ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது, தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் அமைத்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் ஜூலை 8 வெள்ளிக்கிழமையன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
சிறிலங்க அரசு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுக்கும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு இன்று வரை மதிக்கவில்லை. புதுடெல்லியில் நேற்று இலங்கை, மாலைத் தீவு நாடுகளின் இதழாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய அயலுறவுச் செயலர் நிரூபமா ராவ், “இந்தியாவின் நட்பு நாடான சிறிலங்கா, ஒற்றையாட்சியின் கீழ் வலிமையாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது” என்று கூறியுள்ளதும், “இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அந்நாட்டு அரசு உருவாக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம், ஆனால் அதற்காக எந்த விதத்திலும் சிறிலங்க அரசை நிர்பந்திக்க மாட்டோம்” என்றும் கூறியுள்ளார். இது இந்திய அரசின் இலங்கைக்கு ஆதரவான நட்புப் போக்கு மாறவில்லை என்பது காட்டுவது மட்டுமின்றி, அது தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது என்பதற்கும் அத்தாட்சியாகும்.
அதுமட்டுமல்ல, இன்று வரை ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டைக் கூறவில்லை. இலங்கை அரசின் தமிழினப் படுகொலையில் தன் பங்கை மறைக்க முயற்சிக்கிறது என்பதற்கும், அதற்காக அது சிறிலங்க அரசைக் காப்பாற்ற முற்படுகிறது என்பதற்கும் சான்றாகும்.ஆகவே, ஈழத் தமிழரின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு அப்பாலும் வாழும் மக்களின் ஆதரவு அவசியமாகிறது.
இந்த நோக்கில் இந்திய நாடு தழுவிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் வெள்ளியன்று நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரணி, பொதுக் கூட்டம், உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது.
சென்னை தங்கசாலையில் அக்கட்சியின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதேபோல, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கும் இயக்கங்களில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த இயக்கங்கள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் மத்திய அரசுக்கு வலிமையான ஒரு செய்தியை விடுப்போம்.