சந்தர்ப்பத்தை பிரிட்டன் தவறவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் விசனம் கருணா சுதந்திரமான மனிதனாக இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கு இடமளித்ததற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக விமர்சித்துள்ள அதேசமயம், இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை கடும் ஏமாற்றத்தை வெளியிட்டிருக்கிறது.
மோசடி விசாவுடன் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டுடன் பிரிட்டனுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றிருந்த கருணா கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டதுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
கருணாவை, துஷ்பிரயோகம் செய்த முன்னாள் தமிழ் புலித் தலைவரென மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அத்துடன், அவர் விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்தபோது மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசா ரணை நடத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அண்மைய வருடங்களில் கருணா குழு புலிகளுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவதால் அவர் மீது இலங்கை அரசு விசாரணை செய்திருக்கவில்லையென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
சித்திரவதை சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் சிறுவர்களை படைவீரர்களாக பயன்படுத்துதல் உட்பட மோசமான குற்றச் செயல்களில் கருணாவின் தலைமைத்துவம் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
போர் குற்றவாளியென குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்ட ஒருவரை பிரிட்டிஷ் அரசாங்கம் 6 மாதங்கள் தனது பாதுகாப்பில் வைத்திருந்த போதும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரை பதிலளிக்க வைப்பதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை பிரிட்டிஷ் அரசு பாழாக்கிவிட்டது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.
பிரிட்டனின் நீதித்துறையிலிருந்து கருணா தப்பியுள்ளமை சர்வதேச நீதித்துறையின் தோல்வியென அவர் மேலும் கூறியுள்ளதுடன் கருணா இப்போது கொழும்புக்கு திரும்பியிருப்பதாகவும் இலங்கை அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றதா? அல்லது அவரது குற்றங்கள் தொடர்பான சிக்கல்களை குறைத்துவிடுமா என்பது தொடர்பாக இலங்கை அரசின் மீது கவனம் திரும்பியுள்ளதாக அடம்ஸ் மேலும் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச மன்னிப்பு சபை
இதேவேளை, கருணாவை பிரிட்டன் நாடு கடத்தியுள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை வியாழக்கிழமை ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
சித்திரவதை, கப்பம் பெற்றமை, சிறுவர்களை போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பான கருணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நகரப் பொலிஸாருக்கு சர்வதேச மன்னிப்பு சபை 14 மே 2007 இலும் 4 ஜூன் 2008 இலும் கடிதங்களை அனுப்பியிருந்தபோதும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளது.
“எமது கவலைகளை மெற்றோ பொலிற்றன் பொலிஸாருக்கு வெளிப்படுத்தியிருந்தோம். விசாரணைகளை மேற்கொண்டபோது சாட்சிகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் போதாது. கருணாவை நாடுகடத்தியதன் மூலம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் விசாரணை முடிவடைந்துவிட்டது என்றே அர்த்தப்படும். நியாயமான சந்தேகம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்துவதற்கு அப்பால் அவருடைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை அவர் அப்பாவியென்றே கருதப்படும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு நாம் அறிவிக்கவுள்ளோம்’ என்று சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.