Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலர்புல் பொங்குதமிழ் – மீண்டும் தொடங்கிய மிடுக்கு?

அரை நூற்றாண்டுகளாக அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அவலத்தின் உச்சத்தை கண்டிருக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனம்! பேரினவாத பாசிஸ்டுக்களும், திருடர்களும் வியாபாரிகளும் அழிவுகளை மூலதனமாக்கிக்கொள்ளும் ஊழிக்காலம். தெற்காசியாவின் மூலையிலிருந்து அழிவுகளைக் கண்டு அஞ்சியோடிய ஆயிரமாயிரம் தமிழர்கள் அன்னிய தேசங்களில் அகதிகளாயினர்.
இரண்டு வருடங்களின் சற்று முன்னதாக லட்சக்கணக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அன்னிய தேசத்தின் தெருக்களில், பனியுறையும் குளிரிலும் அணியணியாகத் தமிழர்கள் திரண்டனர். முன்னெப்போதோ நிகழ்ந்த நிகழ்வாக வரலாற்றில் எங்காவது மூலையில் எங்காவது ஒரு ஆவணப் பதிவிலிருந்து எதிர்காலத்தில் தரவிறக்கம் செய்வதற்காக மட்டும் எதிர்காலத்தில் பயன்படவல்ல போராட்டங்களாக இவை மாறின.
அன்றொரு நாள் இலங்கையில் இனப்பகையை திட்டமிட்டு உர்வாக்கிவிட்டு, பௌத்த – சிங்கள உணர்விற்கு எண்ணை ஊற்றி எரியவைத்துவிட்டு நாடுதிரும்பிய பிரித்தானியாவும், அமரிக்காவும், எல்லா அதிகார வர்க்கங்களும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க இந்தியாவும் இலங்கையும் சீனாவையும் இணைத்துக்கொண்டு இனப்படுகொலையை அரங்கேற்றின.
ஐரோப்பியப் போராட்டங்களைக் கண்டு யாரும் மிரண்டுபோகவில்லை. ஐரோப்பிய மக்கள் ஆங்காங்கு மக்கள் கொல்லப்படும் போது நடத்தும் போராட்டங்கள் போலன்றி தமிழர்கள் தமது வரட்டுப் பெருமைக்காக நடத்தியது போன்றிருந்தது இந்தப் போராட்டங்கள்.
ஆக இனவழிப்பின் போது தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் நடத்திய போராட்டங்களில் எங்கோ தவறு நடந்திருக்கின்றது. போரை நிறுத்தச் சொல்லியும் மக்களைக் காப்பற்றக் கோரியும் உலக மக்கள் தமது அரசுகளுகு அழுத்தம் கொடுக்கவில்லை.
இரண்டு வருடங்கள் துயரோடு கடந்து போயின. அதே தோற்றுப் போன வழிகள். அதே வரட்டுக் கௌரவம்.அதே சுலோகங்கள். அதே கொடிகள், நிறங்கள்.. பொங்கு தமிழ் நிகழ்வுகள் “கோலாகலமாக” நிறைவடந்தன. கொடிகள் விற்பனையாகின. குடைகளும் விற்கப்பட்டன. பிரயாண ஒழுங்குகளுக்குப் பணம் பற்றுச் சீட்டுக்கள் விற்பனையாகின. கே.பி யின் ஆதரவாளர்களும், மகிந்தவின் பக்தர்களும் கூட மேலங்கிகளோடும் கொடிகளோடும் குடைகளோடும் கலந்துகொள்ள கலர் புல் பொங்கு தமிழ் இனிதே நிறைவடைந்தது.
போர்க்குணம் மிக்க போராட்டமாக, ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்கள் இணைந்த குரலாக, சர்வதேசிய விடுதலை அமைப்புக்களோடு இணைந்த பலமாக ஒலிக்க வேண்டிய தமிழர் குரல்கள் குடைகளுக்குள்ளும் கொடிகளுக்குள்ளும் முடங்கிப் போனதற்கு யார் காரணம்?
பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஒரு வாரத்திற்கு முன்னர் போருக்கு எதிரான பிரித்தானியர்களின் ஒன்றுகூடலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர். தமிழர்கள் யாருமில்லை.

Exit mobile version