இந்த நிலைமையை மாற்றத் தவறினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாரதூரமான ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் கருத்து கூறும் உரிமையைப் பாதுகாக்க அணி திரள்வோம் என்ற தலைப்பில் தகவலை அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தலையிடுமாறு மக்களிடம் வேண்டிக்கொள்வதாக அந்த ஊடகவியலாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன. நாட்டில் கருத்து கூறும் சுதந்திரத்தையும் மக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் இந்த செயற்பாடுகள் பெரும் தடையாக அமைந்துள்ளன.
இந்த ஒடுக்குமுறையானது ஊடகவியலாளர்களின் உயிருக்குக் கூட அச்சுறுத்தலாக மாறிவருகிறது. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.
இதுவரை அவர் குறித்த எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் உள்ளிட்ட பல இணையத்தளங்களுக்கு பலமுறை தொழில்நுட்பத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை அரசாங்கத்தின் அனுசரணையோடு இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதேபோல், இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் அடிக்கடி இணையத்தள ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரச ஊடகங்களில் பணியாற்றும் மாற்றுக் கருத்துக்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் பெரும் இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
அதேபோல் அரச விரோத சதித் திட்ட குற்றச்சாட்டின் பேரில் பல ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர் விலக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒன்பது ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இதனைத்தவிர மேலும் 21 பேர் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் லக்ஹன்ட வானொலியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சிரச ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் அண்மைக்காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர். மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களுக்கெதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள ஒடுக்குமுறையின் ஒருபகுதியாகவே இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தின சிறிமல்வத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் விசேட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அரசாங்கம் லங்கா பத்திரிகைக்கு எதிராக பாரிய சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்ததுடன் அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தேசிய ரூபவாஹினி மற்றும் அரச ஊடகங்கள் வழியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
லங்கா பத்திரிகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் விலக்கிய போதிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று பல்வேறு வகையிலான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டுள்ளன.
அத்துடன் லங்கா பத்திரிகை முகவர்களை அச்சுறுத்தி அதனூடாக பத்திரிகை விநியோகத்தைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என அடக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.