Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள்’- பயங்கரவாதம் குறித்த பதினாறு திரைப்படங்கள்:யமுனா ராஜேந்திரன்

நீதி கிடைக்கவில்லையென்பதால் சோர்ந்துபோகும் பொதுமக்கள், அவர்களே ஆயுதம் எடுக்கிறார்கள். பயங்கரவாதிகள் மீது முன்பாகவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்குமானால், பிற்பாடு, இந்துத்துவக் குழுக்கள் இப்படியான செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனும் அவதூறுகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

மலாகான் இஸ்லாமிய வெகுமக்கள் படுகொலை பற்றி

‘சிவ சேனா தலைவர்’ மனோகர் ஜோஷி

25 அக்டோபர் 2008 : NDTV

எனது மரணத்தைத் தீர்மானிக்க இந்தத் தேவடியாள் மகன்கள் யார்? அரசாங்கம், காவல்துறை, உளவமைப்பு எல்லாமுமே பொய்த்துப் போய்விட்டது. குஜராத், தில்லி, மும்பை, மலாகான் போன்ற இடங்களில் குண்டுவைத்துப் படுகொலை செய்தவர்களைத்தான் நான் கொல்கிறேன். இவர்களைக் கொலை செய்வதில் எனக்குப் பெருமிதம்தான்.

நான்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளை

கொலைசெய்யத் திட்டமிடும் ‘முட்டாள் பொது மனிதன்’

Wednesday திரைப்பட வசனம் : 2008

1

 

எவருக்கும் சந்தேகம் இருக்க நியாயம் இல்லை. குஜராத், மலாகான், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நிகழ்ந்தது பயங்கரவாதம். குஜராத்திலும் மலாகானிலும் இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து இனக்கொலை செய்தார்கள் இந்துத்துவவாதிகள். இந்தப் படுகொலைகளில் ராஷ்ட்ரியம் ஸ்வயம் சேவக் சங்கிற்கும் பஜ்ரங்தளத்திற்குமான உறவுகள் நேரடியாகப் பதிவுபெற்றிருக்கின்றன. ‘ஆரியவர்த்தத்தை அமைப்பதுதான் தமது கனவு’ என இந்தக் கொலையாளிகள் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள்.

 

தில்லி பாராளுமன்றத் தாக்குதலிலிலும் மும்பை தாஜஹோட்டல் தாக்குதலிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும், கொலையாளிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவியவர்கள் என்பதும் பதிவுபெற்றிருக்கிறது. ‘கொலைவெறியாட்டம் நிகழ்த்தி தமது ஜிகாத்தைத் தொடர்வதுதான் தமது நோக்கம்’ என மும்பைக் கொலையாளி வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்த நான்கு நிகழ்வுகளும் உணர்ச்சிவசத்தில் செய்யப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் இல்லை. மிகநிதானமாகத் திட்டமிட்டு, மதக் கருத்தியல் நம்பிக்கையுடன் செய்யப்பட்ட, இரக்கமற்ற கொடியவர்களின் படுகொலைகள் இவைகள். எவருக்கும் இதில் சந்தேகம் இருக்க நியாயம் இல்லை.

 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அல்லாமல், முந்தைய கம்யூனிச நாடான ரஸ்யா துவங்கி கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஈராக, இன்றைய கம்யூனிஸ நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா என அனைத்தும் உலகில் மதத்தின் அடிப்படையிலான பயங்கரவாதப் பிரச்சினை என்பது இருக்கிறது என்பதனை ஒப்புக் கொள்கின்றன.

 

‘பயங்கரவாதத்தினை எதிர்த்த போர்’ என்பது ஒரு பொதுவான பாவனைச் சொல்லாக உலக அரசியலில் தற்போது ஆகியிருக்கிறது. விளிம்பு நிலை மக்களது போராட்டங்களையும், சிறுபான்மையின மக்களது போராட்டங்களையும் தத்தமது அதிகார நோக்கங்களை எய்துவதற்காக, உலகின் சகல ‘தேசிய அரசு’களும் பயங்கரவாதம் எனும் ஒற்றைச் சொல்லின் கீழ் அனைத்துவிதமான சமூக எதிர்ப்புக்களையும் நிரல்படுத்திவிடுகிற போக்கு உலகில் அதிகரித்து வருகிறது.

 

இனப் பிரச்சினை என்கிற ஜனநாயகத்திற்கான அவா ஈழத்தில் பயங்கரவாதம் என மகுடமிடப்பட்டிருக்கிறது. சீனாவில் சிறுபான்மை மக்களாக இருக்கிற இஸ்லாமிய மக்களது வழிபாட்டுரிமைக்கான எதிர்ப்பு பயங்கரவாதம் எனப் பெயரிடப்படுகிறது. தெபாஹா மலைவாசி மக்களின் எழுச்சி, வங்காள நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான நக்ஸலைட்டுகளின் எழுச்சி, அஸாம் மணிப்பூர் இனவிடுதலைப் போராட்டங்கள், காஷ்மீரி இன மக்களின் தனிநாட்டுப் போராட்டம், பாப்ரமஜீத்,குஜராத்,மும்பை இந்துத்துவப் படுகொலைகள், சீக்கியருக்கு எதிரான காங்கிரஸாரின் அரசியல் கொலைவெறியாட்டம் என ‘தனித்தனி அரசியல் பண்புகள்’ கொண்ட எல்லாவிதமான அரசியல் நிகழ்வுகளுக்கும் இந்தியாவில் ‘இப்போது’ வழங்கப்படும் ஒற்றைப் பட்டையான பொதுப் பெயர் ‘பயங்கரவாதம்’. மதஒதுக்கல், இனவெறுப்பு, மலைவாழ் மக்கள் புறக்கணிப்பு, தலித் மக்களின் மீதான வன்முறை என ‘எந்தவிதமான அரசியல் அசமத்துவம் கொண்ட சமூகப் பிரச்சினைகளும் இந்தியாவில் இல்லை, இருப்பதெல்லாம் பயங்கரவாதம் தான்’ என அத்வானி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரை சொல்கிறார்கள்.

