Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கனல் தகிக்கும் சொல் : யமுனா ராஜேந்திரன்

‘அக்ஸர்யா’ முழுப்படமும் ‘அதிர்ச்சி மனோவேதனை’ பற்றியது. படத்தில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் ‘அதிர்ச்சி மனோவேதனைக்கு’ ஆட்பட்டவர்கள். நான் எனது படத்திற்கான தலைப்பை யோசித்துக் கொண்டிருந்தபோது, பிரெஞ்சுத் தத்துவவாதி ழாக் தெரிதா ஒரு முறை சொன்னது ஞாபகம் வந்தது. ‘இந்தவிதமான அதிர்ச்சி மனோவேதனை அனுபவங்கள் மொழியினால் விளக்கப்பட முடியாதது. தீயினால் மட்டுமே பொறிக்கப்பட முடிவது’ என ழாக் தெரிதா விளக்கியிருந்தார். நான் அந்தக் கருத்தை எடுத்துக் கொண்டேன்.

                                                      

                                                                                                          சிங்களத் திரைப்பட இயக்குனர் அசோகா ஹந்தகம

1

இரண்டு கால்களையும் அகட்டி விரித்தபடி ‘மிகச் சரியாக இந்த இடத்தில்தான்’ என்கிறாள் பெண். ‘இல்லையில்லை, கொஞ்சம் வலது பக்கத்தில்’ என்கிறான் ஆண்.’ ‘எனக்கு ஞாபகம் அவ்வளவாக இல்லை, நீ சரியாக ஞாபகம் வைத்திருக்கிறாய்’ எனும் பெண், ஆடைகலைந்த நிலையில் தனது இரு கைகளையும் விரித்தபடி ‘வா, வந்து என் மீது படு. இப்படித்தான் என் மீது நீ படுத்திருந்தாய்’ என்றபடி தன் கால்களுக்கிடையில் அவனை அழுந்தப் புதைக்கிறாள். ‘அங்கே, அங்கேதான் எனது அம்மா நின்று கொண்டிருந்தாள். நம்மை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்’ எனச் சொல்லும்போது ‘இதை நீ நிறுத்து, போதும் நிறுத்து’ என்கிறான் ஆண்.

படுக்கையிலிருந்து எழுந்து, ஆவேஷத்துடன், திறந்திருக்கும் அறையின் கதவை நோக்கிச் செல்லும் பெண், கதவருகில் நிற்கும் பிறபெண்ணிடம் சென்று, அவளது தோள்களைக் குலுக்குகிறாள். பிற பெண் கலவரத்துடன் நிற்கிறாள். இப்படித்தான் ‘கனல் தகிக்கும் சொல்’ படத்தின் கதையின் உளவியல் சிடுக்கு நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சி நோய்க்கு ஆட்பட்டவள் போலப் பெண் சன்னதமாடுகிறாள். ‘என்றுமான வழமை’ எனும் நிலையில், ஆண் உணர்ச்சியற்ற ஜடம் போல் செயல்படுகிறான். இந்தக் காட்சி பட்டப்பகலில் நடக்கிறது. இதே காட்சி, இதே வகையில், இதே வசனங்களுடன் ஒரு இரவிலும் நடக்கிறது.

‘அப்புறம் என்ன நடந்தது என்பதைச் சொல்லாமல் திரும்பத் திரும்ப இதையே சொலலிக் கொண்டிருக்கிறாயே, அப்புறம் என்னதான் நடந்தது என்றுதான் சொல்’ என்கிறாள் கதவருகில் நிற்கும் பெண். பட்டப் பகலுக்கும் நீல இரவுக்கும் இடையிலான ஒரே சம்பவத்தின் விவரிப்பாகவே கதை நமக்கு முன் விரிகிறது. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்பது நமக்குத் தெரிகிறது. அவர்களது பாலுறவு வாழ்க்கையில் தீர்க்கவியலாத ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியில் நிற்கும் பிறபெண், ஆரம்பப் பெண் அழைக்கிற மாதிரி அவளது அன்னை இல்லை என்பதும் நமக்குத் தெரிகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் போக்கில் படத்தின் ‘அதிர்ச்சி மனோவேதனைக்கு’ ஆட்பட்ட மனிதர்களின் ஆளுமைகளில் பொதிந்திருக்கும் புதிர்கள் விலகத் துவங்குகிறது.

சிங்கள இயக்குனரான அசோக ஹந்தகமாவின் பேசப்பட்ட அனைத்துப் படங்களுமே அதிர்ச்சி மனோ வேதனைக்கு உள்ளான மனிதர்கள் குறித்த திரைப்படங்கள்தான். பாலுறவு முரண்களும் அரசியல் வன்முறை சார்ந்த அனர்த்தங்களும்தான் அசோகா ஹந்தகமாவின் படைப்புக்கள் சஞ்சரிக்கும் வெளி. இலங்கைத் தமிழ்ப் பெண்ணொருத்தியை பாலுறவு வன்புணர்வு கொள்ளும் சிங்கள ராணுவத்தினன் குறித்த ‘இது எனது சந்திரன்’ (2000), தமிழ் சிங்கள-இஸ்லாமிய இனங்களுக்கு இடையிலான இனமுரண்களை வரலாற்று ரீதியில் விவாதிக்கும்; ‘இந்த வழியால் வாருங்கள்’ (2004), பெண்ணென வேசமிடும் ஒரு ஆணின் மனநிலை குறித்த ‘ஒரு சிறகில் பறத்தல்’ (2002), முறைசாரா உறவுகளும், பாலுறவில் உறைந்திருக்கும் அதிகாரமும் குறித்த ‘கனல் தகிக்கும் சொல்’ அல்லது ‘அக்ஸர்யா’ ( 2005) என இவருடைய நான்கு முழுநீளப் படங்களும் இலங்கை அரசாங்கத்தினதும், புத்தமத ஒழுக்கக் காவலர்களதும் தணிக்கை வேட்டைக்கு உள்ளானவை.

‘இது எனது சந்திரன்’ மற்றும் ‘கனல் தகிக்கும் சொல்’ என இரண்டு திரைப்படங்களும் இலங்கைத் திரைப்படத் தணிக்கையைத் தாண்டி வந்தாலும், இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டவை. ‘இது எனது சந்திரன்’ இலங்கை ராணுவத்தின் கடுமையான விமர்சனத்தையடுத்தும், ‘கனல் தகிக்கும் கொல்’ இலங்கைக் கலாச்சார அமைச்சினது ஆட்சேபத்தினையடுத்தும் இலங்கையில் தடைசெய்யப்பட்டது. இதில் ‘இது எனது சந்திரன்’ திரைப்படம் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானதால், பயங்கரவாதத்திற்கு ஆதரவானதென்றும், இலங்கை ராணுவத்திற்கு எதிரானது எனவும் தடைசெய்யப்பட்டது.

‘கனல் தகிக்கும் சொல்’ இலங்கை மேட்டுக்குடியினரின் பாலுறவு அதிகாரம், முறைசாரா பாலுறவுகள், வன்புணர்ச்சி போன்றவற்றைச் சித்தரித்ததற்காகவும், புத்தமதக் கலாச்சாரத்தை அவமானப்படுத்துகிறது எனும் காரணத்திற்காகவும் தடை செய்யப்பட்டது.

