய்வதில்லை என்ற கருத்தே நிலவுகின்றது என்பதை காணமுடிந்தது. பிரபஞ்சத்துக்கு வெளியே ஒரு கடவுள் இல்லை எனவும் பாரதி ஆணித்தரமாக வலியுறுத்தினார். இயங்கியல் பொருள் முதல்வாதப் பார்வையொன்றை பாரதி வெளிப்படுத்தினார்.

இதற்கான அடிப்படைகளை மேலைத்தேசச் சிந்தனை வளர்ச்சிகளை கற்று பாரதி வந்திருக்க முடியும். இருப்பினும், எங்கும் பிறநாட்டுச் சிந்தனைப் பொக்கை வலியுறுத்தாமல் முற்றிலும் இந்திய பார்வையூடாகவே தன் உலக நோக்கு வீச்சை வெளிப்படுத்தும் அக்கறை பாரதியிடம் இருந்துள்ளது. சேதப் பக்தி உணர்வினைத் தட்டியெழுப்ப அவசியப்பட்ட அக்காலச் சூழலில் இவ்விடயம் புரிந்துக் கொள்ளத்தக்கதே.

இவ்வாறு இந்திய வாழ் முறை வெளிப்பாடான தத்துவச் செல்நெறியூடாக இயங்கியல் பொருள் முதல்வாத நோக்கிற்கு பாரதியால் வர முடிந்தது எப்படி என்ற கேள்வி என்னுள் இருந்தது. அதையும் பெரும்பாலும் இந்துசமயத் தளத்திலிருந்தெ பாரதி வெளிப்படுத்தவும் செய்தார் என்றவகையில் இந்து சமயத்திற்க அதை வழங்கும் ஆற்றல் எப்படி சாத்தியமானது?

எனது முதுகலைமாணிப்பட்ட ஆய்வேட்டை இதற்கு வாய்ப்பானதாகப் பயன்படுத்திக் கொண்டேன். ‘இந்தசமய மரபும் சுப்பிரமணிய பாரதியும்’ என்ற ஆய்வின் முடிவில் எமக்கான சமூகம் புரட்சி பண்பாட்டுப் புரட்சியாக அமைவதையும் வணிக அதிகாரத்தை தகர்த்து நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை வென்றெடுக்கும் சமூகமாற்றம் இந்துமத எழச்சி வடிவிலான புரட்சி வாயிலாகச் சாத்தியமானது என்பவற்றைக் கண்டறிந்தேன். பிந்திய நிலப்பிரபுத்துவ அதிகார மதமாக மட்டுமன்றி நிலவிய அதிகாரத்தை தகர்க்கும் புரட்சிக் குணாம்சமுடைய பக்கமொன்றையும் இந்துசமயம் கொண்டிருந்தமையை காண முடிகின்றது.

இந்தக் கற்றலுடன் கலாநிதிப்பட்ட ஆய்விற்காக இந்தியா சென்றிருந்த போது இந்துத்துவத்தை தாக்கும் எத்தனிப்பில் இந்துசமயத்தையும் தாக்குவதனைக் கண்டேன். இந்துசமய பற்றாளர்களை இந்துத்துவவாதிகளிடம் தள்ளும் கைங்காரியம் இது. இந்துசமயம் வேறு ஆதிக்க சக்திகளிடம் வெறும் அரசியலாக உள்ள, உண்மையில் இந்துசமய பற்றில்லாது இருக்கின்ற இந்த்துவம் வேறு என்பதை காட்ட வேண்டியிருந்தது. இந்துசமயம் தேசிய எழுச்சி தொடக்கத்தில் விவேகானந்தர் என்ற விடுதலை நெறியாளரையும், பாரதி என்ற புதிய பண்பாட்டு இயக்க முன்னோடியையும் தந்துள்ளது. இதனை விளக்கும் வகையில் ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’ எனும் நூலை எழுதினேன்.

அது காட்டிய புதிய வீச்சுக் குறித்த பற்றார்வமிக்க ஆதரவு கிடைத்த அதே வேளை, அடைவிடக் கூடுதலாக யாழ்hபண வெள்ளாள இந்தியப் பிராமணிய ஆதிக்கங்களை நியாயப்படுத்தும் நூல் எனும் தாக்குதலும் வெளியானது. மேலும் விளக்கமான நூலொன்று எழுதுவது அவசியம் என்ற சூழல் வலுப்பெற்ற நிலையிலே ‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றம்’ எனும் இந்நூல் எழுதப்பட்டது. இதற்கும் கடும் விமர்சன்ஙகள் எழுந்தன. ஆழ்ந்த பற்றுதிமிக்க ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டன. கடும் விமர்சனத்தால் துவன்ட சூழலில் பூனேயிலிருந்து ஒரு வருடத்தில் படித்ததை கூறிவந்த பிரபாகர் தோழர் சொன்னார் ‘ தாக்குதல்களுக்கு துவண்டு போக வேண்டாம், பத்துப் பதினைந்து அண்டுகளின் பின் கண்டிப்பாக இந்நூ;ல கவனம் பெறும்’ என்று. பரவாயில்லை, இப்போது ஆறுவருடத்திற்குள்ளாகக் கவனம் பெற்றுள்ளது. விவாதிப்போம், மகிழ்வான ஒரு எதிர் காலத்தை கட்டியெழுப்புவதற்காக!

தொகுத்து நோக்குகின்ற போது மதம் குறித்த வரட்டு மார்க்ஸியவாதிகளதும், மார்க்ஸியவாதிகளதும் பார்வை வேறானது. மார்க்ஸியவாதி மதத்தை அதன் வரலாற்று சூழலில் வைத்து நோக்குவதுடன் புரட்சிகரமான சமூகமாற்றப் போராட்டத்திற்கு மரபு, மதம் என்பனவற்றில் காணப்படுகின்ற போர்குணத்தை தமக்க சாதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். வரட்டு மார்க்ஸியவாதிகள் புரட்சிகர தளத்தில் மக்களையும் அதன் நேச சக்திகளையும் நிராகரித்து விட்டு தன்னை மட்டு புரட்சியானனாக காட்டும் கோமாளியாகின்றான். இதற்கு மாறா உண்மையாக சமூகமாற்றத்திற்hகக உழகை;கின்றவர் புத்தகவாத அடிப்படைகளிலருpந்து விலகி யாதார்த்த உலகை இனங் காண்பதுடன் மக்களை அணுகுகின்றான். எமது பண்பாட்டிலிருந்து பலத்தை மாத்திரம் கவனத்திலெடுப்பது பின்னடைவிற்கும் பலவீனத்தை மாத்திரம் கவனத்திலெடுத்தல் விரக்த்திக்கும் இட்டு செல்யலும் என்பதை கடந்த கால அனுவங்கள் எமக்கு உணர்த்தியுள்ளன. இத்தகைய விவாதத்திற்கான தொடக்கப் புள்ளியாக இந்நூல் வெளிவந்துள்ளது.

Exit mobile version