Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கம்யூனிசம் ஒரு காதல் கதை-புத்தக அறிமுகம்:தெபோரா ஜோர்தன்

I 

ஜெஃப் ஸ்பேரோவின், ‘கம்யூனிசம் : ஒரு காதல் கதை’ எனும் நூல், காதல் மற்றும் நடவடிக்கையியல் அடங்கிய வரலாறு சார்ந்த, இலக்கியம் குறித்த உலகளாவிய விவாதங்களின் இடையீடு மட்டுமல்ல, ஆஸ்திரேலிய சுயசரிதை பதிவுகளின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் ஆகும். இந்நூல் ஈர்ப்பு நிறைந்த நாடகச் சொல்லாடல்களால் உருவாக்கப்பட்டது மட்டுமின்றி, இதனது ஆசிரியர் ஸ்பேரோவிற்கு இக்கலகக்காரனது வாழ்வு மற்றும் அவனது பன்னாட்டு, உலகு சார் கம்யூனிச இயக்கங்களின் பால் கொண்டிருந்த பொறுப்பு ஆகியவை குறித்து அறிந்து கொள்ள ஆர்வமுடைய புதிய வாசகர்களையும் பெற்றுத் தர வல்லது.  

 

1960களில் துவங்கிய புதிய இடதுசாரிகளின் விமர்சனச் சூழல் உருவாகிய காலத்தில் செயல் துடிப்புடன் நின்ற கைடோ கார்லோ லூஜி பராச்சி (1887-1975), அவரது வாழ்வு, காதல்கள், அரசியல் உணர்வு மற்றும் செய்கை ஆகியவற்றால் பரவலாக அறியப்படுகிறார். ‘கம்யூனிசம் ஒரு காதற் கதை’ நூலானது காதலர்கள் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான உறவுகள், அவர்களிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உணர்ச்சிமிகு சிந்தனைகள், மற்றும் துரிதவாதப் பாலுறவு அரசியல் எனும் இவ்வகைக் கூறுகளால் ஓரங்களிலிருந்து அது மத்திய நிலைக்கு இழுக்கப்பட்டு வந்துள்ளது போன்ற பிரச்சினைகளைப் பேசுகிறது.  

 

அதிகாரக் கட்டமைப்புகளில் எவ்வாறு கருத்தியலானது சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் கம்யூனிச நடைமுறையாக்கலில் செயல்பட்டுள்ளது என்றும் இது விளக்குகிறது. பெரும் போரிற்குப் பிறகு ஆஸ்திரேலிய இடதுசாரிகளிடையே பராச்சி ஒரு தனித்தன்மை வாய்ந்த மார்க்சியராக இருந்தார் என்று ஸ்பேரோ சித்தரிக்கிறார். அவர் குறித்த இப்பெருங்கூற்று இச்சுயசரிதையைப் பெரிதும் கவனதிற்;குள்ளாக்கியுள்ளது.  

 

மெல்போர்னில் 1887ல் பிறந்த பராச்சியின் தந்தை ஒரு வானியலாளர். பராச்சி ஆஸ்திரேலிய வெள்ளை ஜனநாயகச் சூழலில் உருவான ஒரு கலகக்கார இடதுசாரிச் சாய்வாளர். பிள்ளைப் பிராயத்தில் அவர்கள் புதிய யுகம் மற்றும் ஆஸ்திரேலியக் கட்டமைப்பு ஆகியவற்றின் நிலையை உணர்ந்தனர். பெர்னார்ட் ஓ டௌட் எனும் தீர்க்கதரிசி மற்றும் போராளிக் கவிஞர் கண்ட கனவை நனவாக்க அவர்கள் விழைந்தனர். மாணவர் குழாம், இலக்கிய, மதவாதம் நீங்கிய மார்க்சியக் குழாம்களில் காணப்படும் இளைஞர்களாகிய லெஸ்பியா ஹார்போர்ட், எஸ்மன்ட் கீயோ, பெர்ஸி இயர்ஸ்மேன், பெர்ஸி லெய்ட்லர், கிறிஸ்டியன் ஜோலி ஸ்மித், கேத்தரின் பிரிச்சார்ட் ஆகியோர் முந்தையத் தலைமுறை விக்டோரியனிச வகை தூய மதவாதம் மற்றும் சடங்குகள் ஆகியவற்றைச் சாடியும் அவற்றை நீக்கவுமாக விழைந்தனர்.  

