Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருத்துச் சுதந்திரம் : மகிந்த ராஜபக்ச Vs உதுல் பிரமரட்ன

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தினவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடனான பிணை வழங்கியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் உதுல் பிரேமரத்தின கடந்த ஒக்டோபர் 29ம் திகதி தொடக்கம் சுமார் ஒன்றரை மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

உதுல் பிரேமத்தினவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவருக்கு பிணை வழங்குவதற்காக ரூ. ஐம்பதினாயிரம் ரொக்கப் பிணை மற்றும் ரூ. ஐந்து இலட்சம் சரீரப் பிணை யில் செல்ல அவருக்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு நீதவான் தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டார்.

இதற்கு முன் உதுல் பிரேமரத்தினவின் பிணை மனு மீதான விசாரணைகள் பல தடவைகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சிறையில் வைத்து அவருக்கு ஏதேனும் ஆபத்துக்கள் நிகழலாம் என்ற அச்சம் கூட மேலெழுந்திருந்தது. அவ்வாறான நிலையிலேயே இன்று அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் போஸ்டர் ஒட்டுதல், மாணவர் நடவடிக்கைகளில் பங்குபற்றுதல், அவற்றை ஏற்பாடு செய்தல் என்பவற்றிலிருந்து அவர் விலகியிருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் பிணை ரத்துச் செய்யப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதை கருத்துச் சுதந்திரம் தடைசெய்யப்பட்டதாக கண்டனம் தெரிவித்த அரசாங்கத் தரப்பினர் உதுல் பிரேமரத்தினவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கருத்துச் சுதந்திரம் மீதான தடையாக கருதவில்லையா? என்று பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

Exit mobile version