Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கம்யூனிஸ்டு அறிக்கை – 1892-ஆம் ஆண்டின் போலிஷ் பதிப்புக்கு எழுதிய முகவுரை

1892-ஆம் ஆண்டின் போலிஷ் பதிப்புக்கு எழுதிய முகவுரை

கம்யூனிஸ்டு அறிக்கையின் ஒரு புதிய போலிஷ் பதிப்புக்குத் தேவை ஏற்பட்டுள்ளது என்கிற உண்மை பல்வேறு சிந்தனைகளை எழுப்பியுள்ளது.

அனைத்துக்கும் முதலாவதாக, அண்மைக் காலமாகவே, அறிக்கையானது ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு சுட்டுகைபோல (index) ஆகியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடையும் அதே அளவுக்கு, அந்நாட்டுத் தொழிலாளர்களிடையே, உடைமை வர்க்கங்கள் தொடர்பாகத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அவர்களின் நிலைபாடு குறித்துத் தெளிவுபெற வேண்டிய தேவையும் வளர்கின்றது. சோஷலிச இயக்கம் அவர்களிடையே பரவுகின்றது. அறிக்கைக்கான தேவையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையினுடைய பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை மட்டுமன்றிப் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சி நிலையைக்கூடப் பெருமளவு துல்லியமாக அளவிட்டுவிட முடியும்.

அதன்படி, புதிய போலிஷ் பதிப்பானது, போலிஷ் தொழில்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய பதிப்பு வெளிவந்த பிறகே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காங்கிரஸ் போலந்து[23] எனப்படும் ருஷ்யப் போலந்துப் பகுதி, ருஷ்யப் பேரரசின் பெரிய தொழில்துறை மண்டலமாக மாறியுள்ளது. ருஷ்யாவின் பெருவீதத் தொழில்துறை அங்குமிங்குமாகச் சிதறுண்டு கிடக்கிறது. ஒரு பகுதி பின்லாந்து வளைகுடாவைச் சுற்றிலும், வேறொன்று மையப் பகுதியிலும் (மாஸ்கோ, விளாதிமீர்), மூன்றாவது, கருங்கடல், அஸோவ்கடல் கரையோரங்களிலும், மற்றும்சில வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளன. அதே வேளையில், போலந்தின் தொழில்துறை, ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பரப்புக்குள் நெருக்கமாக அமைந்துள்ளது. அத்தகைய ஒருங்குகுவிப்பினால் விளைகின்ற சாதக, பாதகங்களை ஒருசேர அனுபவிக்கிறது. போட்டியிடும் ருஷ்யத் தொழிலதிபர்கள், போலிஷ் மக்களை ருஷ்யர்களாக மாற்றுவதில் ஆர்வம்மிக்க விழைவு கொண்டோராக இருப்பினும் அதனையும் மீறி, போலந்துக்கு எதிராகக் காப்புச் சுங்கவரிகள் சுமத்த வேண்டுமெனக் கோரியதன் மூலம், அதன் சாதகக் கூறுகளை உறுதி செய்கின்றனர். போலிஷ் தொழிலதிபர்களுக்கும், ருஷ்ய அரசாங்கத்துக்கும் இருக்கின்ற பாதகக் கூறுகள், போலிஷ் தொழிலாளர்களிடையே சோஷலிசக் கருத்துகள் அதிவேகமாகப் பரவுவதிலும், அறிக்கையின் வளர்ந்துவரும் செல்வாக்கிலும் வெளிப்படுகின்றன.

ருஷ்யத் தொழில்துறை வளர்ச்சியை விஞ்சிச் செல்லும் போலிஷ் தொழில்துறையின் அதிவேக வளர்ச்சியானது, அதனளவில் போலிஷ் மக்களுடைய வற்றாத உள்ளாற்றலின் ஒரு புதிய நிரூபணமாகும். விரைவில் நடந்தேறப் போகும் போலந்தின் தேசிய மீட்சிக்கு ஒரு புதிய உத்தரவாதமும் ஆகும். மேலும், ஒரு சுதந்திரமான வலுமிக்க போலந்து மீண்டெழுவது போலிஷ் மக்களுக்கு மட்டுமன்றி, நம் எல்லோரின் அக்கறைக்கும் உரிய விஷயமாகும். ஐரோப்பிய நாடுகளிடையே உளப்பூர்வமான சர்வதேச ஒத்துழைப்பு என்பது, அந்நாடுகள் ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையாகத் தன்னாட்சி பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பாட்டாளி வர்க்கப் பதாகையின்கீழ் நடைபெற்ற 1848-ஆம் ஆண்டுப் புரட்சியானது, மிஞ்சிப் போனால், பாட்டாளி வர்க்கப் போராளிகளை வெறுமனே முதலாளித்துவ வர்க்கத்தின் வேலையைச் செய்யவைத்தது. புரட்சியின் இறுதி விருப்ப ஆவண நிறைவேற்றாளர்களான (testamentary executors) லூயி போனப்பார்ட்[24], பிஸ்மார்க்[25] இவர்கள் மூலமாக இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தது. இம்மூன்று நாடுகளும் சேர்ந்து செய்ததைவிடப் புரட்சிக்காக 1792 முதலே போலந்து நாடு அதிகமாகச் செய்துள்ளது. ஆனால், 1863-இல் தன்னிலும் பத்து மடங்கு பெரிதான ருஷ்யப் படையிடம் தோற்றபோது, போலந்து நாடு அதன் சொந்தப் படைபலத்தோடு மட்டுமே களத்தில் விடப்பட்டது.[26] போலிஷ் பிரபுக்குலத்தால் போலந்தின் சுதந்திரத்தைப் பேணிக் பாதுகாக்கவோ, [பறிபோனபின்] மீட்டெடுக்கவோ முடியவில்லை. குறைந்தபட்சமாகச் சொல்வதெனில், இன்று முதலாளித்துவ வர்க்கத்துக்கு இந்தச் சுதந்திரம் ஒரு பொருட்டன்று. என்றபோதிலும், ஐரோப்பிய நாடுகளின் இணக்கமான ஒத்துழைப்புக்குப் போலந்தின் சுதந்திரம் இன்றியமையாதது. போலந்தின் இளம் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இந்தச் சுதந்திரத்தைப் பெற்றுத்தர முடியும். அதன் கைகளில் இந்தச் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கும். போலந்தின் சுதந்திரம் போலந்துத் தொழிலாளர்களுக்கு எந்த அளவுக்குத் தேவையோ அதே அளவுக்கு அது ஐரோப்பாவின் மீதமுள்ள பகுதிகள் அனைத்திலுமுள்ள தொழிலாளர்களுக்கும் தேவையானதாகும்.

ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

லண்டன், பிப்ரவரி 10, 1892.

Exit mobile version