 

பராச்சி உயர்வகுப்பினருக்கான தனியார் இலக்கணப் பள்ளிகளில் பயின்று வந்தார் எனினும் மெல்போர்ன் பல்கலைக்கழகத் தேர்வுகளில் அவர் பங்கெடுக்கவில்லை. ஏனெனில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவானது ஒரு புதிய ஜனநாயக எழுச்சியைப் பிரகடனம் செய்வதாக இருந்தது என்றும், சூரியக் கடவுளின் மரபு சார்ந்த உதயத்தைக் காண அது தயாராக இருந்தது எனும் சூழலில், பராச்சியின் கல்வி எஸ்மான்ட் ஹிக்கின்ஸ் மற்றும் வான்ஸ் பால்பேரைப் போல் லண்டனில் ஃபேபியன் மற்றும் கூட்டுறவு சோசலிசக் கருத்துக்களால் நெருக்கமாக உணரப்பட்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் நிகழ்ந்து வந்தது.  

 

பெரும் போருக்கு முந்தைய கடுங்காலம் குறித்த ஸ்பேரோவின் ஆய்வுகள் பராச்சியின் அறிவெழுச்சி குறித்து பெரிதும் தேடல் நிகழ்த்துகிறது. எப்போது பராச்சிக்கு மார்க்சிய அறிவெழுச்சியின் தரிசனம் கிட்டியது? ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர் பலருக்கும் இது கிட்டியதெனினும், ஸ்பேரோ இதனைத் தேடிக் கண்டார். பராச்சியைப் பொறுத்தவரை இது அவருக்குப் பெண்களுடனான காமத்தின் மூலம் வாய்த்தது. 

 

பராச்சி ஒரு அசாதாரணமான காதலர் மற்றும் பரந்த நோக்கமுடைய கோட்பாட்டாளர். முதல் உலகப் போருக்கென இராணுவச் சேர்ப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் அவர் எதிர்ப்பு முகாம் நடத்திய போது யாரா நதிக்கரையில் கைது செய்யப்பட்டார். பராச்சி கட்டாய இராணுவச் சேவைக்கு எதிரானவர். போருக்கு எதிரான அவரது கருத்து வர்க்க ஆய்வுகள் கொண்டது. பெரும் போரானது பலரது வாழ்வில் சேதங்கள் பலவற்றை உருவாக்கியது. அவர்களது அரசியல் நிலைமைகள் குறித்த பல கேள்விகளை அது எழுப்பியது. இது குறித்த விளக்கங்களை, ‘உங்களுக்கு நீங்களே துரோகம் செய்ய விரும்புகிறீர்களா?’ எனும் அவரது கட்டுரை மூலம் உணரலாம்.  

 

1920ல் பராச்சி கம்யூனிஸ்டு இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதால் ‘புராலிடேரியட்’ இதழை அவர் உருவாக்கினார். 1922ல் தன் இரண்டாம் மனைவி நியூராவுடன் பராச்சி ஐரோப்பா சென்றார். வெய்மரில் கம்யூனிச இயக்கக் கட்டுரை ஒன்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1924ல் கம்யூனிச இயக்கத்தில் மீண்டும் இணைந்தார். மெல்போர்னில் இயக்கம் சிதைவுற்றதும் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். நியூராவுடம் ஆசியாவிற்குச் சென்று விக்டோரியன் லேபர் கல்லூரியில் உரை நிகழ்த்தியதோடு, ‘கம்யூனிஸ்ட்-கம்யூனிஸ்ட் ரிவ்யூ’ ஆகிய பத்திரிகைகளுக்கு உதவி ஆசிரியராகவும் பராச்சி இருந்தார்.  

 

ரஷ்யாவில் பெட்டி ரோலந்துடன் இணைந்து கம்யூனிஸ்ட் ஊடகங்களுக்குப் பணிபுரிந்ததை ஸ்பேரோ நினைவுகூர்கிறார். இத்தருணத்தில் கட்சியுடன் இணைந்திருந்த அவர் இரண்டாம் உலகப் போரைக் கட்சி ஆதரித்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறினார். இக்காலத்தில் சமூக வரலாற்றின் தடித்த பக்கங்களை நோக்கினால் வலுவான இத்தகு படிமங்கள் கண் முன் எழுவதை நாம்; காணமுடியும்;. 