‘இது எனது சந்திரன்’ சர்வதேசிய அளவில் விருதுகளை அள்ளியபின், இலங்கையில் திரையிட அனுமதிக்கப்பட்டது. ‘கனல் தகிக்கும் சொல்’ இன்று வரையிலும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட நிலையில் உள்ளது. ‘கனல் தகிக்கும் சொல்’ படம், திரைப்படத்தினது கதைக் கரு தவிரவும், ‘படத்தில் நடித்த சிறுவனின் மீது ஹந்தகமா பாலுறவுக் குற்றம் புரிந்தார்’ எனும் அடிப்படையிலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. கலாச்சார அமைச்சகமும் இலங்கைக் குழந்தைகளின் மீதான குற்றத்தடுப்புத் துறையும் இணைந்து அசோகா ஹந்தகமாவின் மிது வழக்குத் தொடுத்திருக்கின்றன.

திரைப்படத்தில் தாய்க்கும் அவளது பன்னிரெண்டு வயதுச் சிறுவனுக்கும் இடையிலான ஒரு குளியலறைக் காட்சியில், சிறுவனுக்கு முன்பாக அவனது தாய் ஆடைகளைந்து முற்றிலும் அம்மணமான நிலையில் குளியலறைத் தொட்டிக்குள் இறங்கும் காட்சியால், படம் குழந்தைத் துஸ்பிரயோகம் கொண்டது என இலங்கை அரசு வாதிக்கிறது. அந்தக் காட்சியில் சிறுவனதும் தாயாக நடித்த பெண்ணினதும் திரைச் சட்டகங்கள் தனித்தனியே எடுக்கப்பட்டு, தொகுப்பின் போது இணைக்கப்பட்டதெனவும், சிறுவனின் தாயே தனது ஒளிப்பதிவாளர் எனவும் அசோகா ஹந்தகமா தெரிவித்திருக்கிறார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தக் காரணங்களாலும்; ‘கனல் தகிக்கும் சொல்’ அதிக அளவில் உலகத் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

2

பன்னிரெண்டு வயதுச் சிறுவன். ஊயர்நீதிமன்ற நீதிபதியான அவனது தாய். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான அவனது தந்தை. இவர்களது பிரம்மாண்டமான காலனியக் காலக் கட்டுமானம் கொண்ட மாளிகை. இவர்களது வீட்டு வேலைக்காரப் பெண். இவர்கள் நால்வரும்தான் படத்தினது பிரதான கதாபாத்திரங்கள். இவர்களது ‘அதிர்ச்சி மனோவேதனைக்’ கதை சொல்லப்படும்போது, கதையின் போக்கில் இன்னும் நான்கு கதாபாத்திரங்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் முதலாமவர் ஆசிய அருங்காட்சியகத்தின் காவல்காரர். இரண்டாமவர் அவரது பெண்குழந்தை. இவளது வயது படத்தில் வரும் சிறுவனை விடவும் ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. மூன்றாமவர் மரணமுற்ற ஒரு விபச்சாரியாகவும், சமவேளையில் உணர்ச்சிகரமான தொலைக் காட்சி நாடகப் பாத்திரமாகவும் வருகிற ஒரு பெண்ணின் உயிரற்ற உடல். நான்காமவர் உயர்நீதிமன்ற நீதிபதியான பெண்ணைச் சதா தொடரும் போலீஸ் உளவாளி. இதுவன்றி தலா ஒரு காட்சிகளில் வரும் சிறுவனின் தோழனான சிறுவன் ஒருவன். அருங்காட்சியக் காவலனின் சக பாதுகாவலன் ஒருவன்.

ஜடமாகத் தோன்றினாலும் இந்தக் கதையின் இரு பிரதான நிகழிடங்களும் இரு முக்கியமான பாத்திரங்களாகவே பரிமாணம் பெற்றிருக்கின்றன. நீதிபதிகளின் குடும்பம் வாழும் புராதனமான மாளிகை முதலாவது ஜடப் பாத்திரம். இரண்டாவது ஜடப் பாத்திரம் ஆசிய அருங்காட்சியகம். இந்த இரண்டு ஜடப்பாத்திரங்களும் கதை மாந்தர்களின் காலனிய மேட்டுக்குடி மனோபாவத்தினையும், எமது நாடுகளில் நிலவும் பாலுறவு குறித்த இரண்டக நிலைகளையும் விளக்குவதற்கான வரலாற்று அடிப்படையிலான திரைப்பாத்திரங்களாக அமைகின்றன.

இங்கிலாந்தில் சென்று கல்விகற்று இலங்கை திரும்பி அதிகாரத்தின் உச்சங்களில் தவழும் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் வெலைக்காரப் பெண்ணொருத்தி, அந்தக் குடும்பத்தில் அதிகாரம் பெறும்பொருட்டு தன்னை விடவும் வயது குறைந்த அந்த வீட்டு ‘இளவரசனோடு’ பாலுறவு கொள்கிறாள். விளைவாக அவள் கர்ப்பிணியாகிறாள். இதனை அறியும் வீட்டு எஜமானர்கள், இளவரசனைப் படிப்பதற்காக வெளிநாடு அனுப்புகிறார்கள். வேலைக்காரிக்குப் பிறக்கும் பெண்ழந்தைக்குக் கருணையுடன் வீட்டு எஜமானர்கள் கல்விகற்கவும் வழிசமைத்துக் கொடுக்கிறார்கள். தாயும் மகளும் அதே வீட்டில் இருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் கல்விகற்றலின் பின் இளவரசன் வீடு திரும்புகிறான். ரகசியமொன்று அந்த வீட்டில் புதைந்து கிடக்கிறது. எஜமானர்களும் வேலைக்காரப் பெண்ணும் மட்டுமே அறிந்த ரகசியம். இந்த ரகசியத்தை வேலைக்காரியின் மகளோ அல்லது இங்கிலாந்து சென்று மீளும் இளவரசனோ அறிவதில்லை. அதாவது, அந்த வீட்டில் வளரும் இளம் பெண் தனக்குப் பிறந்த மகள் என்பதை அவன் அறிவதில்லை. அது போலவே தனது தகப்பன் இந்த வீட்டின் இளவரசன்தான் என்பதையும் வேலைக்காரியின் மகளான இளம்பெண் அறிவதில்லை.

அந்த வீட்டின் எஜமானர்கள் மரணமுற்றபின் இந்த ரகசியத்தை அந்த வீட்டில் காவித்திரிகிற ஒரேயொருத்தி வேலைக்காரி மட்டும்தான். காலங்கள் மாறுகிறது. படித்து வளரும் அந்த இளம்பெண் அந்த வீட்டின் அதிகாரம் முழுவதையும் தானே கைப்பற்ற நினைக்கிறாள். அந்த வீட்டின் இளவரசனுக்கு இப்போது மத்தியதர வயது. பெண்ணோ இளம்பெண். அதிகாரத்தைக் கைப்பற்றும் அவளது ஆசையில் அவளுக்கு வயது ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவனை அவள் தனது வலையில் வீழ்த்துவதற்காக, அவனுடன் உடல் உறவு கொள்கிறாள். (அறியா நிலையில், உயிரியல் அடிப்படையில் தனது தகப்பனானவருடனேயே உடல் உறவு கொள்கிறாள்).

