தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றார் மேனன். இதையடுத்து இன்று சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினேன்.
தற்போது இலங்கையில் போருக்கு பின்னர் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.
இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் என்றார் மேனன்.
ராஜபக்ச தேர்தல் முறைகேடு குறித்தும் அதில் இந்தியாவின் பங்கு குறித்தும் செய்திகள் வெளியாகும் நிலையிலும், தேர்தலில் ஈழத் தமிழர்கள் ராஜபக்சவை நிராகரித்துள்ள நிலையிலும், இந்தச் சந்திப்பு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் ஆழமான தலையீட்டை வெளிப்படுத்துவதாக அமையும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை வட கிழக்கு அபிவிருத்தி என்ற பெயரில் புலம் பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குழு இலங்கையில் முதலிடுவதற்கான வியாபார வாய்புக்கள் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. வட கிழக்கில் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உரிமை வேண்ட்டம் அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப்படும் அபாயங்கள் காணப்படுகின்றன. மக்களின் உணர்வு அரசிற்கும் அதன் துணை இராணுவக் குழுக்களுக்கும் எதிராக அமைந்துள்ள நிலையில், உருவாகும் எதிர்ப்பை எதிர் கொள்வதற்கான சந்திப்பாகவே கருணாநிதி மேனன் சந்திப்பு கருதப்படுகிறது.
இந்தியப் பழங்குடி மற்றும் ஆதிவாசிகள் மீது அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் தாக்குதல் நடத்தி வரும் இந்திய அரசு அதே வழிமுறையை ஈழத் தமிழர்களுக்கும் எதிராகக் கையாளும் முன்னறிவிப்பா இச்சந்திப்பு என ஐயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.