Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருத்தரங்கும் ‘2010 தமிழ் மலர்’ வெளியீடும்:செம்மொழி மாநாட்டுக்கு மறுபுறம்

 கோவையில் ஜூன் இறுதி வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் கலாச்சார மரபுகளுக்கு ஒப்ப, திரைப்படத்தின் காட்சிகள் போல பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

 ஜனரஞ்சக திரைப்பட இயக்குனரான கௌதம் மேனன் காட்சிப்படுத்திக் கொடுக்க, செம்மொழி மாநாட்டுப் பாடல் ரஹ்மானின் இசையமைப்பில் வெளியாகி இருக்கிறது.

 திரைப்பட, திராவிட முன்னேற்றக் கவிஞர்களின் பங்குபற்றுதலில் விழா களைகட்டியிருக்கிறது. நிகழ்ச்சி நிரல் கூட வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் விழா மலரும் வெளியிடப் பெறுகிறது.

 இந்தச் செம்மொழி விழாவில் தமிழ் கலாச்சார வாழ்வைக் கடந்த முப்பதாண்டு காலம் பாதித்து வந்திருக்கிற சிறுபத்திரிக்கை இயக்கப் படைப்பாளிகளோ சிந்தனையார்களோ பங்கு பெற்றவில்லை. தத்தமது அளவில் தமது மாறுபாட்டை தமிழ் இலக்கியப் பத்திரிக்கைகளில் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

 இத்தகையதொரு சூழலில் தமது ஆத்ம வேதனையையும் மறுப்பையும் படைப்பு வெளியில் ஆக்கபூர்வமாக முன்வைக்கும் ஒரு வெளிப்பாடாக உலகெங்குமுள்ள தமிழ் படைப்பாளிகளினதும், ஆய்வாளர்களினதும் எழுத்துக்களைக் கொண்ட 400 பக்கத்துக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட தொகுப்பு மலர் ஒன்றினை கோவை ஞானி செம்மொழி மாநாடு நடைபெறும் அதே கோவை நசகரில் வெளியிடுகிறார். மலரது விலை 250 ரூபாய்கள். கருத்தரங்க மண்டபத்தில் மலர் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்திருக்கிறார்கள்.

 அதனையொட்டி 13.06.2010 ஞாயிறு அன்று கோவையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கும் நடைபெறுகிறது. தமிழ்நேயம் சஞ்சிகை இந்த நிகழ்ச்சியை ஒன்றிணைந்து நடத்துகின்றது.

 தமிழ் ஆய்வாளர்களும்; விமர்சகர்களுமான கோவை ஞானி, பூரணச்சந்திரன், சிறுகதைப் படைப்பாளிகளான இராஜேந்திர சோழன், பா.செயப்பிரகாசம், தமிழ்க் கல்வியாளர்களான ம.ரா.போ.குருசாமி, கண. குருஞ்சி மற்றும் அருள்திரு பிலிப் சுதாகர், மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரயர் ப.மருதநாயகம் போன்றவர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கு கொண்டு உரையாற்றுகிறார்கள்.

 அனைவரையும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டளர்கள் அழைக்கிறார்கள்.

Exit mobile version