இருவரும் படுக்கையில் இருக்க, இதனைக் கண்ணுறுகிறாள் இளம்பெண்ணின் தாய் (தனது மகளின் பிறப்புக்குக் காரணமான அவளது தகப்பனே அவளுடன் உடலுறவு கொள்வதை தன் கண்களால் கண்ணுறும் தாய் அதிர்ச்சியுறுகிறாள்). தன் மகள் உடலுறவு கொண்ட ‘மத்தியதர வயது’ இளவரசன்தான் அவளது தகப்பன் என்பதை மகளுக்குச் சொல்லிவிட்டுத் தாய் மரணடைகிறாள். மகள் அறியவரப்பெற்ற இந்த உண்மையினால் கலக்கமடைவதில்லை. அவளது மனத்தினுள் பழிவாங்கும் உணர்வும் வெஞ்சினமும் அதிகார வேட்கையும் கலவையாகத் தோன்ற அவள் அவனை மணந்துகொள்ளவும் முடிவு செய்கிறாள். அவனுடன் உறவுகொண்டு ஒரு ஆண்மகவுக்கும் தாயாகிறாள்.

இளவரசனோடு பாலுறவில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றில், தான் அவனது மகள் என்பதை அவள் சொல்லிவிடுகிறாள். அவனது குறி அந்த நிலையில் விறைக்கிறது, அவன் ஆண்மையற்றவனாக ஆகிறான். அதன் பின் அவர்களுக்கிடையில் உடலுறவு என்பது நிகழ்வதில்லை. அவள் குரூர வடிவமாக ஆகிறாள். ஆண் நடைப்பிணமாக ஆகிறான். அவளுடனான அவனது உறவை அவனால் நிச்சயப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. தந்தையும் கணவனுமான ஓரு ஆணுக்கும், மகளும் மனைவியுமான ஒரு பெண்ணுக்கும் இடையிலான, பிளவுன்ட மனநிலைகளுக்கு இடையிலான, ‘அதிர்ச்சி மனோவேதனைகளுக்கு’ இடையிலான குரூரமான கதை நமக்கு முன் விரிகிறது.

இந்தக் குரூரம் எவ்வாறாக பனிரெண்டு வயது ஆண்மகவின் உளவியலிலும் குரூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனைப் படம் அலசுகிறது. நிர்மலமும் வக்கிரமும் இணைந்த ஒரு ஜீவனாக, குழந்தையாக அந்தச் சிறுவனின் எதிர்காலம் நமது மனதை அலைக்கழிக்கிறது.

பால்யத்தில் திரிவுபட்ட பாலுறவு விபத்து அல்லது நிகழ்வு எவ்வாறாக மரபாக மனிதர்களின் வாழ்வில் தொடர்கிறது என்பதனைப் படம் சொல்கிறது. மனிதர்களின் மனத்திலுறையும் நிரந்தரமான பொறுப்புணர்வு, அன்பு, பாசம் போன்ற உணர்வுகளுக்கும், தமது மனம்பிறழ்ந்த, பேதலித்த உணர்வுகளுக்கும் இடையில், இவ்வகையிலான மனிதர்கள் எவ்வாறு சதா வேதனையுடன் அலைவுறுகிறார்கள் என்பதனைப் படம் அலசுகிறது.

அந்த இளம்பெண் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி. அந்த இளவரசன் இன்று முதிர்ந்த, ஓய்வுபெற்ற நீதிபதி. இருவருக்கும் பிறந்த ஆண்மகவு இன்று பனிரெண்டு வயதுச் சிறுவன். இவர்களுக்கிடையிலான நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்காரப் பெண் முதிய எஜமானனுடன் பாலுறவையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள். இவர்களுக்கிடையிலான அவல நாடகத்தினிடையில் இயலுகிறபோது அவள் தன்னுடைய அதிகாரத்தையும் பாலுறவின் வழி நிலைநாட்ட முயலவே செய்கிறாள்.

மரபை மீறுகிறோம் என்ற எந்தச் ஸ்மரணையும் குற்ற உணர்வும் இன்றி அந்த வீட்டின் நான்கு ஜீவிகளும் இருக்கிறார்கள். இந்த மேட்டுக் குடியினரின் வெளித் தெரியவராத வாழ்வு, எவ்வாறாக பரந்து பட்ட சமுகத்தில் தாக்கத்தை உருவாக்குகிறது என்பதனைப் படம் சொல்கிறது. மனம் பேதலித்த அல்லது வழமைக்கு மாறான வன்முறையுடன் நாம் குழந்தைகளை – சிறுவர்களாக சிறுமிகளாக – நாம் எதிர்கொள்கிறபோது, அவர்களது மனநிலைக்குப் பின்னான வரலாறு குறித்துத் தேடிச் செல்லவேண்டும் எனும் அறிவுறுத்தலை படம் நமக்கு முன்பாக விட்டுச் செல்கிறது.

கணவனுடன் படுப்பதில்லை. அவனது அன்பும் அணுசரணையும் இனிச் சாத்தியமில்லை. பல சமயங்களில் மகளுக்குத் தாலாட்டு பாடுவது போலும், கதை சொல்லித் தன்னைத் தூங்கப் பண்ணுமாறு ஆணைக் கேட்கிறாள் பெண் நீதிபதி. அவனுடைய படுக்கையில் ஒன்றாக அவள் படுப்பதில்லை. தனிமை அவளைக் கொல்கிறது. அவளது பாலுறவு வேட்கைக்கும் இப்போது போக்கிடமில்லை. ஆண் விலைமாதர்களிடம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்கிறான். வீட்டு வேலைக்காரியுடன் பாலுறவை ஏற்படுத்திக் கொள்கிறான். அவ்வப்போது அன்பு செலுத்தவும், அவ்வப்போது மனநோயாளர் போலக் கீச்சிடவுமான ஆவிகள் நடமாடுகிற வீடாக அது ஆகியிருக்கிறது. ஆண் தொலைக் காட்சித் தொடர்களில் அழந்து போகிறான். அந்தத் தொடரில் வருகிற ஒரு விலைமாதின் மரணம் அவனைத் தீராத வேதனைக்கு உள்ளாக்குகிறது. அந்தத் தொலைத் தொடரில் ஈடுபடுவது என்பதுதான் இப்போது அவனது வாழ்வின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

தனிமையின் குரூரம் இந்த இரு மனிதர்களையும் தீராது அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு வெளியில் பெண் கௌரவமிக்க நீதிபதி. அவளது கணவன் ஓய்வுபெற்ற நீதிபதியான கணவான். அகன்ற மாளிகையில் வாழ்கிற வசதிபடைத்த மனிதர்கள் அவர்கள். இந்தச் சமூகத் ஸ்தியை விட்டுக் கொடுத்துவிட ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதமில்லை. வீட்டில் ஒன்றாகவும் வெளியில் ஒன்றாகவும் கழிகிறது அவர்களது போலி வாழ்வு. இதிலிருந்து தத்தமக்கான ஒரு உளவியல் தர்க்கத்தை தமது நடைமுறையைச் சுற்றி இருவரும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இந்தக் குரூரத்தின் தர்க்கம் அல்லது சுயசித்திரவதையும், பிறர் மீதான சித்திரவதையும் சார்ந்த பெரியவர்களின் குரூரமன அழகியல், அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவனையும் தொற்றுகிறது. அவன் ஒரு விலைமாதைத் தான் கொலை செய்கிறோம் என்பதனை அறியாமலே கொலையும் செய்கிறான்.

3

மகனுக்கு கால்பந்து விளையாட ஆசை. தாய்க்கு அவன் செஸ் விளையாடுவதுதான் பிடிக்கும். முரட்டு விளையாட்டுக்கள் தாய்க்கு விருப்பமில்லை. தனது மகன் மென்மையானவன், வீட்டில் தன்னுடன் இருக்க மட்டுமே அவன் என்பது அவளது திடமான எண்ணம்.

