இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய குறித்த இயக்கத்தின் உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி, ‘1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் 2004ஆம் ஆண்டு பேத்தாளையில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் விசாணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
இலங்கை பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவும் அடியாட்களும் பலரின் காணாமல் போதலுக்கு சூத்திரதாரிகள் என்ற போதும் மேற்குறித்த அமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள் இலங்கை அரசிற்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
குறித்த இயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளானவை,
• கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவைகளைத் தோண்டுதல்.
• கடத்தப்பட்டு கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எலும்புக்கூடுகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான மரணச்சடங்குகளை உரிய சமய ஆசாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளல்.
• அவ்வாறு கடத்திக் கொல்லப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்குதல்.
• மேற்படி கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவோரினை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல்.
கடந்த 30 வருட கால இன முரண்பாடுகளால், யுத்தத்தினால் காணாமற் போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு இந்த பிரேரணையை பரிசீலித்து நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கின்றோம்’ என்றார்.
இதேவேளை, ‘பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டுமெனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்’ என தெரிவித்த சபில் நழீமி, இது தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சுயேட்சகை;குழு உறுப்பினர்களான ஏ.எல்.எம். சபீல், எம்.எச்.ஏ.நசீர் ஆகியோர் கையொப்பமிட்ட பிரேரணையையும் சபைக்கு சமர்ப்பித்தார்.
இந்த பிரேரணை தொடர்பில் ஆராய்ந்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், ஏற்கனவே காத்தான்குடியிலும் அதனை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட விபரங்களை காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கையளித்து அது தொடர்பாக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்துவருவதால் இவ்வுறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஏற்கனவே இந்த விவகாரம் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில் அரசியல் இலாபத்திற்காக இந்த பிரேரணை இவர்கள் சமர்பித்ததாகவும் இந்த வியடமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நடவடிக்கை எடுத்து வருவதால் அவருக்கு இதற்கான ஒத்துழைப்பினை காத்தான்குடி நகர சபை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சுயேட்சைக்குழு காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதமும் கருத்துப் பறிமாறல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.