Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் மகிந்த ராஜபக்ஷ பாராட்டு!.

30.10.2008.

தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இந்தியாவின் அதிசிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவர் என்று தனது மரியாதையை வெளிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை பிரச்சினை தொடர்பான கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் ஜனாதிபதி ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.

அத்துடன், பிளவுபடாத இலங்கைக்குள் தமது தமிழ் சகோதரர்களின் ஜனநாயக, அரசியல், மொழி உரிமைகள் உட்பட சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதும் அதிகாரப் பகிர்வை தளமாக கொண்டதுமான அரசியல் தீர்வொன்றை பேச்சுவார்த்தையூடாக முன்னெடுப்பதில் தனது அரசாங்கம் பற்றுறுதியுடன் இருக்கின்றது என்பதை தான் மீள வலியுறுத்தி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அலரிமாளிகையில் சென்னை யிலிருந்து வெளியாகும் “இந்து’ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பிரச்சினைகளுக்கு இராணுவத்தீர்வு இல்லை என்பதில் நான் பூரணமான தெளிவுடன் இருக்கிறேன். பயங்கரவாதிகளுக்கே இராணுவுத் தீர்வாகும். அரசியல் தீர்வு இந்த நாட்டில் வாழும் மக்களுக்கே என்பதை எப்போதும் நான் கடைப்பிடித்து வருகிறேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனது இறுதி யோசனைகளை முன்வைப்பதில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தாமதம் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, “அரசியல் நடவடிக்கைகளுக்கான பொறுப்புகளை நானே பொறுப்பெடுத்து அரசியல் ரீதியாக அதனை மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் என்றும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே பிரத்தியேகமாக இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் அழுத்தியுரைத்திருக்கிறார். இந்தியா உட்பட 30 நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத பிரிவினைவாத அமைப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், இந்த பிந்திய கட்டத்திலாவது புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் பிரவேசிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

புலிகளுக்கு எதிராகவே இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் பொது மக்களை இம்சைப்படுத்துவதோ அவர்களை துன்பப்படுத்துவதோ இதன் நோக்கம் அல்ல என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது அரசாங்கம், மோதலினால் பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்த மக்களுக்கு தனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் சகலவற்றையும் செய்துகொண்டிருப்பதாகவும் இனியும் செய்யுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மோதலினால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவது உறுதிப்படுத்தப்படுகின்றது. இது பாதிக்கப்பட்ட சகல பொதுமக்களையும் நியாயமான, வெளிப்படைத் தன்மையான முறையில் புனர்வாழ்வளிப்பதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் தனது விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ புதுடில்லியில் நடத்திய பேச்சுவார்த்தைகள் ?சாதகமான, ஆக்கபூர்வமான விளைவுகளை தந்துள்ளதாக தனது மகிழ்ச்சியை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800 தொன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்றுள்ள ஜனாதிபதி, இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு தமிழ்நாடு மேலதிகமாக பங்களிப்பு வழங்க முன்வந்திருப்பதையும் பாராட்டினார்.

அதேசமயம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியை “இந்தியாவின் அதி சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவர்’ என்று தனது மதிப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி, பிரிக்க முடியாத இலங்கைக்கட்டமைப்புக்குள் நியாயமான அரசியல் தீர்வொன்றை தற்போதைய மோதலுக்கு காணப்படுவது அவசியம் என்ற கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு வருகை தருமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்திய அரசாங்கத்தினூடாக அழைப்புவிடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எத்தகையதொரு அரசியல் தீர்வை மனதில் கொண்டுள்ளீர்கள் என்று கேட்கப்பட்டபோது, தனது நான்கு “டி’ (ஈ) அணுகுமுறைகள் பற்றி அவர் விபரித்தார்.

யுத்தமயமாக்கல் குறைப்பு (demilitarisation), ஜனநாயக மயமாக்கல் (democratisation) அபிவிருத்தி (development), பகிர்வு (devolution) என்பனவே இந்த நான்கு “டி’அணுகுமுறைகளுமாகும். இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது வடக்கு, கிழக்கில் அதனை அமுல்ப்படுத்த முடியவில்லை. ஏனெனில், அதனை அமுல்ப்படுத்துவதற்கு எந்தவொரு தரப்பிலும் அரசியல் விருப்பம் காணப்படவில்லை. ஆனால், அரசியல் தலைவர் என்ற முறையில் தனது அரசின் நோக்கம் அதனை முறையாக அமுல்ப்படுத்தப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.

எனது நாட்டிலுள்ள தமிழ் சமூகத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இது தொடர்பாக நாங்கள் உறுதிமொழி அளித்திருக்கிறோம். அதனை நாம் செய்யவுள்ளோம். இது எவரையும் திருப்திப்படுத்தவல்ல. இந்த நாட்டு மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால யோசனைகளை தனது அரசாங்கம் அமுல்படுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தை மீட்ட ஒருவருட காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி, மாகாண சபைத் தேர்தல்கள் அங்கு நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

தமிழ் முதலமைச்சர் ஒருவர் அங்கு கடமையேற்றிருப்பதாகவும் முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கைகள் தொடர்பாக மதிப்பீடு செய்ய குழுவொன்றை அவர் உருவாக்கியுள்ளார்.

 

 

Exit mobile version