தனது படுக்கையை அவள் தனது 12 வயது மகனுடன் தான் பகிர்ந்து கொள்கிறாள். அந்தச் சிறுவன் முன்பே ஆடை களையும் அவள், அவளது அல்குலைச் சுற்றிய மயிர்க் கற்றைகளையும், அவளது பெருத்த முலைகளையும் மகனுக்கு வெகுமுன்பாகக் காண்பித்தபடி, வெகு இயல்பாக ஆடை களைகிறாள். (நமக்கு முன்பாகக் குளியலறைக் கண்ணாடி தெரிய, குளியலறைக்குள் மங்கலாக) அவள் செய்கிற அனைத்தையும் பார்த்தபடி, குளியல் தொட்டியின் ஒரு மூலையில் இரு கைகளையும் பரப்பி அமர்ந்தபடி, அவள் குளியல் தொட்டியில் வந்து அமர்வதனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் சிறுவன்.

எதிரெதிரே குளியலறைத் தொட்டியில் அமர்கிறபோது, சிறுவன் தாயின் பெருத்த காம்புகளையுடைய முலைகளை வெறித்துப் பார்க்கிறான். தாய் மறுப்புடன் கொஞ்சம் தயக்கத்துடன் ‘வேண்டாம் மகனே’ என்கிறாள். ‘நீ இப்போது வளர்ந்து விட்டாய்’ என்கிறாள். அவளது முலைக் காம்புகளை அவளது பனிரெண்டு வயது மகனுக்கு முன்பாக அவள் சப்புவதற்குக் கொடுத்திருக்கிறாள் என்பது நமக்குப் புரிகிறது. ‘தொப்பூழ்க் கொடியினால் தன்னோடு பிணைக்கப்பட்டிருந்த அவனை ஒரு கொடுமைக்கார டாக்டர் பிரித்துவிட்டான்’ என்கிறாள் தாய். ‘அவன் தன்னில் ஒரு பகுதி’ என வேதனையுடன் சொல்கிறாள்.

சமூகக் கலாச்சாரக் காரணங்களின் பொருட்டு உடலளவில் இயல்பாக நிகழ வேண்டிய உடமை உணர்விலிருந்தான உடல்சார்ந்த பிரிவு, அவர்களிடையில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதற்கான கராணமாக, உடல் ரீதியில் அவளது தந்தையும் கணவனுடனிமிருந்துமான விலக்கம், அதே முரணால் மகனுக்கும் தனது பாலுறவுச் சக ஆணுக்கும் இடையிலான குழப்பத்தையும் அவளுள் விதைக்கிறது. அவளுக்கு அவளது மகன் ஒரு வகையில் சமவேளையில் தந்தையும் கணவனுமானவனுக்கான பாலுறவுப் பிரதியீடு. இது பற்றின குற்றவுணர்வு தாய்க்கும் மகனுக்கும் இடையில் இருப்பதில்லை.

சிறுவர்கள் இருவர் பள்ளிக் கூட வராந்தாவில் ஒடி வருகிறார்கள். ஒருவன் பனிரெண்டு வயதுச் சிறுவன். அடுத்தவன் அவனது வகுப்புத் தோழன். வகுப்புத்தோழன் அவனது சகோதரன் வைத்திருந்த நிர்வாணப் படங்களை அவனுக்குத் தெரியாமல் எடுத்து வந்திருக்கிறான். அதனைப் பார்ப்பதற்கென அவனை விரட்டிச் செல்கிறான் பனிரெண்டு வயதுச் சிறுவன். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் படங்களை பார்க்கத் துவங்குகிறார்கள். கணிணியில் அம்மணப் படங்களை அவர்கள் பார்க்கிறார்கள். பிற சிறுவன் அந்தப் படங்களில் இருக்கும் அம்மணமான பெண்களின் முலைகளை அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் பார்க்கிறான். நமது சிறுவனுக்கு அந்தப் பிரச்சினைகள் இலலை. அவன் அவனது தாயின் முலைகளையும் அம்மணத்தையும் தினந்தோறும் பார்த்து வருகிறான். அது குறித்த அதிர்ச்சியோ குற்றவுணர்வோ தயக்கமோ அவனிடம் இல்லை. அதனை அவன் சொல்லவும் செய்கிறான்.

இந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததற்காக ஆசிரியர்களால் மைதான வெளியில், மதிய வெயிலில் மேஜையின் மேல் மண்டிபோடுமாறு அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். எதற்கோ பள்ளிக்கூடத்திற்கு வரும் போலீஸ் தம்மைத் தான் தேடிவருகிறது எனக் கருதும் சிறுவர்கள் இருவரும் தப்பித்தோடி ஒரு கட்டிடத்தில் சரணடைகிறார்கள். வீட்டுக்கோ பள்ளிக்கூடத்திற்கோ திரும்பிச் செல்வதற்கான பாதை சிறுவர்களுக்குத் தெரிவதில்லை. போலீஸ் பயமும் அவர்களை ஆட்டிப் படைகிறது. புகைப்படங்களைக் கொண்டு வந்த சிறுவன் தான் தூக்கிட்டு அல்லது விஷமாத்திரை சாப்பிட்டு அல்லது கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்கிறான். அவனிடம் ஒரு சிறு கத்தியும் இருக்கிறது.

தற்கொலை குறித்தும் ஆயுதம் குறித்ததுமுன் உரையாடலில் சிறுவர்கள் ஈடுபடுகிறார்கள். அப்போது யாரோ தம்மை அண்மிக்கும் ஸப்தம் கேட்கிறது. போலீஸ்தான் வருகிறது எனப் பயம் கொள்ளும் நீதிபதியின் பனிரெண்டு வயது மகன் வருபவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிடுகிறான். கொலைச் செய்தி உடடியாகப் பரவுகிறது. தொலைக் காட்சியில் பரபரப்பான செய்தியாக ஆகிறது. கொலை செய்தவன் பெண் நிதிபதியின் மகன் என்பதால், அவளிடம் விசாரணகளை தொலைத் தொடர்பு சாதனம் சேந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். கொலையுண்டவள் ஒரு விலைமகள் என்பதால் பிரச்சினை பிறிதொரு பரிமாணம் அடைகிறது. கொலை செய்தவன் நீதிபதியின் மகன்தான் என்பதை உடனிருந்த சகமாணவன் உறுதிப்படுத்துகிறான்.

கொலை செய்த சிறுவன் நகரத்தின் தெருக்களில் அலைந்து அருங்காட்சியகத்தை அடைகிறான். காட்சிநேரம் முடிந்து முழு மனிதர்களும் வெளியேறியபின், அவன் சோர்வுடன் ஒரு சிலையின் பீடத்தின் கீழ் படுத்துத் தூங்கிப் போகிறான். எழும்போது அவன் முன்பாக ஒரு சிறுமியைக் காண்கிறான். அவள் அந்த அருக்காட்சியகத்தின் காவலனது மகள். ஆவர்களோடு அவர்கள் வீட்டுக்கு வருகிறான் சிறுவன். சிறுவன் தங்களுடன் இருக்கிறான் என்பதனைக் காவலாள் தாயான நீதிபதிக்கத் தெரிவிக்கிறான். அங்கு வரும் அவள் தனது மகனைக் கொஞ்சநாள் மறைத்துப் பாதுகாக்க கையூட்டாகப் பணம் தருகிறாள்.

