2003ம் ஆண்டிலிருந்து இறுதிவரை வான்மதி பிரெஞ்சு தமிழ் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயற்பட்ட தோழர் சுரேந்திரன் அவர்கள் திரைப்பட நாடகக் கலைஞன் கவிஞன் மேடைப் பேச்சாளர் வானொலி அறிவிப்பாளர் எனப் பல்வேறு துறைகளிலும் செயற்பட்டவர். இடதுசாரிச் சிந்தனைகளினால் கவரப்பட்டு தோழர் ஆனவர். புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டுக்குள் அடைக்கலம் கோரி வந்த எம் தமிழ் உறவுகளின் வதிவிட அனுமதிகளுக்காகவும் செயற்பட்டவர்.ஆரம்ப காலங்களில் பிரான்சில் தமிழர்களை ஒன்றுபடுத்தி தமிழர்களுடைய பிரச்சினைகளை உலகத்துக்குத் தெரியப்படுத்தவும் முனைந்தவர்களில் ஒருவர்.கலைஞன் மரணித்துப் போவதில்லை உடலை மட்டும் மறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருப்பான். அவ்வாறே தோழர் சுரேந்திரன் அவர்களும். அவரது இழப்பால் துயருறும் அனைவருடனும் கரம் கோர்த்துக் கொள்கின்றோம். ஆறுதலுக்காய் இறைஞ்சுகின்றோம். தேசத்தின் விடுதலை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அவரிடம் இருந்தன. ஆனால் தன்னை உண்மையியல் பேசாது மறைத்துக் கொண்டார். ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த பல நுண்ணிய தகவல்களை தனது அறிவு நுகர்தலின் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டாலும் , சில முக்கியமான விடயங்களை முழுங்கிக் கொண்டார்.தனது சுயநலம் கருதி மறைத்துக் கொண்டாரா? ஆனால் இப்போது பலராலும் இவரது பெயர் மூலம் அவர்களது அரசியல் கருத்துக்களும் பொய்ப் புனைவுகளும் அரங்கத்துக்கு கொண்டு வருவதான ஆபத்துக்களும் உள்ளன. ஆனாலும் அவர் தனிப்பட்ட முறையில் இனியவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அவரை முன்வைத்து அரசியல் பேசுபவர்கள் குறித்து எச்சரிக்கை கோருகின்றோம். அவர் தோழர். அவரிடம் வயது வேறுபாடுகள் கிடையாது. யாருடனும் இணைந்து செயற்படுவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. அவ்வாறே எம்முடனும் இளைஞர்களாக இருந்த போதும் இணைந்து கொண்டார். ஆனால் அவரது பிற்கால அரசியல் நிலமைகள் குறித்த பல்வேறு விமர்சனங்களும் அவரது செயற்பாடுகள் குறித்த விமர்சனங்களும் எழுவதில் வியப்பில்லை. மக்களரங்குகளுக்கு வந்தவர்கள் புகழடைந்தாலும் அவர்களுக்கான கேள்விகளும் மறுதலிக்க முடியாதவை.
சுரேந்திரன் அண்ணா
ஏன் மௌனித்துக் கொண்டாய்
வலிந்து மரணப் புழுதிக்குள் ஏன் புதைந்து கொண்டாய்
நகைச்சுவையும் சிலேடையும் கலந்த உன் பேச்சை
மறுதலித்துப் போனது எதற்காக
உன்னால் வாழ்ந்தவர்கள் பலர்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் -அனைவரையும்
கலங்கச் செய்ததுமேனோ
கண்ணீரில் கரைத்தது ஏனோ
தோழர் என அழைக்கப்பட்டாய் – அனைவருடனும்
தோள் தழுவிச் செயற்பட்டாய்
கலை இலக்கியம் மேடைப் பேச்சு
எங்கும் உன் உருவமும் உரத்த குரலும் பெரிதல்லவா
கால இருள் உனை மறைத்தாலும் – உன்
ஆடிய கால்களையும் பாடிய குரலையும் எப்படி மறப்போம்
மரணம் உன்னை மறைத்து விட முடியாது
தீ உன் உடலைத் தின்றாலும்
எம் உள்ளங்களில் வாழ்வாய்.
ரமேஸ் சிவரூபன்
தலைவர்
“வான்மதி” – பிரெஞ்சு தமிழ் கலாச்சார நட்புறவுக் கழகம் – பிரான்ஸ்