 

அமெரிக்க இயக்குனரும் நடிகருமான ஜோன் மல்க்கவிச் (The Dancer in upstairs : 2003 : Spanish English), அமெரிக்க இந்திய இயக்குனரான ஜக் முந்த்ரா ( Shoot on Sight : 2007 English Hindi),இந்திய இயக்குனர்களான சந்தோஷ் சிவன் (Terrorist : 1999 Tamil English) ), சுபாஷ் கை ((Black and white : 2007), நீரஜ் பாண்டே( A Wednesday : 2008 Hindi)> ராஜ்குமார் குப்தா (Amir : 2008 Hindi) போன்ற பெரும்பாலுமான வெகுஜன உலக மற்றும் இந்திய சினிமா இயக்குனர்கள் முறையே ஜோர்ஜ் புஸ், டோனி பிளேர், அத்வானி மற்றும் இலங்கை ஜனாதிபதி போன்றவர்கள் சொல்வதைத்தான் அப்படியே திரைக்கதையாக ஆக்குகிறார்கள். இந்தத் திரைப்படங்களில் உலக அளவில் வெற்றிபெற்றி திரைப்படம் சந்தோஷ் சிவனின் ;டெரரிஸ்ட’;. இந்திய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் நீரஜ் பாண்டேவின் ‘எ வெட்னஸ்டே’.

 

சந்தோஷ் சிவன் இனப் பிரச்சினை சார்ந்த அரசியலை வெறுமனே ‘தற்கொலை எனும் அறம்சார் பிரச்சினை’யாக ஆக்கிவிடுகிறார். நீரஜ் பாண்டே இந்து முஸ்லீம் எனும் குறிப்பிட்ட அடையாளங்கள் தவிர்த்ததாக, ‘இஸ்லாமிய வெகுமக்களின் மீதான இந்துத்துவவாதிகளின் தாக்குதல் என்கிற ஸ்தூலமான பிரச்சினையை நீர்த்துப் போகச்செய்து, இடங்களின் குறிப்பிட்ட அர்த்தங்களை அழித்து,’ தேசிய அரசுகள் ஏற்கிற அதே அர்த்தத்தின் அடிப்படையில் பயங்கரவாதம் எனும் பிரச்சினையை அணுகுகிறார். இவ்வகையில் சந்தோஷ் சிவனிடமும்; நீரஜ் பாண்டேவிடமும் இருக்கிற காமெரா எனும் அதியற்புதமான கலா சாதனம், அரசு அதிகாரத்திலிருப்பவர்களின் கைகளிலுள்ள கொலைக் கருவிகள் போலவே செயல்படுகிறது.

 

இதே பயங்கரவாதம் எனும் பிரச்சினையை அதனது அரசியல் வேர்கள், உலக அரசியலில் நிலவும் அசமத்துவம், ஒரு குறிப்பிட்ட தேசிய அரசியலினுள் நிலவும் அசமத்துவம், பயங்கரவாத நிகழ்வுகளினால் பாதிப்புறும் வெகுமக்களின் வாழ்வு, இந்தத் தாக்குதல்களின் போது கொலையுண்ட அப்பாவி மக்களின் துயரமான அனுபவங்கள் என்பதாக, மனிதர்களின் துயர்களை நெஞ்சை உருக்கும் வகையில் பேசிய மனசாட்சியுள்ள திரைப்படக் கலைஞர்களும் உலக அளவிலும் இந்திய அளவிலும் இருக்கிறார்கள்.

 

செப்டம்பர் தாக்குதலை நிகழ்த்தியவர்களின் உளவியலின் பின்னிருந்த கருத்தியலை விசாரணைக்கு உட்படுத்திய பிரித்தானிய இயக்குனர் அந்தோனியோ பேர்ட் (Hambug Cell : 2004 English ), நியூயார்க் உலக வர்த்தகக் கட்டிடத்தின் கீழ் வாழ்ந்து மரணமுற்ற எளிய மனிதர்களின் வாழ்வையும், மரணமுற்ற அம்மனிதர்களை மீட்கப் போராடிய தீயணைப்புப் படை வீரர்களின் தியாகத்தையும்; பேசும் ஆலிவர் ஸ்டோன் (World Trade Centre : 2006 English), செப்டம்பர் தாக்குதலைத் தொடரந்து அமெரிக்கா ஆப்கானில் நிகழ்த்திய நரவேட்டையும் அதனைத் தொடர்ந்த குன்டனாமோ சித்திரவதை முகாமும் பற்றி பிரித்தானிய இயக்குனர் மைக்கேல் விண்ட்டர் பாட்டம் ((Road to Guntanamo : 2006 English),செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியாவில் சமூகத்தின் சகலதளங்களிலிருந்தும் அவமானப்படுத்தபட்டு ஓரங்கட்டபட்ட இஸ்லாமிய மக்களையும், அவர்கள் அரசியலுணர்வு பெறுவதையும் பற்றி கென்னத் கிளன்னன்Yasmin : 2004 English), பாலஸ்தீன தற்கொலைப் போராளிகளின் மனசாட்சி எழுப்பும் போராட்டம் பற்றி ஹானி அப்துல் அஸாத்((Paradsie now : 2005 Arabic),மேற்கத்திய பயங்கரவாத வேட்டைக்குத் தப்பி மனிதக் கொலைக்கு எதிராக எழுந்து நின்ற மனிதன் பற்றி ஜோஸப் காஸ்டில்லோ ( The war within : 2005 English Arabic), என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று பேசிய உலக அளவிலான உன்னத இயக்குனர்களும் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த மாற்றுச் சினிமா மரபைச் சார்ந்த வெகுஜன சினிமா இயக்குனர்களாக அனுராக் கேஸ்யப் (Black Friday: 2004), மனிஷா ஜா ( Anwar : 2007 Hindi),பூஜா பட் (Dhoka : 2007 Hindi),நிசிகாந்த் காமத் (Mumbai Meri Jaan : 2008 Hindi ) போன்ற நால்வரையும் குறிப்பிடலாம்.