காவலாள் இரவு வேலைக்குச் செல்லும்போது தனியே கொலைகாரனான சிறுவனுடன் விடாது, அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். சிறுவனைத் தேடிச்செல்லும் தாய் தனியறையில் சிறுவன் தன்னந்தனியே அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ணுறுகிறாள். சிறுவனின் தாய்க்கு இது சகிக்க முடியாததாகிறது. அருங்காட்சியகக் காவலனைத் தேடிவரும் தாய், அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த போலீஸ் உளவதிகாரியைக் கண்ணுறும் காவலன் பீதியடைகிறான். அவளை அங்கிருந்து போய்விடுமாறு கோருகிறான்.

இருள் விழுந்த பின்னும், அவனுக்கு மாற்றாகப் பிறிதொரு காவலன் வந்த பின்னும் அவள் அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறுவதில்லை. அவளை வெளியேற்றுவதற்காக அவளை நாடிவரும் காவலனோடு தனக்கும் மகனுக்கும் இடையிலான உடல்சார்ந்த, பிரிக்க முடியாத உறவைத் தாய் வெளியிடுகிறாள். அவன் திடுக்கிடுகிறான். அவளது கணவனை அவன் அவமானமாகப் பேசுகிறான். அதைத் தொடர்ந்து உன்மத்தம் பிடித்துவள் போல் வன்முறையை அவள் வெளிப்படுத்துகிறாள். அருங்காட்சியத்தின் சிலைகளைத் தகர்க்கிறாள். பொருட்களை உடைத்தெறிகிறாள். கண்ணாடிப் பேழைகள் நொறுங்குகின்றன. அவனை நீண்ட ஈட்டியால் குத்த வருகிறாள். அவனும் எதிர் வன்முறையில் ஈடுபடுகிறான்.

அவள் மீதான உடல்சார் வன்முறையில் அவள் முற்றிலும் தொய்ந்து வீழ்கிறபோது, அவளுடன் காவலன் வன்புணர்வில் ஈடுபடுகிறான். வன்புணர்வாகத் துவங்கும் அந்தச் செயல், பிற்பாடாக அவளது இணக்கம்சார் உறவாகவும் ஆகிறது.

‘தனது உடலை அவன் விடுதலை செய்துவிட்டதாக’ அவனிடம் அவள் சொல்கிறாள். மகன்-கணவன்-தந்தை என சுழல்வட்டமாகவும், மூடுண்டும், ஒரே ரத்தமாகவும் மட்டுமே உழன்றிருந்த அவளது உடல், அவளுக்கு நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த முறிவு, ‘வேற்று’ ஆணுடனான உடலுறவின் வழி அவனது இரத்தக் கலப்பின் வழி விடுதலை பெற்றது என்பதனை நம்மால் உணரவும் முடிகிறது.

உடலுறவின் பின் மனதளவிலும் உடலளவிலும் அவள் சமநிலைக்கு வருகிறாள். அவள் மிகத் தெளிவாக, பியானோ முன்பான நாற்காலியில் அமர்ந்தபடி, அவளது கடந்த காலத்தைச் சொல்கிறாள். தனது தாயைப்புணர்ந்த, தனது தந்தையானவனே தனது கணவன் என்பதனையும், அவனே தனது மகனுக்குத் தந்தை என்பதனையும் அவள் வெளியிடுகிறாள்.

‘உடைந்த பொருட்காட்சிப் பொருட்களுக்குத் நான் காசு கொடுத்துவிடுகிறேன். எனது மகன் உன்னிடம் இருக்கிறான். அவனைக் கைது செய்ய உத்தரவிடப் போகிறேன்’ என்றபடி அலட்சியமா அவள் அருங்காட்சியகத்திலிருந்து வெளியேற, அவளைக் கொல்வதற்காக ஈட்டியை ஏந்தியபடி தெருவுக்கு ஓடிவரும் காவலனைத் தயாராக இருக்கும் உளவாளி தொடர, போலீஸ்காரர்கள் தெருவில் திமிரும் அவனைக் கைது செய்கிறார்கள்.

அருங்காட்சியகத்திலிருந்து நேரே மகனைத் தேடிச் செல்கிறாள் தாய். சமகாலத்தில் சிறுவன் தங்கியிருக்கும் காவலனது வீட்டில் வேறு வகையிலான சம்பவங்கள் நடக்கிறது. தந்தை வீடு வருவதற்குள் மகள் பள்ளியிருந்து வீடு வருகிறாள். சிறுவன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, தான் குளித்துவிட்டு வந்து இருவரும் சாப்பிடுவோம் எனச் சொல்லிவிட்டு அவள் குளியலறைக்குள் போக எத்தனிக்கிறாள்.

சிறுவன் அவளுடன் ‘தானும் குளிக்க வருகிறேன்’ என்கிறான். அவள் மறுக்கிறாள். அவள் குளயலறைக் கதவை மூட எத்தனிக்க, பலவந்தமாகக் கதவை நெட்டித்தள்ளி சிறுவன் குளியலறைக்குள் நுழைகிறான். தன் தாயுடன் தான் அம்மணமாகக் குளித்ததை அவன் சொல்கிறான். ‘என்னோடு குளிப்பதில் என்ன பிரச்சினை’ என்கிறான். சிறுமி அவனைக் குளியலறைக்கு வெளியில் நெட்டித் தள்ளிவிட, அவன் அரவமற்று வீழ, அவள் மறுபடி குளியலறைக் கதவைத் திறக்கிறாள்.

பிற்பாடான காட்சியில் அந்தச் சிறுமியும் சிறுவனும் தயக்கமற்று உரையாடுகிறார்கள். அந்தச் சிறுமியின் மார்பைத் தனது தாயின் முலைக் காம்புடன் ஒப்பிட்டு அவன் பேசுகிறான். அவன் கொலை செய்ய நேர்ந்த சம்பவத்தை அவன் விளக்குகிறான். தானும் சக மாணவனும் அந்தக் கட்டிடத்தில் ஒளிந்திருந்ததை, கதவுக்கு அருகில் பதுங்கியதை, யாரோ அண்மித்து வருவதை உணர்ந்ததை அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அவனது தாய் அப்போது வெளியில் மாடிப்படியேறி அந்தக் கதவை அண்மித்துக் கெண்டிருக்கிறாள். அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான் : ‘யாரோ வரும் சத்தம் கேட்டது. கதவருகில் நான் பதுங்கிக் கொண்டேன். கதவை நான் இப்படிப் பாதி திறந்தேன்’ எனக் கதவைத் திறக்கிறான். ‘இப்படிக் குத்தினேன்’ என அவன் கையிலிருக்கும் கத்தியை ஓங்கிக் கதவுக்கு வெளியில் குத்தும் போது, அந்தக் கத்தி நேரே அவனது தாயின் அடிவயிற்றில் பாய்கிறது.

இரத்தம் கொப்பளிக்க அவனது தாய் தரையில் சாய்கிறாள். ‘அம்மா, அந்தக் கத்தியை நான் திரும்ப எடுக்கட்டுமா அம்மா?’ என்கிறான் சிறுவன். ‘அன்பே, வேண்டாம் மகனே, என்னருகில் வா’ என்கிறாள் மயங்கிச் சரிந்து கொண்டிருக்கும் தாய்.

