லைக்கா உடன் இணைந்ததற்காக நமது செந்தமிழர் அல்லது பச்சைத் தமிழர் அல்லது ஏதாவது ஒரு கலர் சீமான் அவரது தளபதி விஜய் உடன் செல்லமாகவாவது கோபித்துக் கொள்வார் என்று கணிப்பிட்டவர்கள் கத்தியால் வெட்டுமட்டுமே வாங்கியுள்ளனர். அம்மாவின் வில்லுப்பாட்டு கோஷ்டியில் தேர்தல் கோரஸ் பாடிய சீமான் இப்போது கத்தியோடு கலந்துவிட்டார்.
கத்திக்கு தனது முழு ஆதரவு உண்டு என சீமான் தனது பொன்மொழிகளை கழுத்து நரம்பு புடைக்காமல் உதிர்த்துள்ளார். என்ன இருந்தாலும் சீமான் தியாகி தான். பொதுவாக ஈழ தேசிய வியாபாரிகள் மந்திரிப் பதவியோடு செட்டிலாகிவிடுவார்கள். சீமான் முதலமைச்சர் கனவிலிருந்து இன்னும் விடுபடாமல் ஒட்டுப் பதவிகளை எல்லாம் தியாகம் செய்தவர்.
இப்போது ஒரு படி மேலே போய், இளைய தளபதி விஜய் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழ் உணர்வு பொங்கத் தெரிவித்திருக்கிறார்.
தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தான் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றார்.
மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான தலைவர் எனவும் நேர்மையான தலைவர் எனவும் முழங்கிய சில நாட்களின் பின்னர் மோடி இனக்கொலையாளி என பெரும் கண்டுபிடிப்பைச் செய்து காட்டியவர் சீமான்.
அதே போல விஜய் விடயத்திலும் பல்டி அடிப்பார் என தொண்டர்கள் ஆசைப்படுவதாக பேஸ் புக் பதிவுகள் சொல்கின்றன.
பாவம் சீமான், புலம் பெயர் நாடுகளில் லைக்காவை எதிர்க்கும் தமிழ்த் தேசிய வியாபாரிகளுக்கு வேறு வழிகள் உண்டு. லைக்காவை விட்டால் போட்டி நிறுவனமான லெபாராவின் எலும்புத்துண்டை பெற்றுக்கொண்டு வாலாட்டுவார்கள்.
சீமானுக்கு லைக்கவை விட்டால் வேறு வழியில்லைப் போலும். பேசாமல் சீமானுக்கு லைக்கா பணம் கொடுத்து முதலமைச்சர் ஆக்கிவிட்டால் சினிமாவிற்கான ஏக உரிமையை லைக்காவிற்குப் பெற்றுக்கொடுத்துவிடுவார்.
எது எவ்வாறாயிமும் லைக்கா வெல்கிற்தோ தோற்கிறதோ, சீமானின் சாயம் வெளுத்துப்போனது.