16.01.2009.
இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி காண்பிக்கப்படவிருக்கிறது.
கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நீலன் திருச்செல்வம் நிதியம், சர்வதேச முரன்பாடுகள் கற்கைநெறிகளுக்கான நிலையம் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
கொழும்பில் நடைபெறவுள்ள காட்சிகளைத் தொடர்ந்து பெப்ரவரி முதலாம் திகதி காலி “Hall De Galle” இல் பிற்பகல் 5 மணிக்கு புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் இன்னுமொரு தெருக்கூத்து நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
தெருக்கூத்து இந்தியாவிலுள்ள கிராமங்களில் புகழ்பெற்ற கலை பாரம்பரியங்களில் ஒன்றாகும். கதைவசனம், பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்ததாக இது அமைந்திருக்கும்.
கண்கவர் வர்ணங்களினால் ஆன ஆடை அலங்கரிப்பும், தாளத்திற்கேற்ற நடனமும், பார்வையாளரின் தரத்திற்கேற்ப கருப்பொருளை கச்சிதமாக விளக்கும் தன்மையும் தெருக்கூத்தின் முக்கியமான அம்சங்களாகும்.