 

இக்காலத்தில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் இலக்கியப் போக்குகளை ஆய்ந்தால் ‘போஸ்ட் தியரி’ அல்லது கோட்பாட்டுக்குப் பிந்திய நிலை என்ற ஒன்றைக் காணலாம் என்று டேவிட் கார்ட்டர் கூறுகிறார். இது எதிர்க் கோட்பாடு அல்ல, மாற்றாக உள்ளடக்கம், செயல்பாடு மற்றும் வாசகர் குறித்த ஒரு கூடுதலான பார்வை என்பதே சரியானது ஆகும்.  

 

‘கம்யூனிசம் ஒரு காதற் கதை’ நூல் படைப்பியக்கம் கொண்ட ஓரு புதினமல்லாத ஒன்று. ஆனால் வாழ்வு ஒன்று குறித்த கதையாடல். ஈடற்ற திறனுடன் ஸ்பேரோவின் நூல் காட்சிகளை நகர்த்திச் செல்கிறது. அது நெருக்கம் நிறைந்த கடிதங்கள், நேர்முகங்கள், நாடகங்கள், அரசுப் பெட்டகங்கள் என்று இத்தனை விவரங்களும் கொண்டதாக இருந்தது. நாவலாசிரியர் சுமந்தா லெகோரே அட்டைப் பக்கத்தில் குறிப்பிட்டதைப் போல், ஒரு நாவலுக்குரிய அனைத்து திருப்பங்களும் உடையதாக இந்து நூல் இருக்கிறது.  

 

பராச்சியின் வாழ்க்கையில் நெருக்கமாக உணரத்தக்க பல நிகழ்வுகள், தேடலுக்கும் விளக்கத்திற்குமான அவசியம் நிறைந்ததாக இருந்தன. வாசகர்களுக்கு உலக வரலாற்றின் முக்கிய மனிதர்கள் பற்றிய கணிசமான தகவல்களும் அதில் காணக் கிடைத்தன. எமிலி டேவிசன் என்ற பிரபலப் பெண்ணியலாளர்-அரசுக் குதிரையால், விபத்தொன்றில் சிக்கி மாண்டவர்-அவர் இந்நூலில் காணப்பட்ட எழுச்சி கொண்ட பெண்கள் மற்றும் அவர்களின் தீவிரம் குறித்த விளக்கங்களைப் பதிவு செய்துள்ளார். 

 

இவ்வகையிலான வாசிப்பு, இவ்வகையிலான மீள்தேடல் ஆகியனவே வரலாற்றில் பெண்ணியலாளர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் போன்றோர் காலங்காலமாக நிகழ்த்தி வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக இக்கருத்து குறித்தும், நடவடிக்கை குறித்தும் அவர்கள் உரத்துச் சிந்தித்தனர். இடதுசாரி அறிவுஜீவிப் பெண்கள் சிலரது சுயசரிதையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜீன் டெவ்வனி, மேரி பிட், லெஸ்பியா ஹார்ட்போர்ட், எட்னா ரயான், ஐலீன் பாமர் ஆகியோரே அவர்கள். இவர்களது படைப்புகளும் விரிவாகப் பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன. சார்மியான் கிளிப் பற்றிய நாடியா வீட்லியின் சுயசரிதை ஈர்ப்பு மிகுந்த ஒரு கதையாடலாக திருப்பங்களும் விறுவிறுப்பும் கொண்ட ஓட்டம் நிறைந்ததாக அமைந்துள்ளது. சில ஆஸ்திரேலிய இடதுசாரிகளின் வாழ்வும் அங்கு காணக் கிடைக்கும் 1960களின் பிற்பகுதியில் புதிய இடதுசாரிகள் முதியோரின் தோல்வி மிகுந்த தத்துவார்த்தக் கோளாறுகளை விமர்சித்துள்ளனர்.  

 

ஸ்டூவர்ட் மெக்கின்டைரில் வரலாறாகிய, ‘சிவப்புச் சித்தாந்தவாதிகள் : ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் மற்றும் சட்டவிரோத நிலை’ என்ற நூல் தூய்மையான தத்துவார்த்தத் தேடலில் விளைந்த கடுப்பேற்றும் கர்வ நிலைகளை சாடியிருந்தது. அலைன் டுரைன் விவாதிப்பது போல் சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வளர்ச்சிவாதத்தால் பொலிவிழந்து, பாட்டாளி இயக்கம், சோவியத் நாடு மற்றும் கட்சி ஆகியன வீழ்ச்சியுற்றது கவனிக்கத் தக்கதல்லவா? 