 

தான் செய்த ஒரு குரூரமான துரோகத்தினால் மனம் உலுப்பப்பெற்று தனது லக்னோ வீட்டை விட்டு வெளியேறும் ஒரு முஸ்லீம் இளைஞன், இந்துத்துவவாதிகளின் பிரச்சாரப் பீதியினால் பயங்கரவாதி எனச் சுட்டுக் கொல்லப்படுவதை மனிஷா ஜாவின் படம் பேசுகிறது. எந்தவிதமான குறிப்பிட்ட குற்றச்சாட்டும் இல்லாது கைது செய்யப்பட்டுச் சித்திரவதையின் பின் கொல்லப்படும் தந்தைக்காக நீதி கோரப் போன மகளைப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கும் காவல்துறையினரின் அத்துமீறலையும், அந்தக் கொடுமையின் பின் தற்கொலையாளியாகும் இஸ்லாமிய இளம்பெண்ணும் குறித்தது பூஜா பட்டின் திரைப்படம்.

 

மும்பையில் 2006 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு ஏற்படுத்திய இரணங்களை நினைவுகூறும் மனிநேயம் தோய்ந்த படம் நிசிகாந்த காமத்தின் படம். மதவெறுப்பையும் மீறி எழும் மதத்துக்கு அப்பாலான மனிதநேயத்தை உரத்துப்பேசும் படம் அவருடைய மும்பாய் மேரி ஜான் திரைப்படம். இவ்வகையில் பயங்கரவாதம் எனும் பிரச்சினையை அரசுசார்பாக நின்று பேசும் இயக்குனர்கள், இந்த நிகழ்வுகளில் சிக்குண்ட மனிதர்கள் சார்பாக நின்று பேசும் இயக்குனர்கள் எனும் பெரும் பிளவை நாம் உலக சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் திட்டவட்டமாக அனுமானிக்க முடிகிறது.

 

2

பயங்கரவாதம் குறித்த திரைப்படங்களில் ‘திரைக்கதை’ எனும் அளவில் நான்குவிதமான ‘கட்டமைப்பு’களில் திரைப்படங்கள் உருவாவதை நம்மால் வகைப்படுத்தி விட முடியும்.

 

பிரதானமாக அரசுசார்ந்த திரைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களில் (1).மனோநோய்க்கு உட்பட்டவர்களாக அல்லது மதவாதிகளாலும் போராளி அமைப்பின் தலைவர்களாலும் மூளைச் சலவைக்கு உட்பட்டவர்களாக ‘பயங்கரவாதிகள்’ சித்தரிக்கப்படுகிறார்கள். (2).காரண காரிய அடிப்படையிலான அரசியல் விளைவுகள் என்கிற குறிப்பான வரலாற்றை ‘விலக்கியதாக’, தீடீரென ‘அருவமான வெளி’யில் இவர்களது திரைக்கதைகள் ஆரம்பித்து, அறம்சார் கேள்விகளுடன் முடிவடைந்து விடுகிறது.

 

இதற்கு மாறாக, ‘குறிப்பிட்ட’ அரசியல் சமூகச் சூழலில் வாழும் மனிதர்களாக ‘பயங்கரவாதிகளைச்’ சித்திரிக்கும் மாற்றுச் சினிமா பார்வைகொண்ட இயக்குனர்கள், (3). இத்தகையவர்களின் உளவியல் உருவாக்கத்தில் பாதிப்புச் செலுத்திய அவர்களது வாழ்வு சார்ந்த கொடுமைகளின் அடிப்படையிலான சீற்றத்தின் விளைவாகவும், பிற்பாடாக இதற்கு மதம்சார் வியாக்யானத்தை வழங்கும் மதவாதிகளின் பிரசங்கத்தின் விளைவாகவும் பயங்கரவாதிகளின் உளவியல் உருவாவதைச் சொல்கிறார்கள். இறுதியாக, (4).பொதுமகனின் பார்வையில் அவனது அனுபவங்களின் அடிப்படையில் அரசு சார்ந்த இயக்குனர்கள், அதனோடு மாற்றுப் பார்வை கொண்ட இயக்குனர்கள் என இருவருமே ஈடுபாடு காட்டுகிறார்கள்.

 

அரசுசார் இயக்குனர்கள், ‘சாத்தியமேயில்லாத’ மதத்துக்கு அப்பாலான பொதுமகனின் நலன் என்பதனை முன்வைக்கும் வகையில், பயங்கரவாதி என்பவனை அரசியல் அடையாளமற்றவனாக, மதம் அற்றவனாக முன்நிறுத்துகிறார்கள். மாறாக, மாற்றுப் பார்வை கொண்ட இயக்குனர்கள், மதம்சார்ந்த குறிப்பான அடையாளங்களையும் வலியுறுத்தி, மதத்துக்கு அப்பாலான மானுடநேயத்தை, மத அடையாளத்தை அங்கீகரிப்பதன் வழியிலும், அதன்பின்பும் ‘ஓருமைகொள்வது’ என்பதன் அடிப்படையிலும் பிரச்சினையை முன்வைக்கிறார்கள்.

