கனடாவின் ரொறன்ரோ கிங்ஸ்ரன் வீதியில் அமைந்திருந்த பௌத்த விகாரை எரிக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்விதமான நடவடிக்கைகள் தமிழ்மக்களின் விடியலுக்கு எந்தவித விமோசனத்தையும் தரமாட்டாது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இப்படியான தாக்குதல்களே, அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பாக சர்வதேச நாடுகள் பலவும் முத்திரை குத்துவதற்கு வழிகோலியது.
ஆகவே ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை தாக்குவதன் மூலம் எதிர்கால இளைஞர் சமுதாயத்திற்கும் வன்முறையை போதித்து உலகிலேயே ஒர் கீழ்த்தரமான இனமாக எமது தமிழினத்தை உலகிற்கு காட்டுவதற்கே இவ்வாறான சம்பவங்கள் வழிவகுத்துள்ளன. இவற்றை விடுத்து அமைதி முறையில் எமது மக்களின் உரிமை போராட்டத்தை இங்கே மேற்கொண்டு நாம் வன்முறைகளிற்கு எதிரானவர்கள் என்பதை கனேடிய அரசுக்கும் பல்கலாச்சாரத்தினை கொண்டுள்ள கனேடிய மக்களிற்கும் எடுத்துகாட்டுவதன் மூலமே கனேடிய மக்களினது ஆதரவை எமது மக்களது உரிமை போராட்டத்திற் கு வென்றெடுக்க முடியும்.
கடந்த காலங்களில் வீதிமறிப்பு போராட்டம், நெடுஞ்சாலை மறிப்பு போராட்டம் என்று மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் எதன் மூலமும் கனேடிய நாட்டு மக்களை வென்றெடுக்க முடியவில்லை. மாறாக அவ் மக்களின் எதிர்ப்பினைதான் சந்திக்க நேரிட்டது. தாயகத்திலும் இவ்வாறான வன்முறைகளை பேணிவந்தோரே இங்குள்ள இளைஞர்கள், யுவதிகள் மத்தியிலும் அதனை போதித்து எமது எதிர்கால சமுதாயத்தையே சீரழித்து நடுவீதிக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
அமைதியான முறையில் கனேடிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமே பல்கலாச்சார சமுதாயத்தையும், கனேடிய அரசினையும் எமது பக்கம் ஈர்க்கமுடியும், மாறாக வணக்க தலங்கள் மீதான வன்முறைகள், அடாவடிதனங்கள் மூலம் நாம் எந்தவொரு சக்தியையும் வென்றெடுக்க முடியாது. இவற்றை கடந்தகால அனுபவங்களினுடாக பெற்று கொண்டுள்ளபோதும், மீண்டும் அதே பாணியில் பயணிப்பது எமது சமூகத்தை ஒர் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.
ஆகவே வருங்கால சந்ததிகளாக வளர்ந்துவரும் அன்பான இளைய சமூகத்தினரே இவ்வாறான வன்முறை நடவடிக்கைகளை கைவிட்டு உரியமுறையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயலாற்றுமாறு கோருகின்றோம். வணக்க ஸ்தலங்களை எரிப்பது, நூல் நிலையத்திற்கு தீவைப்பது, ஊடகத்துறையை அச்சுறுத்துவது, வர்த்தக நிலையங்களை உடைப்பது, வாகனங்களை அடித்து நொருக்குவது இவை எதுவும் எமது நீண்டகால நியாப+ர்வமான அரசியல் உரிமை போராட்டத்திற்கு உதவ போவதில்லை என்பதை உணர்ந்து செயலாற்றுமாறு கேட்டுகொள்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதி சண்டைகளில் ஈடுபட்ட இளம் தமிழ் இளைஞர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயலாற்றுங்கள்.
வெறுமனவே ஊட்டப்படும் உணர்ச்சிகளுக்காக உங்களது எதிர்காலத்தை வீணடிக்காமல் அவற்றை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து தாயகத்தில் ஒர் கோர யுத்தத்திற்கு முகம் கொடுத்து துவண்டுபோயுள்ள மக்களின் விடியலுக்கான ஒர் அரசியல் உரிமையை கனேடிய மற்றும் சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு தங்களை கேட்டு கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்-PLOTE
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-DPLF
தகவல் பிரச்சார பிரிவு-கனடா