சிறுமி கலவரமடைகிறாள். சிறுவனை அவன் தாயிடம் போக அவள் விடுவதில்லை. அவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு, வேகமாகப் படியிறங்கி, கட்டிடங்கள் தாண்டி அவர்கள் ஓடுகிறார்கள். மக்கள் கூட்டத்தினிடையில் ஓடுகிறார்கள். மக்கள் திரளினிடையில் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். சிறுமியை அதன் பின் நாம் பார்க்க முடிவதில்லை. சிறுவன் அவளது பெயர் சொல்லி அழைத்தபடி, வியர்வை வழிந்த முகத்தினோடு அனாதையாகத் தெருவில் திசையறியாது நிற்கிறான்.

சிறுமி காணவில்லை. அவளது தகப்பன் கைது செய்யப்படுகிறான். சிறுவனின் தாய், தனது இறுதி நொடியில், தந்தையும் கணவனுமானவன் ஆவிபோல் அறையின் ஜன்னல் கதவு திறக்க, மரணமடைகிறாள். நெடிதுயர்ந்து நிற்கும் காலனியக் கால மாளிகையின் மாடிமுற்றத்துக் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, வேலைக்காரி தோளைக் குலுக்கவும் ஸ்மரணையற்றபடி இருக்க, அவள் வீறிட்டு அலறி ஓட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உன்மத்தம் பிடித்தவனாக நிற்கிறான்.

இறுதிக் காட்சி. பெண் நீதிபதிக்கும் காவலாளிக்கும் இடையிலான வன்முறையில் உடைந்த ஒரு சிலை, கிரேன் மூலம் தூக்கப்பட்டு நகர்கிறது. அருங்காட்சியகத்தைப் பார்க்கவரும் வரிசையான பள்ளிக் குழந்தைகளிடையில் வேறொரு பனிரெண்டு வயதுச் சிறுவன் அந்தச் சிலையை வெறித்துப் பார்த்தபடி நகர்வது அருகாமைக் காட்சியில் வருகிறது. அந்தச் சிலை, பாதிக்கைகள் உடைந்த ஒரு பெண்ணின் சிலை. அந்த முழுச் சிலையிலும் நம்மைக் கவனம் கோருவதாக இருப்பது, அந்தச் சிலையின் பெருத்து மதர்த்த முலைகள்தான். சிறுவன் அதனை ஆவலுடன் உற்றுப் பார்த்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறான்.

பாலுறவுப் பிறழ்வும் ‘அதிர்ச்சி மனோவேதனையும்’ தொடர்பான இந்தப் படத்தினை முழுக்கப் பார்த்து முடித்தபின், ஒரு வகையிலான பிரம்மையே என்னைச் சூழ்ந்தது. இந்தப் படத்தின் பெண் பாத்திரங்களுக்காக மனம் விசும்பத் துவங்கியது. படம் சொல்லும் மிகப்பெரிய உலுக்குகிற உண்மை ஒன்று மேலதிகமாகவும் என்னைச் சித்திரவதைக்குத் தள்ளியது.

படத்தில் வரும் ஐந்து பிரதான பெண்களும் இன்மைகளாக, மரணமுற்றவர்களாக, காணாமல் போனவர்களாக ஆகிவிடுகிறார்கள். பெண்நீதிபதி தன் மகனால் கொல்லப்படுகிறாள். விலைமாது பனிரெண்டு வயதுச்சிறுவனால் கொல்லப்படுகிறாள். பெண் நீதிபதியின் முறைசாரா உறவு மேற்கொண்ட தாய் எமக்குத் தெரிவதில்லை. சிறுமி மக்கள் கூட்டத்தினிடையில், தகப்பனற்றுக் காணாமல் போகிறாள். மிஞ்சியிருக்கும் வீட்டின் வேலைக்காரப் பெண் வீறிட்டலறியபடி அந்த வீட்டிலிருந்து ‘வெளியே’ ஓடிக் காணாமல் போகிறாள். பாலுறவுப் பிறழ்வின் விளைவில், அனைத்துப் பெண்களுமே சமூகத்திருந்து வேறு வேறு வகையில் ‘மறைந்து’போகிறார்கள்.

ஆண்கள் மனம் பேதலித்தபடி, உன்மத்தம் பிடித்தபடி, குற்றச் செயல் புரிபவர்களாக சமூகத்தில் வேறு வேறு வகைகளில் ‘இருந்து’ கொண்டிருக்கிறார்கள். தகப்பனும் கணவனுமானவன் காலனிய மாடியின் கைப்பிடிச்சுவரில் இறுகி, புத்தி பேதலித்தவனாக ஆகிறான். சிறுவன் மக்கள் திரளினிடையில் நின்று அரற்றிபடி தனது சொந்தங்களைத் தேடியபடி நிற்கிறான். அருங்காட்சியகக் காவாளி வெஞ்சினத்துடன் சிறையில் இருப்பான்.

பெண்கள் மறைந்துபோக, ஆண்கள் இந்த மரபின் தொடர்ச்சியாக, எங்கோ அலைந்து கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.

4

இலங்கை அரசினால் இந்தப் படம் தடைசெய்யப்பட்டாலும், சிங்களத்தின் மகத்தான திரைப் படைப்பாளிகள் அனைவரும் அசோகா ஹந்தகமாவுக்கு ஆதரவாகத் திரண்டிருக்கிறார்கள். விமுக்தி ஜெயசுந்தரா, பிரசன்ன விதானகே மற்றும் இலங்கையின் ஸத்யஜித்ரே எனப் போற்றப்படுகிற லெஸ்டர் ஜேம்ஸ் பெரிஸ் போன்றவர்கள் அசோக ஹந்தகமாவின் படைப்பு சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். தடை செய்யப்பட்டதினாலோ என்னவோ இந்தத் திரைப்படம், படத்தின் சர்ச்சைக்குரியதும், பிரதானதுமான ஒரு காட்சி தவிர, ‘யுடீயூபில்’ பார்க்கக் கிடைக்கிறது.

‘யுடீயூபில்’ இல்லாத அந்தக் காட்சி, தாயும் சிறுவனும் அம்மணமாக எதிரெதிரே அமர்ந்தபடி குளிக்கும் குளியல்தொட்டிக் காட்சிதான். நான் பார்த்த வடிவம், தணிக்கை செய்யப்படாத, காட்சிகள் எதுவும் வெட்டுப்படாத முழுமையான படம் என்பதால், படம் குறித்து என்னால் அனுபவபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் பேச முடிகிறது.

படம் குறித்து வந்த ஆக்கவிமர்சனங்களில் மிக முக்கியமானது இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பிரீஸ் முன்வைத்த கருத்துக்களாகும். ‘கனல் தகிக்கும் சொல்’ திரைப்படம் எல்லைகளை மீறிச் செல்லும் திரைப்படம் மட்டுமல்ல, பல்வேறு ‘துணைப் பிரதிகளும்’ ஊடாடிய திரைப்படம் என்கிறார் அவர்.

ஹந்தகமாவின் திரைப்படங்கள், அவரே சொல்கிறபடி, அவரது கதைகள் ‘யதார்த்தம் என்றோ இம்மாதிரி உண்மையில் நடந்திருக்கிறது’ என்றோ நாம் கொள்ள வேண்டியதில்லை. சூழல் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதனை ‘அந்த எல்லைகளுக்கு அப்பால்’ நகரத்துவதன் வழி, விவாதிப்பதன் வழி, ஒரு சிதைவுண்ட சமூகத்தின் நிகழ்விலுள்ள பல்வேறு ‘நிஜமான பிரச்சினைகளை’ நாம் இவ்வாறான படைப்புக்களின் வழி பேச முடியும்.

