கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
அத்தியாயம்-1
முதலாளிகளும் பாட்டாளிகளும்[ஏ4]
இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும்[ஏ5] வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.
[ஏ4] முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது [இன்றைய] நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள்; கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது [இன்றைய] நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருப்பவர்கள். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
[ஏ5] அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென்[31] (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் (Maurer)[32] நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன் (Morgan)[33] வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, இறுதியில் பகைமை பாராட்டும் வர்க்கங்களாகப் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும் (guild-master)[ஏ6] கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.
[ஏ6] கைவினைக் குழும எஜமான் (guild-master), அதாவது, கைவினைக் குழுமத்தின் முழு உறுப்பினன், கைவினைக் குழுமத்துக்கு உட்பட்ட எஜமான், கைவினைக் குழுமத்தின் தலைவன் அல்ல. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.
எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன. அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வியாபாரம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாக விற்பனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் – ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.
நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்துறை அமைப்புமுறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டவர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்துறை அமைப்புமுறையால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை இனிமேலும் நிறைவு செய்ய இயலவில்லை. அதன் இடத்தில் பட்டறைத் தொழில் அமைப்புமுறை வந்தது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. தொழில்முறையில் இணைந்து செயல்பட்ட வெவ்வேறு கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.
இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது. இந்த சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாக ஆக்கின. பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.
நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியைத் அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தனது மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.
இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு – உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.
முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது. மத்திய காலக் கம்யூனிலோ[ஏ7] ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது. இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் ‘மூன்றாவது வகையின’ (third estate)[34] மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன்பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
[ஏ7] ”கம்யூன்” என்பது ஃபிரான்சில் புதிதாக உருவாகி வந்த நகரங்களுக்கு இடப்பட்ட பெயராகும். நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்தும் எஜமானர்களிடமிருந்தும், “மூன்றாவது வகையினம்” (Third Estate) என்ற முறையில் வட்டார சுயாட்சியையும், அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கும் முன்பே, அந்நகரங்கள் இப்பெயரை ஏற்றன. பொதுவாகக் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும், அதன் அரசியல் வளர்ச்சிக்கு ஃபிரான்சும், மாதிரி நாடுகளாக இந்த அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
இத்தாலி, ஃபிரான்சு ஆகிய நாடுகளின் நகரவாசிகள், அவர்களின் நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்து சுயாட்சிக்கான தொடக்க உரிமைகளை விலைகொடுத்து அல்லது போராடிப் பெற்ற பிறகு, தங்களின் நகர்ப்புற சமூகங்களுக்கு [“கம்யூன்” என்னும்] இப்பெயரை இட்டுக் கொண்டனர். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
பிற்போக்காளர்கள் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடுகால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்ப்புகளையும், சிலுவைப் போர்களையும்[35] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.
மக்கள் தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.
முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிப் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?
ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.
இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் – இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும், நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது; ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.
எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.
முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற விற்பனைப் பொருள்களைப் போன்று ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.
பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்கு தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாக ஆகிவிடுகிறார். அவரது வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால் ஒரு பண்டத்தின் விலை – ஆகவே உழைப்பின் விலை[36] – அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்கு கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது. நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழில்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீர்ர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் (officers and sergeants) கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமல்ல, நாள்தோறும் மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக, மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.
உடலுழைப்புக்கான திறமை மற்றும் உடல் வலிமை எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்வித தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.
ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், மற்றும் இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.
நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுவாகப் பரந்த வணிகத் தொடர்புகளின்றிக் குறுகிய அளவில் வணிகம் செய்வோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறைமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகி விடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.
பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.
ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.
அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பலநூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.
தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.
மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. முதலில் பிரபுக் குலத்துடன் போராட வேண்டியிருந்தது; அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும்போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது; எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்துவரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.
மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.
இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்வுப் போக்கானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.
இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.
அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக்கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.
பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.
ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பதுபோலவே இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பதுபோலவே அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டன. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.
மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கையகப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கையகப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கையகப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.
இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேலமைந்துள்ள அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] அசைய முடியாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.
முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.
பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் – முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் – நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.
இதுநாள்வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன் அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.
(அத்தியாயம்-1 முற்றும்)
அடிக் குறிப்புகள்
[27] போப், ஒன்பதாம் பயஸ் (Pius): 1846-இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிதவாதியாகச் கருதப்பட்டவர். ஆனால், சோஷலிசத்தின் எதிரியாகச் செயல்பட்டு வந்தார்.
[28] ஜார், முதலாம் நிக்கலாய்: 1948-ஆம் ஆண்டுப் புரட்சிக்கு முன்பிருந்தே ஐரோப்பாவின் போலீஸ் அடக்குமுறை அதிபராகச் செயல்பட்டவர். சோஷலிசத்தின் எதிரியாக விளங்கினார்.