 

பயங்கரவாதம் எனும் சொல்லாடல் அதிகமும் புழக்கத்திற்கு வருவதற்குக் காரணமான செப்டம்பர் 2001 ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கட்டிடத்தகர்ப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான முதல் திரைப்படம் ‘ஹாம்பர்க் ஸெல்’. இதனையடுத்து ஜூலை 2004 இலண்டன் சுரங்க இரயில் சம்பவத்தினை அடுத்து நடந்த பிரேசில் இளைஞர் படுகொலைச் சம்பவத்தை மையமாக வைத்து வந்த திரைப்படம் ‘சூட் ஆன் ஸைட்’ 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்பினை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம் ‘மும்பை மேரி ஜான்’. விடுதலைப் புலிகளால் நிகழத்தப்பட்ட ராஜீவ்காந்தி படுகொலையினை மையமாகக் கொண்டு வந்த திரைப்படம் ‘டெரரிஸ்ட்’. பெருநாட்டின் ஸைனிங் பாத் கெரில்லா இயக்கத்தலைவரான அபிமால் குஸ்மானின் கைது நடவடிக்கையை மையமாகக் கொண்டு வந்த திரைப்படம் ‘தி டான்ஸர் இன் அப்ஸ்டர்ஸ்’. பிரித்தானியாவிலிருந்து நண்பனின் திருமணத்திற்கு பாகிஸ்தான் போன இளைஞர்கள் அமெரிக்காவின் குண்டனாமோ சித்திரவதை முகாமுக்குச் செல்ல நேர்ந்த பயணத்ததைச் சித்திரிப்பது ‘த ரோட் டு குன்டனாமோ.’ மேற்குறிப்பிட்ட ஆறு திரைப்படங்களும் வரலாற்று ரீதியில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில், நிறைய ஆவணங்களின் துணையுடன் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். பிற படங்கள் அனைத்தும் பயங்கரவாதம் எனும் பிரச்சினையை அவரவர் கருத்தியல் நிலைபாட்டிலிருந்தும் அவரவர் அரசியல் நிலைபாட்டிலிருந்தம் பார்க்கும் புனைவு சார்ந்த திரைப்படங்கள். வரலாறு புனைவு என்ற பிரிவினைகள் இருந்தாலும், வரலாற்றைப் பார்ப்பதிலும் இயக்குனர்களுக்குக் கருத்தியல் தேர்வுகளும் அரசியல் தேர்வுகளும் இருக்கிறது.

 

செப்டம்பர் பதினொன்று பற்றிய ஹாம்பர்க் ஸெல் திரைப்படம் மிகுந்த சமநிலைத் தன்மையுடன் பிரச்சினையை அலசுகிறது. அமெரிக்க மேற்கத்திய அரசுகளின் வெளியுறவுக் கொள்கை எனும் பொருண்மையான அரசியல், பாலஸ்தீனப் பிரச்சினை எனும் பொருண்மையான தீராத துயர் சார்ந்த அரசியல் எவ்வாறாக மத்தியக் கிழக்கு இளைஞர்களிடம் தார்மீகக் கோபத்தை விளைவித்திருக்கிறது என்பதனைப் படம் சொல்கிறது. இதற்கு எதிராக அவர்கள் போராடுவதற்குhன திசை தேடித் திரிவதையும் படம் சொல்கிறது. இந்த இளைஞர்கள் வறியவர்கள் அல்லது படிப்பறிவற்ற மனநோயளிகள் அல்லர் என்கிறது படம். எதிர்ப்புக்கான திசை தேடித் திரியும் அவர்களுக்கான ஆறுதலாக அல்கைதாவின் தற்கொலைத் தாக்குதல் திட்டம் இருக்கிறது. அவர்களது மரணத்திற்கான அமரத்துவத்தை சொர்க்க ஏகுதலை முன்வைத்து அவர்களுக்கு இஸ்லாமிய மதப்பிரதிகளின் வழி அல்கைதாவினர் தருகிறார்கள். இவ்வகையில் ஸ்தூலமான அரசியல் பிரச்சினைக்கான பிரக்ஞைபூர்வமான எதிர்விணை தேடித்திரியும் இளைஞர்களுக்கான கருத்தியல்-இறையியல் வெளியேற்றமாகத் தற்கொலை ஆகிறது என்தனை படம் மிகத்தெளிவாக முன்வைக்கிறது. ஸதூலமான அரசியல் துயர்கள், அதற்கான ஈடேற்றமாக மதக் கருத்தியல் வழங்கும் தற்கொலைத் தாக்குதல் என்பதாக இந்தப் படம் விரிகிறது.

 

சூட் ஆன் ஸைட் திரைப்படம் இலண்டன் சுரங்க இரயிலில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தை எடுத்துக் கொண்டு, வேறு வழி விட்டுவைக்கப்படாத நிலையிலேயே பிரித்தானிய காவல் துறையினர் அந்தக் கொலையைச் செய்ய வேண்டியிருந்தது என்பதனைச் சொல்கிறது. காவல் துறைக்குள் இருக்கிற இன முறுகலைப் படம் பேசினாலும், வெள்ளையர் இஸ்லாமியர் என்ற இனபேதம் அந்தத்துறைக்குள் இருந்தாலும், அதற்கான காரணம் இஸ்லாமியர் எவரையும் சந்தேகப்படக் கூடிய நிலைமையே இக்கட்டான தருணங்களில் தோன்றுகிறது என்பதனைப் படம் சித்திரிக்கிறது. அப்பாவி இஸ்லாமிய இளைஞன் ஒருவனின் படுகொலை தொடர்பாக ஆய்வு செய்யத் துவங்கும் ஒரு பிரித்தானிய இஸ்லாமிய காவல்துறை அதிகாரி, இறுதியில் அவரது வீட்டில் பாகிஸ்தானிலிருந்து தங்க வரும் தனது சகோதரியின் மகனையே பயங்கரவாதி என அறிந்து அவர் கையாலேயே சுட்டக்கொல்ல வேண்டி நேர்கிறது. அதன்பின் அவர் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு காவல்துறையிலிருந்து வெளியேறுகிறார். இன வேறுபாடுகளுக்கும் அப்பால் காவல்துறையினருக்குச் சில குறிப்பிட்ட தருணங்களில் பயங்கரவாதியைச் சுட்டுக் கொல்வது – சந்தேக நபரைச் சுட்டுக் கொல்வது – தவிர வேறு வழியிருப்பதில்லை என்பதை இந்தப் படம் திட்டவட்டமாகச் சொல்கிறது.