 

II 

 

ஒரு வரலாற்று சுயசரிதை எழுதுபவர் வாசகரின் தேவையைக் கருத்தில் கொண்டு எழுதும்போது, அத்தகு செயல்பாட்டாளரின் உணர்ச்சி மற்றும் தியாகங்கள் குறித்து சிந்திக்கும்போது, மிகுந்த உழைப்பைத் தர வேண்டியுள்ளது. இதனை ஜெஃப் ஸ்பேரோ சாதித்துள்ளார். மிக்கத் திறன் மற்றும் சட்டத்துடன் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்தும், பராச்சி பற்றியும் கட்சியில் பெண்கள் பங்களித்தது பற்றியும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துவக்க காலத்தில் அவர்களின் நிலை குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.  

 

லெஸ்பியா ஹார்போர்டை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு கவிஞர் மற்றும் தீவிர செயல்பாட்டாளர். அவருக்கு பராச்சியுடன் இருந்த உறவு அனைத்தையும் நுட்பம் மற்றும் திறனுடன் சொல்லப்பட்ட விதத்தில் அவர்கள் பற்றி ஆய்வு செய்யத் தூண்டுமளவு அமைந்துள்ளது. ஸ்பேரோ லெஸ்பியாவின் கவிதைகளை வாசித்து அறிந்துள்ளார். பின் அவை எழுதப்பட்ட காலத்தினை நன்கு உணர்ந்து அவர் வாழ்க்கையின் அடிப்படைகளின் வழி பொருளைச் சரியாக விளங்கிக் கொள்ளும்படி சித்தரித்துள்ளார்.  

 

கேத்தரின் பிரிச்சர்டு எனும் ஆஸ்திரேலிய நாவலாசிரியையுடனான கப்பல் மேல்தளத்தில் நிகழ்ந்த காமம் நன்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட புதிய செய்திகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இத்தகு அறிவுஜீவிகளின் பாலியல் அரசியல் சார்ந்த சொல்லாடல்கள் முழுமையுடையனவாகவும் நுட்பமான வேறுபாடு உடையனவாகவும் உணர்ச்சி, வேட்கை இவற்றின் தூண்டுதலால் உருப்பெற்றனவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்கதையாடல் ஆண் புலனால் அறியப்பட்டுச் சொல்லப்பட்டுள்ளது. ஸ்பேரோ தம் எழுத்தில் மரபு வழியான ஒரு நிலைப்பாட்டையே புரட்சிகரமான பாலியல் விடுதலை எதிர்காலம் குறித்த விவாதங்களில் மேற்கொண்டுள்ளார்.  

 

லெஸ்பியா ஒரு பாலியல் கலகக்காரியா இல்லையா? இது அவருடைய கவிதைகளில் பிரதிபலிக்கிறதா இல்லையா? ஆகவே அவரை எவ்வாறு மரபுசார் பெண்ணியக் கூறுகளுடன் அடையாளம் காட்ட இயலும்? பராச்சி என்ற அவள் காதலன் வேறொரு பெண்ணை மணமுடிக்கும்போது எதற்காக அவள் தான் துரோகம் செய்யப்பட்டதாகக் கதற வேண்டும்? அவரது புதிய மனைவியை அவள் தனக்குப் போட்டியாளாகக் காணக்கூடாதல்லவா? பராச்சியின் திருமணம், சொத்து, குடும்பம் குறித்த முதலாளியக் கோட்பாடுகள் பற்றி அவள் அறிவாள் இல்லையா? அது மார்க்ஸ், கேல்ஸ்வொர்த்தி, எங்கெல்ஸ் ஆகியோரின் சிந்தை இல்லையா? அவர்களுக்கு இப்படிப்பட்ட வெளிப்படையான உறவுகள் இருந்தது இல்லையென்றும் பராச்சிக்கு அவர்தம் காதலிகளுடன் உள்ள இணைவு மற்ற ஆண் பெண்டிரைப் போன்றதல்லவே? 