இரண்டு ஆதாரங்களின் வழி இதனை விளக்கலாம். ‘இது எனது சந்திரன்’ படத்தில் வரும் ஈழத் தமிழ்ப் பெண்ணொருத்தி, தன்னைப் பாலியல் வல்லுறவு புரிந்த சிங்கள ராணுவத்தினன் பின்செல்கிறாள். ஈழச்சூழலை அறிந்தவர்களுக்கு இதனது நம்பகத்தன்மை கொஞ்சமும் பொறுத்தமில்லாதது என முடிவுக்கு வருவது ஒன்றுதான் வழி. இது யதார்த்தமே இல்லை. இதனோடு அந்தத் தமிழப்பெண், தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் எந்த எதிர்ப்புணர்வும் இன்றி, தனது இடுப்புக்கு மேல் சேலையைத் தூக்கி சம்பந்தப்பட்ட ஆண்களுடன் பாலுறவுக்குத் தன்னை ஒப்புவிப்பதைச் சித்தரிப்பதற்கான காரணமே அசோக ஹந்தகமாவிடம் இல்லை, என்பதனை ‘வோர்ல்ட் சோசலிஸ்ட் வெப்ஸைட்’ (12 ஜூன் 2002) சினிமா விமர்சகர் பானினி விஜேசிறிவர்தனா சொல்கிறார்.

இந்தக் காட்சிகளில் யதார்த்தமில்லை என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால், சிங்கள ராணுவத்தினன் உள்பட, புத்தமதப் பிக்கு உள்பட, இனவாதமேறிய சிங்கள சமூகத்தினர் இவ்வாறான மனநிலை கொண்டிருக்கிறார்களா இல்லையா எனும் கேள்வி அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிடக் கூடிய கேள்வி இல்லை.

‘யதார்த்தத்தை மீறிய எல்லைகளுக்கு அப்பால்’ சில பிரச்சினைகளை நகர்த்தி, அவைகளைப் பேசுவதற்காக அதியதார்த்தத்தை ஒரு ‘தந்திரோபாயக் கலைவடிவமாக’ அசோக ஹந்தகமா பாவிக்கிறார் என்பதை இவ்வாறு நாம் புரிந்துகொள்ள முடியும்.

‘இது எனது சந்திரன்’ தனது கதைக் கட்டமைப்பின் வழி, போரினால் சிதைவுண்ட ஒரு சிங்களக் கிராமத்தின் அழுகிப்போன கலாச்சார பொருளியல் வாழ்வின் வழி, நாறிப்போன உறவுகளைக் குறித்து விஸ்தாரமாகப் பேசமுடிகிறது எனவும் நாம் இதனை விளக்கப்படுத்த முடியும்.

லெஸ்டர் ஜேம்ஸ் இப்படத்தில் இடம்பெறும் துணைப் பிரதிகள் குறித்து தனது கருத்துக்களில் எதுவும் விரிவாகப் பேசுவதில்லை. என்னளவில் உடனடியாகவே இப்படத்தில் இருக்கும் இரு துணைப் பிரதிகள் பற்றி மட்டுமே பேச விழைகிறேன்.

சிறுவர்கள் பாலுணர்வு பெறுவது என்பது ஒரு சமூகத்தில் அல்லது ஒரு கலாச்சாரத்தில் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்த விவாதத்தை இப்படம் தூண்டுகிறது. எடுத்துக் காட்டாக, முலை தொடர்பான பிம்பங்கள் இப்படத்தில் பல இடங்களில் வருகிறது. குளியலறைக் காட்சியில் தாயின் முலை. பள்ளியில் சிறுவர்கள் பார்க்கும் முலை தெரிகிற புகைப்படங்கள். அருங்காட்சியகத்தில் அனைவருக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெருத்த முலைகள் கொண்ட பெண் சிலை. தெருவில் அலையும் அதே பெருத்த முலைகள் கொண்ட பெண் சிலை. முலைகள் தொடர்பான தாய்க்கும் சிறுமிக்குமான சிறுவனது ஒப்பீடு. இதனோடு இன்று இணையவெளி ஏற்படுத்தியிருக்கும் காட்சிச்சாத்தியங்கள். வெளியுலகிலும் வீட்டினுள்ளும் தனிவெளியிலும் சிறுவர் சிறுமியர் இன்று பாலுறவுத் தரவுகளும், அதுசார்ந்த அவயவங்களும் பிம்பங்களும் அவர்களுக்கு எளிதில் எட்டப்படும் உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம்.

இந்தப் புறநிலை யதார்த்தங்களோடு, ‘பாலுறவுப் பிறழ்வுகளையும் முறைசாரா உறவுகளையும் அனுபவம் கொண்ட பெற்றோர்கள்’ குழந்தைகளுக்கு அமையும்போது, அவர்களது ஆளுமை திரிந்துவிடுவதற்கான எல்லாச் சாத்தியங்களும் அவர்களைச் சுற்றிலும் இருக்கிறது. இது பற்றின ஆழமான விவாதங்களையும் இந்தப் படம் நிச்சயமாகவே தூண்டும்.

குழந்தைகளை இந்தத் திரிபினின்றும் பாதுகாப்பது தொடர்பான பொறுப்பான நடவடிக்கைகளையும் அது சார்ந்த நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான உரையாடலையும் இது தூண்டும். இந்த விவாதம் வரலாறு-மதம்-அதிகாரம்-கலாச்சாரப் பொய்மைகள் என்பதாகவே நீளும்.

பிறிதொரு துணைப்பிரதி, மக்கள் திரளில் நிற்கும் சிறுவனது எதிர்காலம் எத்தகையது எனும் கேள்வியோடும், காணாமல் போன அப்பெண்குழந்தையின் எதிர்காலம் எவ்வாறாக இருக்கப் போகிறது எனும் கேள்வியோடும் விரிகிறது.

தன் மீதான குழந்தை துஸ்பிரயோக வழக்கு தொடர்பாகப் பேசும்போது ஹந்தகமா இது குறித்துப் பேசுகிறார் : ‘அரசு எம்மீது சுமத்தும் குழந்தைகள் துஸ்பிரயோகம் சம்பந்தமான அவதூறுகள் முன்தீர்மானங்கள் கொண்டது. இலங்கையின் குழந்தைகள் துஸ்பிரயோகம் குறித்த புள்ளவிவரங்கள் அதிர்ச்சி தரத்தக்கது. இலங்கைக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் புள்ளிவிபரங்களின்படி, 33,000 குழந்தைப் பாலுறவுத் தொழிலாளிகள் இலங்கையில் இருக்கிறார்கள். இதில் 20 சதவீதமான சிறுமிகளும் 10 சதவீதமான சிறுவர்களும் ஏதேனும் ஒரு வகையில் பெரியவர்களால் பாலுறவு மீறல்களுக்கு உட்படுத்தப்பட்ட அனுவங்கள் கொண்டவர்கள். இதுதான் இலங்கையின் யதார்த்தம். இந்தக் குழந்தைகளின் மீதான அத்துமீறல்களைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, சினிமாத் திரைக்காக உருவாக்கப்பட்ட ஆக்கங்களை இவர்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் சிலவற்றைத்தான் நான் ‘கனல் தகிக்கும் சொல்’ படத்தில் அலசிப்பார்க்க முயன்றிருக்கிறேன். அதாவது, எவ்வாறாக பெரியவர்களுக்கு இடையிலான குழப்பமான உறவுகளினால், ஓரு குழந்தை எவ்வாறு பலியாளாக ஆக்கப்படுகிறான் என்பதைத்தான் என் படம் பேசுகிறது’ என்கிறார் அசோக ஹந்தகமா.