 

கென்னத் கிளன்னனின் யாஸ்மின் திரைப்படத்தில் மலைமுகட்டில் தனது ஹிஜாப்பை விலக்கிவிட்டு மேற்கத்திய மேல்சட்டையும், இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட்டையும் மாற்றிக்கொண்டு காரில் ஏறி வேலை நோக்கிச் செல்கிறாள் யஸ்மின்.பெரியவர் யாஸ்மினின் தகப்பன். இளைஞன் அவளது சகோதரன். புரண்டு படுத்துத் தூங்கும் ஆண் யஸ்மினின் பாகிஸ்தான் கணவன். கணவன் மீது யஸ்மினுக்கு விருப்பமில்லை. தந்தையின் வற்புறுத்தலுக்காக, பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக பாகிஸ்தானிலிருந்து வரும் அவனை மணந்து கொள்கிறாள் யஸ்மின். ஆடு மேய்ப்பவனான அவனுக்கு ஆங்கிலமும் தெரிவதில்லை. பிரித்தானிய சமூகத்தில் அவனால் பொருந்திப் போகவும் முடிவதில்லை. பாகிஸ்தானிலுள்ள தனது உறவினர் ஒருவருடன் பேசினான் என்பதற்காக யஸ்மினின் பாகிஸ்தான் கணவனைத் தேடி போலீஸ் அதிரடித் தாக்குதல் நடத்துகிறது. அப்பாவித்தனமாக யஸ்மினின் கணவன் தொடர்பு கொண்ட உறவினான பாகிஸ்தானியர் இங்கிலாந்தில் இயங்கும் காஸ்மீர் விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டவராக இருக்கிறார். காஷ்மீர் விடுதலை முன்னணி பிரித்தானியாவில் தடை செய்யபட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருக்கிறது. யஸ்மினின் கணவர் பயங்கரவாதி எனக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

 

செப்டம்பர் 11 இக்குப் பிறகு யஸ்மினிடம் அவளது ஆங்கிலத் தொழிலாள நண்பர்கள், ஆண்களும் பெண்களும் பழகும் முறையே வேறாகிறது. அவளது புகைப் படத்திற்கு பின்லாடனின் தாடி மீசை வரைந்து அவளது வேலையிட அறிவிப்புப் பலகையில் பெரிதாக்கி ஒட்டி வைக்கிறார்கள். யஸ்மினது சகோதரனின் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் போலீசின் அடக்குமுறை புதியதொரு பிரக்ஞையை அந்த இளைஞனிடம் தோற்றுவிக்கிறது. இரட்டைக் கட்டிங்கள் சரிந்தபோது அதனை நேர்த்தியான தாக்குதல் என்றவன் அந்த இளைஞன். கஞ்ஜா விற்கும் அவன் தனது ஆங்கிலச் சிநேகிதிகளிடம், தன் குறியை அவர்கள் வாய்வைத்துச் சப்பினால், கஞ்ஜாவுக்குச் சலுகை விலை உண்டு என்பவன். அப்பெண்கள் அப்படிச் செய்யவும் செய்கிறார்கள். செச்சினியாவிலும் ஆப்கானிலும் காஸ்மிரிலும் பாலஸ்தீனத்திலும் இஸ்லாமியர்கள் மேற்கத்தியர்களால் கொல்லப்படுகிறாரக்ள எனும் பிரச்சாரத்திற்கு அவன் ஆட்படுகிறான். அக்காவைப் பிரிந்து அவன் ஆப்கானிஸ்தானுக்குப் பயிற்சிக்குச் செல்லவும் முடிவெடுக்கிறான

 

சந்தேகத்தின் பெயரில் அவளும் கைது செய்யப்படுகிறாள். சட்டத்தை ஏய்த்து கணவனை மணந்து இங்கிலாந்திற்கு கொணடு வந்ததாய் என அவள் குற்றம் சாட்டப்படுகிறாள். கணவனோடு தான் வாழவே இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் விவகாரத்துப் பத்திரம் இருக்கிறது. சட்டமற்ற முறையில் வந்தவன் என அவளது கணவன் மீது புகார் கொடுக்குமாறு காவல் துறை அதிகாரிகள் யஸ்மினைக் கோருகிறார்கள். அப்படிச் செய்தால் பிரச்சினையில்லாமல் அவளது கணவனை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பி விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். யஸ்மின் அவர்களை நம்பத் தயாரில்லை. அவள் தனது விவகாரத்துப் பத்தரத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, சிறையில் தனக்குக் கொடுக்கப்பட்ட குரானை தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, தனது கணவனைப் பார்க்க வேண்டும் என பார்வையாளருக்கான அனுமதி கோருகிறாள். சிறை வாயிலிலேயே இரவும் பகலும் காத்திருக்கிறாள். சில நாட்களின் பின் அவளது கணவன் விடுதலை செய்யப்படுகிறான்.

 

கணவனை அழைத்துக்கொணடு வீடு வருகிறாள் யஸ்மின். கணவன் அவளது தோளில் சாய்ந்து குழந்தை போல அழுகிறான். அடுத்த நாள் காலையில் அவனுக்கு தேநீர் கொண்டுவந்து தரும் யஸ்மின் அவனருகில் அமர்கிறாள். மூன்று முறை தன்னை, ‘நான் என்னை விவகாரத்துச் செய்கிறேன்’ என அவனது உடைந்த ஆங்;கிலத்தில் சொல்லுமாறு அவனை நோக்கிப் பணிக்கிறாள். அவனும் மூன்று முறை அதனைத் திருப்பிச் சொல்கிறான். பிற்பாடாக அவனிடம் வழிச்செலவுக்கெனப் பணம் கொடுத்து, அவன் பற்றையொன்றிலிருந்து கொண்டு வந்த ஆட்டுக்குட்டியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அன்பாக விடை கொடுக்கிறாள்.

