Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதியிடமிருந்து இறுதி அஸ்திரமாக ஈழத்தை அமைக்கும் முயற்சி பற்றிய அறிவிப்பு!

இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான தொனிப்பொருள் பிரசாரமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கு சடுதியாக அதிகரித்து விட்டிருக்கும் அழுத்தத்தை தடுத்து நிறுத்தும் அரசியல் “பிரமாஸ்திரமாக’ “ஈழத்தை’ உருவாக்குவதே தனது அடுத்த கூட்டு முயற்சி என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்தவாறு அறிவித்திருக்கிறார்.

லோக சபைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்களிப்புக்கு இன்னமும் 5 நாட்களே முழுதாக உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளில் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தற்போது அதிகளவு ஆதரவை பெற்றதாக ஜெயலலிதாவின் அ.தி.மு.க. கூட்டணி காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழகத்திலும் பாண்டிச் சேரியிலுமுள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற வைத்தால் மத்தியில் கிடைக்கும் பலத்தின் மூலம் இலங்கைத் தமிழருக்கு தனியான தாயகத்தை அமைத்துக் கொடுப்பேன் என்றும் இந்திய இராணுவத்தை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தேர்தல் பிரசார மேடைகளில் ஜெயலலிதா முழங்கி

வருகிறார். அவருக்கு ஆதரவாக ம.தி.மு.க. , பா.ம.க. போன்ற கட்சிகளின் தலைவர்களான வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் உரத்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் தமிழகத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள திரைப்படத்துறையும் காங்கிரஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு தீவிரமான பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

இந் நிலையில் கருணாநிதியிடமிருந்து இறுதி அஸ்திரமாக ஈழத்தை அமைக்கும் முயற்சி பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

“இலங்கைத் தமிழருக்கு கணிசமான அளவு நீதியை உறுதிப் படுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக அவர்கள் ஈழத்தைப் பெறவேண்டும். நான் பொறுப்புகளை எடுத்துக் கொண்டபின் அடுத்த கட்டமாக ஈழம் உருவாக்கப்படுவதற்கான சகல முயற்சிகளையும் உறுதிப்படுத்துவேன்’ என்று தனது தி.மு.க. ஆதரவாளர்களுக்கு கருணாநிதி உறுதியளித்திருக்கிறார்.

அதேசமயம் கருணாநிதியின் இந்த சடுதியான அறிவிப்புக்கு, அதன் நேச அணியான காங்கிரஸிடமிருந்து இரு தினங்களுக்கு முன்னர் வெளிவந்த அறிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தேர்தலின் பின் காங்கிரஸ் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுக்கும் கதவு திறந்திருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தெரிவித்திருந்தார். காங்கிரஸிடமிருந்து வெளியான இந்தக்கருத்து கருணாநிதிக்கு சங்கடத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடுமெனவும் அதனையடுத்தே வெற்றிபெறும் அணியின் தேர்தல் பிரசார பீரங்கிகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆஸ்பத்திரியிலிருந்தவாறு இந்த அதிரடி அறிவிப்பை விடுத்துள்ள கருணாநிதி, தனது அரசின் சிறப்பான பணிகள் குறித்து ஒவ்வொரு வாக்காளரும் அறிந்து கொள்வதை உறுதிப்படுத்துங்கள் என்றும் தனது கட்சி ஆதவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியுள்ள நிலையில் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் தனது கட்சியின் தொலைக் காட்சியில் உரையாற்றியிருக்கிறார்.

கடந்த 27 ஆம் திகதி இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதமென அறிவித்து பின்னர் அது குறித்து உறுதிமொழி கிடைத்ததையடுத்து கைவிட்டதாகக் கருணாநிதி அறிவித்திருந்ததை அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏளனம் செய்திருந்தன. இலங்கையில் தொடர்ந்து மோதல் இடம்பெறும் நிலையில் கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்றும் அவை விமர்சித்து வந்தன.

இது இவ்வாறிருக்க, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென்ற இலங்கையின் உறுதிமொழி, யுத்த நிறுத்தம் போன்றதொன்றுதான் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவிப்பும் இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 100 கோடி ரூபா வழங்குவதென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பும் தமிழ் நாட்டு மக்களை சாந்தப்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

“தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த உறுதிமொழிகள் திருப்திப்படுத்துமா?? என்றும் இலங்கைத் தமிழர் விடயத்தில் முன்கூட்டியே நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டுமெனவும் காலந்தாழ்த்திய இந்த நடவடிக்கை ஒருபோதும் தமிழக மக்கள் மனங்களை சாந்தப்படுத்தாது என்றும் ஆசிய நிலையத்தின் வி.சூரியநாராயணா “அவுட்லுக்’ சஞ்சிகையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முன் முயற்சியை இந்தியா கட்டியெழுப்பியிருக்க வேண்டும். அதிகாரமையமாக வரவிரும்பும் நாடொன்று அதிகளவுக்கு இதனை செய்திருக்க வேண்டும்’ என்று அரசியல் விமர்சகர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version