பாலுறவை அதிர்ச்சி மதிப்புக்காகப் பாவிக்கிறவராக அசோகா ஹந்தகமா இல்லை. இலங்கை ராணுவத்தின் வன்முறையைப் பேசிவிட்டு, 13 வயதுச் சிறுமியோடு 50 வயது ஆண் பாலுறவு கொள்கிற நடவடிக்கையைக் களியாட்ட நோக்கில், ‘ மொழியை மலம் போல் கழிக்கிற’ அவக்காரியத்தை அசோகா ஹந்தகமா என்கிற கலைஞன் செய்வதில்லை.

சிறுவர் சிறுமியர் தொடர்பான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிப் பேசுவது ஒரு தேர்ந்த படைப்பாளியின் முன்னுள்ள ஒரு கத்தி முனைப் பயணம். மிகப்பெரும் தார்மீகப் பிரச்சினையாக இருக்கிற சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் மீறல்களை ஒரு கலைஞன் மிகுந்த கடப்பாட்டுணர்வுடன், வரலாற்றுணர்வுடன் பேச வேண்டும். அசோக ஹந்தகமா அந்தக் கடப்பாட்டுடன் ‘கனல் தகிக்கும் சொல்’ திரைப்படத்தினை எடுத்திருக்கிறார்.

குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல்கள் பற்றிப் பேசுகிறபோது, ஒரு பிரித்தானிய ‘பீடபைலின்’ அல்லது ‘குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவனின்’ அறிவிக்கை ஞாபகம் வருகிறது. அவன் குழந்தைத் துஸ்பிரயோகம் புரிகிறான் எனத் திட்டவட்டமாக அறிந்த நிலையில் அவன் வீட்டை போலீஸார் சூழ்கிறார்கள். எழுபது வயதுக்கும் மேலான அந்த நபர் மிகவும் சாவதானமாக போலீஸ்காரர்களைக் கேட்கிறான்: ‘ஏன் என்னை ஒரு கிரிமினலைப் போல நடத்துகிறீர்கள். நான் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்புகிற இனிப்புகளும் பொம்மைகளும் வாங்கித் தருகிறேன். அவர்களுக்கு என்ன குழந்தை விருப்பம் எனக் கேட்கிறேன். அதன் பின் அவர்களது விருப்பப்படி, என் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். இதில் என்ன தவறு?’ என்கிறான் அந்த பீடபைல்.

இந்தப் பிரச்சினையில், அந்த முதிய குற்றவாளிக்காகப் பரிந்துபேசுகிற ‘கலைஞர்கள்’ உருவாக்க விரும்புவது, அதிர்ச்சி மதிப்பீடு தவிரவேறொன்றில்லை. மாறாக, அவனுக்கு இரையான ‘கள்ளமற்ற குழந்தைகளுக்காகப் பேசுகிறவன், அவர்களது உளவியல் பற்றிப் பேசுகிறவன்’, அவர்களுக்காக இரங்குபவனே உன்னதக் கலைஞன். அவ்வகையிலான கலைஞனாகவே அசோகா ஹந்தகமா இப்படத்தில் நெடுதுநிமிர்ந்து நிற்கிறார்.

சிறுவனின் கையில் கத்தியைப் பார்க்கும் போது நாம் திடுக்கிடுகிறோம். அந்தச் சிறுவன் மிக இயல்பாகக் கொலை நடந்ததை கள்ளமின்றி விவரிக்கிறான். அதே கள்ளமின்மையோடு சிறுமியின் மார்பையும் தாயின் முலையையும் ஒப்பிடுகிறான். படம் நெடுகிலும் அந்தச் சிறுவனுக்காக நமது மனம் அரற்றுகிறது. அந்தச் சிறுமிக்காக நமது மனம் அழுகிறது.

யதார்த்தம் மீறிய அதியதார்த்தக் காட்சி அமைப்புகள் பற்றிக் கொஞ்சம் பேசவேண்டும். கோர்வையாகப் பார்க்கிறபோது, அசோக ஹந்தகமாவினது படக்கதைகள் யதார்த்தத்தில் அதே விதமாக நிகழ்வது சாத்தியமில்லை. ஆனால், அவர் விவாதிக்கிற தனித்தனிச் சம்பவங்கள், பிரச்சினைகள் அன்றாடம் இலங்கை சமூகத்தில் ‘அசலாக’ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அசோக ஹந்தகமா அடிப்படையில் ஒரு நாடகாசிரியன். நாடகத்திலிருந்துதான் அவர் திரைப்படத் துறைக்கு வருகிறார். அவரது பல காட்சிகள் ‘நாடகமேடைச் சட்டகத்தினையும், பாத்திரங்களுக்கிடையிலான நேரெதிர் உரையாடல் வெளியையும்’ எடுத்துக் கொள்கிறது.

எடுத்துக்காட்டாக, அருங்காட்சியகத்தில் நடக்கும் வன்பாலுறவும், அதனைத் தொடர்ந்து பியானோவின் முன்பாக அமர்ந்தபடி, பெண்நீதிபதி மிக நிதானமாக தன்னைப் பாலியல் வல்லறுவுக்கு உட்படுத்திய அருங்காட்சியகக் காவலனுடன் மேற்கொள்ளும் தனது கடந்த காலம் பற்றிய உரையாடலைக் குறிப்பிடலாம். நாடகமேடைச் சட்டகத்தின் இரு பெரும் நிதர்சனங்களான ‘வெளியையும் உரையாடலையும் பிரதானப்படுத்தியதாகவே’ இந்தக்காட்சி கட்டமைப்புப் பெறுகிறது.

இவ்வகையில் யதார்த்தத்தில் உள்ள பிரச்சினைகளை விவாதிப்பதற்கான அதியதார்த்த திரைப்படக் கதைசொல்லல் நெறியை உருவாக்க அவரது நாடகமேடைச் சட்டக அனுபவங்கள் அசோகா ஹந்தகமாவுக்கு உதவுகின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

அறுதியாக, அவர் மீதான குழந்தை துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு பற்றி, சமூகப் கடப்பாடுள்ள கலைஞனாக அசோகா ஹந்தகமா சொல்லும் பதில் இவ்வாறாக முடிகிறது —

‘எப்போதும் நான் எனது கருத்துக்களுக்காக நிற்பவன். அது எப்போதும் ஆளும் நிறுவனங்களோடும் அதனது கருத்துக்களோடும் மோதிக்கொண்டே இருக்கும். இதனாலேயே எனது கலாசிருஷ்டிகளின் மீது அவர்கள் அவமானத்தைச் சுமத்துகிறார்கள். தவறான குற்றச்சாட்டுக்களில் என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். சிறைக்குப் போவது பற்றிய அச்சம் எனக்கு இல்லை. ஆனால், எம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. எமது சிந்தனையிலேயே என்றுமே இருந்திருக்க முடியாத ஒரு குற்றச்சாட்டை எம்மீது அவர்கள் சுமத்துகிறார்கள். எமது படைப்புக்களின் வழி மக்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை நாங்கள் எழுப்புகிறோம். அனைவருக்குமான மேன்மையானதொரு சமூகம் அமைய நாங்கள் செயல்படுகிறோம். குழந்தைகள் முதல் முதியவர்கள்; வரையிலான எல்லோருக்குமான மேன்மையானதொரு சமூகத்திற்காக நாங்கள் நிற்கிறோம்’.

———————————————————–

உன்னதம் : ஜனவரி 2009

Exit mobile version