 

2006 மும்பை இரயில் குண்டுவெடிப்பு எவ்வாறாக அந்தப் பெருநகரத்தின் இந்து இஸ்லாமிய மக்களைப் பாதிக்கிறது, எவ்வாறாக சந்தேகமும் மதத்துவேசமும் முன்மதிப்பீடுகளும் அவர்களைப் பீடிக்கிறது என்பதனைப் பேசுகிறது மும்பை மேரி ஜான். இந்து மத்தியதர வர்க்கத்தவர், வேலையற்ற இஸ்லாமியர், தொலைக்காட்சிப் பணிப் பெண், தமிழக கிறித்தவர் ஒருவர் என்பதாக அவர்களது அன்றாட வாழ்வின் இரணங்களோடு குண்டுவெடிப்பின் பின்னான பெருநகரத்தின் உளவியலை ஆய்வு செய்கிறது மும்பை மேரி ஜான் திரைப்படம்.

 

தி டேன்ஸர் இன் அப்ஸ்டர்ஸ் திரைப்படம் இரக்கமற்ற முறையில் கொலைகளில் ஈடுபடும் சைனிங்பாத் கெரில்லா தலைவரின் மனநிலையைப் பேசுகிறது. அவரை வேட்டையாடுகிறோம் எனும் பெயரில் சநதேகத்தில் விசாரணையன்றி அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்லும் காவல்துறையின் தவறுகளைச் சொல்கிறது.

 

கர்ப்பினித் தாயின் பிறக்காத குழந்தையின் உயிரின் மீதான அறம்சார் கேள்வியுடன், தற்கொலைப் போராளிப் பெண்ணின் அரசியல் கடப்பாட்டை முரணாக்கி, அரசியலை பின்னுக்குத்தள்ளி அருவமான பிரச்சினையப் பேசுவதாக ஆகிறது டெரரிஸ்ட் திரைப்படம். டெரரிஸ்ட் திரைப்படத்தினை உலகுக்கு விநியோகித்த ஜான் மல்கவிச்தான் தி டேன்ஸர் இன் அப்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் என்பதை நாம் சந்தர்ப்பவசமானது என்று கொள்ள அவசியமில்லை.

 

ஆப்கான் பயணத்தை சாகசப் பயணமாக மேற்கொள்ளும் விடலைப் பிராயத்தினரின் ஆசை, எவ்வாறாக வரைமுறையற்ற அதிகாரமும் மூடுண்ட விசாரணைப் பண்புகளும், இட்டுக்காட்டிய விசாரணை நடவடிக்கைகளும் கொண்ட அமெரிக்க மேற்பத்திய சமூகத்தினரிடம் சிக்கி அவஸ்தைப்பட்டுக் குன்டனாமோ சிறைமுகாமுக்குச் சென்று மீள்கிறார்கள் என்பதனைச் சித்திரிக்கிறது தி ரோட் டு குன்டனாமோ.

 

தி வோர்ல்ட் டிரேட் சென்டர் அமெரிக்காவின் விமர்சன சினிமா இயக்குனரான ஆலிவர் ஸ்டோனின் திரைப்படம். வியட்நாம் யுத்தத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அனுபவங்களுடன் அமெரிக்க அரசின் வியட்நாம் மற்றும் மூன்றாம் உலகக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்துத் திரைப்படங்களை உருவாக்கியவர் ஆலிவர் ஸ்டோன். ஜோர்ஜ் புஸ்ஸின் முட்டாள்தனமான நடவடிக்கைக்கான எதிர்விணையே செப்டம்பர் சம்பவம் எனக் காண்கிற ஆலிவர் ஸ்டோன், அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு புதையுண்ட மக்களுக்கு உதவுப்போய் புதையுண்டு போன தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்பு வீரர்களின் தியாகத்தைப் போற்றும் படம். நியூயார்க் கட்டிடத்தின் இடிபாடுகளின் ஆழத்தில் உயிருடன் புதையுண்டிருக்கிற மீட்புப் பணியாளர்களை மீட்கும் முன்னாள் வியட்நாம் போர் வீரன் ஒருவனின் சாசமும், அன்பும் பொறுப்பும் குறித்தது அந்தத் திரைப்படம். அதிகார வர்க்கம் மீட்புப் பணியாளர்களைக் கைவிட, மனசாட்சியுள்ள மனிதனொருவன் அவர்களைக் கப்பாற்ற விடாமுயற்சியுடன் ஈடுபடுவதை இந்தத் திரைப்படம் சொல்கிறது.

 

அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் சர்வதேச அளவில் அதிகமும் பிரச்சாரப்படுத்தபட்ட பயங்கரவாதிகள் பாலஸ்தீனத் தற்கொலையாளிகள். பாரடைஸ் நவ் எனும் திரைப்படம் பாலஸ்தீனத் தற்கொலையாளிகளின் உளவியல் பற்றிய திரைப்படம். பாரடைஸ் நவ் திரைப்படம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது பற்றிய பிரக்ஞை அப்போராளிகளுக்குள் இருப்பதைப் பேசுகிறது. காட்டிக் கொடுக்கும் பலவீனர்களை உருவாக்கும் இஸ்ரேலிய அரவுக்கு எதிராக, தனது தந்தையின் துரோகத்திற்கான சாபவிமோச்சனமே போல தற்கொலையை மேற்கொள்ளும் இளைஞனின் உளவியல் நெருக்கடியைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். மகனைப் பறிகொடுத்த தாய், நண்பனைப் பறிகொடுத்த ஆத்மநண்பன், காதலனைப் பறிகொடுக்கும் இளம்பெண், ஆனால் தவிர்க்கவியலாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்க்கொலைத் தாக்குதல்களின் பின்னுள்ள தார்மீகம் என்பதாக நகர்கிறது இந்தத் திரைப்படம்.