 

பழைய விவரங்களில் ஸ்பேரோ மூழ்கும்போது அபாயங்கள் உள்ளன. நடுவாந்தரமான பாத்திரத்தில் ஒரு சுயசரிதையில் கவனம் செல்லும்போது மற்ற நடிகர்கள் ஒதுங்கியே கிடக்கின்றனர். வேன்ஸ் மற்றும் நட்டி பாமரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நண்பர்கள், சமூகம் குறித்த பரந்த மனப்பான்மை உடையவர்கள். சோசலிச ஈர்ப்புடையோர் எனினும் காயடிக்கப்பட்ட தேசியவாதிகள். வான்ஸ், பாமர் ஆகியோர் நாடுகளைக் கடந்து சிந்திக்கும் பராச்சி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது எதற்காக அடர்ந்த புராணிகத் தத்துவார்த்தங்களுடன் தன்னை இருத்திக் கொள்ள வேண்டும்? ஸ்பேரோ கலாசார தேசியவாதங்களின் திரைகளுக்குப் பின் பல்வேறு முதன்மை ஆதாரங்களின் துணைகொண்டு உள்நுழைந்தார். அவர்களின் கூற்றுகளிலிருந்தே உண்மையை இறுகப் பற்றினார். பாமர்களை அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் களஞ்சியங்களின் துணைகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அளவில் சீர்திருத்தம் செய்தார். பல்வேறு திசைகள் கொண்ட அவர்களது சமத்துவக் கோட்பாடுகளின்பாலுள்ள அனுபவத்தைக் கொண்டு அவர் புதுமையான கருத்துக்களை உருவாக்கினார். நெட்டி வான்ஸிடம் 1904ம் ஆண்டு கடிதங்கள் வாயிலாக அவர்  தெரிவித்தது, ‘சோசலிசத்தைக் கண்டு நான் எரிச்சலடைகிறேன்’ என்பதாகும். 

 

‘கம்யூனிசம் : காதல் கதை’ பராச்சியின் கம்யூனிசத்துடனான உள்முக மற்றும் வெளிமுக உறவுகள் பற்றிய கட்சியின் முக்கிய அங்கங்கள் குறித்த விவாதமாகும். கட்சியின் வளர்ச்சி மற்றும் மாறுதல்கள் ஆகியன பராச்சியின் பெண்களுடனான உறவின் அடிப்படையில் அமைந்த முப்பட்டைக் கண்ணாடியில் விரிந்த வர்ணங்களான மனிதநேயம் மற்றும் பராச்சியின் பரந்த மனப்பான்மையுடைய ஆளுமை ஆகியவற்றின் விளக்கமாகும்.  

 

நமது தோழர்கள், ட்ராட்ஸ்கியிஸ்டுகள் பற்றிக் கூறினால் அவர்கள் சமயலறை, பணியிடங்கள், படுக்கையறைகளில் எவ்வித மாந்தர்களாய் இருந்திருக்க வேண்டும் எனும் கதையாடல்தான் இவர் பற்றிய குறிப்புகள். இதுதான் இவரது ஆளுமை. கொள்கை மிகுந்த இம்மனிதர்கள் தங்களது வரவேற்பறையைக் கடந்து தெருவோரத்திலும் மரக்கிளைகளிலும் தங்களைத் தாங்களே ஊடகங்களின் பார்வைக்காக வாழ்ந்து காட்ட வேண்டியவர்களாக ஆக்கிக் கொள்ளும் அவலம் தான் நாம் காண்பது. 

 

III 

 

பராச்சியின் இரண்டு மாபெரும் ஆசைகள் மற்றும் வேட்கைகள் குறித்த ஒப்புமையை ஸ்பேரோ காட்டுகிறார். பல பெண்கள் மீது அவரது வேட்கை. கம்யூனிசம் என்ற தான் நம்பிய ஒரு அரசியல், அறிவுசார் கட்டமைப்பின் மீது ஏற்பட்ட காமம் ஆகியனவே அவை. கம்யூனிசம் பெண்களின் பங்கெடுப்பைப் பொறுத்தவரை பலவீனமாகவே இருந்தது எனினும் புரட்சிக்கு முன்னும் பின்னும் அது ஊதியமளிக்கப்பட்ட உழைப்பாளி, அளிக்கப்படாத உழைப்பாளி என்ற அதன் பார்வையில் கோளாறு உள்ளது. பராச்சியின் வாழ்க்கை பெண்கள் மீதான காமம், அரசியல் செயல்பாடு குறித்த விருப்பம் என்பதன் இணைப்பைத் தேடும் வேட்கையினால் உருக்கொண்டது. கருத்தாக்கம் என்றளவில் சற்று லேசானதாக இருந்தாலும் விசாரணைக்குரியதாகும் இது.  