[29] மெட்டர்னிக் (Metternich), கிளமென்ஸ் (1773-1859): ஆஸ்திரிய நாட்டு இளவரசர். அரசியல் வித்தகர். 1809 முதல் 1821 வரை ஆஸ்திரியாவின் அயல்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1821 முதல் 1848 வரை ஆஸ்திரியாவின் அதிபராக இருந்தார். வெறிகொண்ட பிற்போக்காளார். ஐரோப்பியப் பிற்போக்கின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக இருந்தார். ஃபிரெஞ்சு நாட்டுப் பிற்போக்காளர் கிஸோவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சோசலிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்.
[30] கிஸோ (Guizot, 1787-1874): பிரான்ஸுவா பியேர் கியோம் கிஸோ என்பது இவரின் முழுப்பெயர். இவர் ஃபிரெஞ்சு வரலாற்று ஆசிரியர். முதலாளித்துவக் கருத்தோட்டம் கொண்டவர். அரசியல் வித்தகர். அமைச்சராகவும் செயலாற்றி உள்ளார். 1840 முதல் 1848 வரை ஃபிரான்சு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை நடைமுறையில் இயக்கியவர். அவை பெரும் முதலாளிகளின் நலன்களைப் பேணும் கொள்கைகளாக இருந்தன. பாட்டாளி வர்க்கத்தின் தீராப் பகையாளியாகச் செயல்பட்டார். பிரஷ்ய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கார்ல் மார்க்ஸை பாரிசிலிருந்து வெளியேறும்படி ஆணை இட்டவர்.
[31] ஹாக்ஸ்தவுசென் (Haxthausen, 1792-1866): ஆகுஸ்த் ஹாக்ஸ்தவுசென் என்பது இவரது முழுப்பெயர். பிரஷ்யாவைச் சேர்ந்த பிரபு, எழுத்தாளர். அரசாங்க அதிகாரியாகச் செயல்பட்டவர். ருஷ்யாவின் நிலவுடைமை உறவுகளில் கிராமச் சமுதாய அமைப்பின் மீத மிச்சங்களை விளக்கி ஒரு நூல் எழுதியுள்ளார்.
[32] மவுரர் (Maurer, 1790-1872): கியோர்க் லுத்விக் மவுரர் என்பது இவரது முழுப்பெயர். பெயர்பெற்ற ஜெர்மன் வரலாற்று அறிஞர். முதலாளித்துவக் கருத்தோட்டம் கொண்டவர். தொன்மைக் கால, இடைக்கால ஜெர்மனியின் சமூக அமைப்பை ஆராய்ந்தவர்.
[33] மார்கன் (Morgan, 1818-1881): லூயிஸ் ஹென்றி மார்கன் என்பது இவரது முழுப்பெயர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். பெயர்பெற்ற இனப்பரப்பு விளக்கவியல் அறிஞர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொடக்க காலச் சமூகம் பற்றிய வரலாற்று ஆசிரியர். இயல்பான பொருள்முதல்வாதி.
[34] மூன்றாவது வகையினம் (The Third Estate): முடியாட்சி மன்னர் காலத்தில் ஃபிரெஞ்சு அரசியல் களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாக்கம். சமூகம் மூன்று வகையினமாகப் பிரிக்கப்பட்டது. முதலாவது வகையினம் (The First Estate) மதகுருமார்களையும் (Clergy), இரண்டாவது வகையினம் (The Second Estate) பிரபுக்களையும் (Nobility) கொண்டது. மூன்றாவது வகையினம் சாதரணப் பொதுமக்களைக் (Commeners) கொண்டது. முடிமன்னர் எந்த வகையினத்திலும் சேராதவர். மூன்று வகையினத்துக்கும் அப்பாற்பட்டவர். மூன்றாவது வகையினம் முதலாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியது. இவர்கள் அனைவருக்கும் உரிய பொதுவான தன்மை என்னவெனில், இவர்கள் பெருஞ்செல்வம் படைத்தவர்கள் அல்ல. ஆனாலும், மற்ற இரு வகையினத்தவருக்கும் கடுமையான வரிப்பணம் செலுத்த வேண்டும்.
[35] சிலுவைப் போர்கள்: 11-13 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நிலப்பிரபுக்களும், உயர்குடி வீர்ர்களும் கிழக்கு நாடுகள் மீது நடத்திய இராணுவ- காலனி பிடிக்கும் படையெடுப்புகளைக் குறிக்கிறது. ஜெரூசலத்திலும் மற்றும் பிற ”புனிதத் தலங்களிலும்” உள்ள கிறிஸ்துவப் புனித சின்ன்ங்களை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டல் என்னும் மதப் பதாகையின்கீழ் இந்தப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன.
[36] உழைப்பின் விலை: மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமான ”உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
(அத்தியாயம்-1 அடிக்குறிப்புகள் முற்றும்)