 

பிரான்சுக்குச் செல்லும் ஒரு இஸ்லாமிய இளைஞன் பிரெஞ்சு அரசாங்கம் அவன்மீது பிரயோகிக்கும் விசாரணை மற்றும் சித்திரவதை அனுபவங்கன் பின் இஸ்லாமிய அரசியல் உணர்வு பெறுகிறான். பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவன் அமெரிக்காவுக்கு வருகிறான். பேருந்தில் தன்னால் கொல்லப்படப் போகிற அப்பாவி மனிதர்கள் குழந்தைகள் பெண்கள் போன்றவர்களைக் கொல்ல மனமில்லாது, உளவியல் மீட்சிக்கு ஆட்பட்ட மனிதன் குறித்த திரைப்படம் த வார் வித்தின். அவனது மனதுக்குள் நடக்கும் ஒரு தார்மீகப் போராட்டம் பற்றியது இந்தத் திரைப்படம். அரபுத் தற்கொலைப் போராளிகள் பற்றிய இந்த இரு திரைப்படங்களுமே மனிதர்களாக அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடியை உலக அரசியலின் பின்னணியில் பேசுகிறது.

 

இந்த வரலாற்று ரீதியான திரைப்படங்களில், ஆட்சியாளர்களின் சார்பாளர்களாக சந்தோஷ் சிவனும், ஜான் மல்கவிச்சும் ஜக்முந்தராவும் இயங்குவதை நாம் அனுமானிக்க முடியும்.

 

மைக்கேல் விண்டர் பாட்டம், ஆலிவர் ஸ்டோன், நிசிகாந்த் காமத், ஹானி அப்துல் அஸாத், கென்னத் கிளன்னன், ஜோஸப் காஸ்டில்லோ போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பு நிலையில் நின்று பேசுவதனை நாம் பார்க்கவியலும். இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான இணக்கத்தை வலியறுத்துகிற கலைஞர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.

 

அந்தோனியோ பேர்டின் ஹாம்பர்க் ஸெல் திரைப்படம் மிகுந்த சமநிலையிடன் இரு தரப்பிலுமான பிரச்சினைகளை பார்வையாளனின் விரிந்த ஆய்வுக்கு முன்வைத்துவிட்டு நகர்ந்து விடுகிறது. உலக வரலாற்றில் நிகழந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, என்றுமே இல்லாததொரு புதிய நிகழ்வாக ஆகியிருக்கிற ஒரு அரசியல்போக்கை, அதனது தத்துவார்த்த அரசியல் உளவியல் பின்னணியுடன் முன்வைப்பதும் கூட ஒரு கலைஞன் மேற்கொள்ளக் கூடிய தேர்வுதான் என்பதற்கான சாட்சியமாக உருவாகி இருக்கிறது ஹாம்பர்க் ஸெல் திரைப்படம்.

 

3

 

பெங்களுரில் இராமசேனை இளம்பெண்களின் மீதும் இளைஞர்களின் மீதும் ஆடிய வெறியாட்டத்தை ஞாபகத்திற்குக் கொண்டு வரும் திரைப்படம் அன்வர். இந்துத்துவாதிகளின் முட்டாள்தனமான பிரச்சாரங்களால் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டு மரணமுறும் ஒரு அப்பாவி இஸ்லாமிய இளைஞன் குறித்ததொரு திரைப்படம் அன்வர்.

 

இந்தத் திரைப்படம் இரண்டு வெளிகளில் பயணம் செய்கிறது. காதல் அல்லது இரு பாலாருக்கிடையிலான இயல்பான காமம் என்பதன் வெளிப்பாட்டு வடிவமாக இருக்கக் கூடிய ‘காதலர் தினம்’ எனும் அடையாளத்தை, கலாச்சார மீட்பின் பெயரில் சூறையாடும் இந்துத்துவ தலிபான்கள் பற்றியதாக இந்தப் படம் இருக்கிறது. அதே போது ஒரு சொந்தச் சோகம் அல்லது துரோகம் எவ்வாறாக மதமுரண்களின் அடிப்படையில் குரூரமான கொலையாக முடியக்கூடும் என்பது பற்றியதாகவும் இப்படம் இருக்கிறது. முதிய இந்துத்துவாதியான அமைச்சரின் திருமணம் மீறிய காதல், தொலைக் காட்சிப் பெண்மணியின் காதல், கற்பிதங்களில் வாழ்ந்து மரணமுறும் ஓவியனின் காதல், தன் மதம் சாரந்த பெண்ணைக் காதலித்துத் தோல்வியுறுபவனின் அனுபவம், மரணத்தின் விளிம்பிலிருக்கும் மனைவிக்காக அரற்றும் போலீஸ் அதிகாரியின் அன்பு, அமெரிக்காவுக்கு ஓடிப்போக இந்துக் காதலனைத் தேரும் இஸ்லாமியப் பெண்ணின் காதல், இதனிடையில் குடும்ப கௌரவத்தைக் காக்க கொலை செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என, காதல் சமூகத்தில் எங்கெங்கிலும் நீக்கமற நிறைந்திருப்பதை அன்வர் சொல்கிறது.

 

தன்னைக் காதலித்தவள் தனது இந்து நண்பனோடு அமெரிக்கா போய்விடப் போகிறாள் என்பதை அறியும் இஸ்லாமிய இளைஞன், காதலர்களின் இருப்பிடத்தை அவர்களைத் தேடித் திரியும் இஸ்லாமிய அடிப்படைவாத உறவினர்களிடம் சொல்லி விடுகிறான். விளைவாக இந்து இளைஞன் அடித்துக் கொல்லப்படுகிறான். இஸ்லாமிய இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது துரோகத்தின் வலியிருந்து மீள, இலக்கற்று அலையும் இஸ்லாமிய இளைஞன் நடுவழியில் நள்ளிரவில் பேருந்தைவிட்டு இறங்கி வழியில் அகப்படும் ஒரு இந்துக் கோயிலினுள் அடைக்கலமாகிறான்.