 

சமூகவியலாளர்கள் தம் காலத்தில் அடையாளம் மற்றும் செயல்பாடு குறித்தத் தேடல்களில் அவை எவ்வாறு சமூக இயக்கம் பெறுகின்றன என்ற ஆய்வில் இத்தாலியச் சமூகவியலாளரான பிரான்சிஸ்கோ அல்பரானி குறிப்பிடுவது போல், நிறுவனமயமாக்கல், வளர்ச்சியுறல் அடிப்படைகளில் தேர்ந்து தெளிந்துள்ளனர். ஸ்பேரோவின் கம்யூனிசம் பற்றியும் ஆஸ்திரேலியப் போராளி இயக்கங்களில் அது எவ்வாறு முதலாளியத்திற்கு மாற்றாக இருக்கக்கூடும் என்பது பற்றியுமான தேடல்கள் பராச்சியின் கருத்துக்களை வலுவேற்றுவதாக இருப்பினும் போரின் இடைக்காலப் பகுதியில் ஆஸ்திரேலியாவில் புரட்சி இயக்கம் பெண் உரிமைகள் குறித்தும், 1960க்குப் பிறகு உதயமான புதிய சமூக இயக்கங்கள் குறித்தும், ஸ்பேரோ பெரும் சொல்லாடல்களை நிகழ்த்தியுள்ளது தெரிய வந்துள்ளது.  

 

ஆண், பெண் இருவர் குறித்த பழமையான அடையாளங்களை நீக்குதல் குறித்த செய்திகளையும் அது தரத் தவறுவதில்லை. பராச்சியிடம் ஆஸ்திரேலியாவின் கல்வித்துறை சாராத முதல் விமர்சகரான நெட்டி பாமர் வினவுகிறார், ‘உங்களுடைய கவிதை உருவாக்கத்திற்கான ஆவலைக் கொண்டு என்ன செய்ய இயலும்?’ என்று. ‘நீங்கள் இவ்வாறுதான் எழுதும் அனைத்தையும் காண வேண்டும் என்று நினைக்கிறேன்;, ஆனால், ஒன்று அதன் பின்புலம் குறித்த தகவல்கள் இல்லாமல் முழுமையாகாது. ஒரு பெரிய நூல் எழுதினால் அந்நூல் விசித்திரமான பாக்கள் நிரம்பியதாக, பல்வேறு ஆதாரங்கள், விளக்கங்கள் உடையதாக இருக்க வேண்டும். ஆனால் அது நீங்கள் இறந்த பின்பே வெளியிடப்படும் என்றே நினைக்கிறேன்.’ பராச்சி இதனை நெட்டியின் மகளுடன் இணைத்துஇணைத்து நினைவு கூர்கிறார்.  

 

அம்மகள் இவற்றை மிகுந்த முழுமை கொண்டதாக உணர்கிறார். நாம் ‘கம்யூனிசம் : ஒரு காதல் கதை’ நூலைப் படிக்கும்போது, பராச்சியின் 1970களில் எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் சித்தாந்தக் கட்டுரைகள் ஆகியவற்றையும் இத்துடன் சேர்த்துப் படிக்கும்போதே இந்நூல் முழமையடைய இயலுமென நாம் உணர்வோம். ஆஸ்திரேலிய இடதுசாரிகள் பற்றிய பதிவுகளை நாம் அறியும்போது ஸ்பேரோ ஒரு நூல் அட்டவணை ஒன்றையும், பராச்சி குறித்த தகவல்களுடன் மின்னம்பலத்தில் வெளியிட வேண்டும். குறிப்பாக அது மரபுடன் இணைந்துள்ளது என்பதால். ‘கம்யூனிசம் : ஒரு காதல் கதை’ என்பது பழமையான சோசலிசம் குறித்த வேட்கையின் பதிவுகள் தான்.

————————————————————————————————————————————————

 

மொழிபெயர்ப்பாளர் ரா. பாலகிருஷ்ணன் ஆங்கில விரிவுரையாளர் மற்றும் கவிஞர். தமிழ்-ஆங்கில மொழிகளில் பரவலாக மொழிபெயர்ப்பவர்.  

Exit mobile version