 

இந்துக் கோவிலினுள் நுழைந்துவிட்ட இஸ்லாமிய பயங்கரவாதி என இந்துத்துவா அமைப்புகள் அங்கு குழும, தொலைக்காட்சிகள் குவிய, கும்பமேளாக் கூட்டம் கூச்சலிட, வேறு வழியின்றி கோயிலைவிட்டு வெளியேறிச் சரணடைய வரும் இளைஞன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படும் கோரத்தை முன்வைக்கிறது அன்வர் திரைப்படம். சொந்தச் சோகம் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத காட்டுமிராண்டிக் கூட்டமாகக் கெக்கலித்துக் கொண்டிருக்கிறது இந்துத்துவக் கும்பல். குடும்பம், வாழ்வு,காதல், மதம், அரசியல் என இந்திய சமூகம் பற்றிய ஒரு நுண்சித்திரமாக இருக்கிறது அன்வர் திரைப்படம்.

 

அன்வர் தவிரவும் பிற படங்கள் அனைத்துமே ‘பயங்கரவாதி’ எனும் நபரின் உருவாக்கத்திற்கான சமூக உளவியல் பின்னணி குறித்ததாகவே இருக்கிறது.

 

ஆஜ்மீர் நகரத்தின் உருது மொழிப் பேராசிரியராக, இஸ்லாமியர்களிடம் அன்பு பாராட்டும் ஒரு மனிதராக இருப்பவரும் அவரது மனைவியும் அவர்களிடம் வந்துசேரும் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத இளைஞனும் குறித்ததொரு திரைப்படம் பிளாக் அன்ட் வொய்ட். குஜராத் படுகொலையில் தனது உறவினர்களைப் பறிகொடுத்தவன் எனும் அறிமுகத்துடன் உருதுப் பேராசிரியரிடம் அறிமுகமாகி, அவரது மனைவியின் அன்பிiயும் பெற்று, தில்லி சுதந்திர அணிவகுப்பில் குண்டுவைப்பதற்கான திட்டத்துடன் வருகிறான் ஒரு இஸ்லாமிய இளைஞன். பேராசிரியரினது மனைவியின் அரசியல் செல்வாக்கினால் சுதந்திர தின விழா மேடைக்கும் சென்று விடுகிறான் இளைஞன். காவல்துறையினர் அவனை அடையாளம் கண்டு துரத்துகிறார்கள் பேராசிரியர் அந்த இளைஞனை பயங்கரவாதி என நம்புவதில்லை. ஆஜ்மீரில் வாழும் இந்து முஸ்லீம் என இருபகுதி மக்களும் அவனிடம் அன்பு செலுத்துகிறார்கள். காஷ்மீர் பிரச்சினைக்காக பழிவாங்கும் வெறியுடன் வரும் அந்த இளைஞன், இருந்த போதிலும் ஆஜ்மீர் மக்களின் அன்பினால் மனத் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறான். இறுதியில் கொலைவெறியாட்டம் ஆட அவன் தயங்குகிறான். ஆனால் காலம் கடந்துவிட்டது. அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். அவனது உடலின் முன் பேராசிரியர் அரற்றவதுடன் பிளாக் அன்ட வொய்ட் படம் முடிகிறது.

 

பிரித்தானியாவுக்குச் சென்றுவிட்டு இந்தியாவுக்கு மீளும் ஒரு இஸ்லாமிய மருத்துவர் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் பயங்கரவாதியாக ஆக்கப்படும் நிகழ்வு குறித்த திரைப்படம் அமீர். அமீர் மிகச் சாதாரணமான பள்ளிக் கூடத்தில் படித்து, தனது முயற்சியானால் மருத்துவராக ஆனவன். இந்துப் பெண்ணைக் காதலிப்பவன். அவனது குடும்பம் மும்பையில் இருக்கிறது. இலண்டன் சென்றுவிட்டு மும்பை விமான நிலையத்தில் இறங்கும் அவன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்தப்படுகிறான். பயங்கரவாதிகளின் உலகம் ஒரு வலைப் பின்னலான உலகம். அமீரை வைத்து மும்பையில் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவது அவர்களது திட்டம். அவனை மிரட்டுவதற்காக அடிப்படைவாதிகள் அவனது குடும்பத்தைக் கடத்திப் பணயக் கைதிகாளாக வைக்கிறார்கள். தாம் சொன்னபடி செய்து முடித்தால் அவனது குடும்பத்தை விடுதலை செய்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.

 

அந்த நிகழ்வின் போக்கில் மும்பையில் வாழும் இஸ்லாமிய குடியிருப்புகளுக்குள் அமீரைக் கொண்டு போகிறார்கள். மலஜலம் கழிப்பது என்கிற அடிப்படை வசதிகள் கூட இல்லாத வறிய இஸ்லாமிய மக்களின் வாழ்வை அவன் பார்க்கச் செய்கிறார்கள். அமீருக்கு கைத்தொலைபேசியில் கட்டளையிடுகிறவர் ஒரு இஸ்லாமிய மதப் பெரியவர். தாம் ஜிகாத் நடத்துவதாகவும், அதற்கென வெளிநாட்டு நண்பர்கள் பணம் அனுப்புவதாகவும் அவர் சொல்கிறார். ஒரு பணப்பெட்டியை ஒரு இடத்தில் கொண்டு சேர்ப்பது அமீரது வேலை என ஆரம்பத்தில் அவனுக்குச் சொல்லப்படுகிது.

 

இடையில் திட்டமிடப்பட்ட ஒரு கும்பலின் அமிருடனான அடிதடியின் பின், அமீர் அறியாமல் அவனது பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்படுகிறது. அந்தப் பெட்டியை பேருந்து இருக்கையின் அடியில் நகர்த்தி வைத்துவிட்டு அவன் இறங்கிவிட வேண்டும் எனக் கட்டளை வருகிறது. அவனது பெற்றோரைக் காப்பாற்ற அது ஒன்றுதான் அவனுக்கு வழி. அவன் பெட்டியை இருக்கையினடியில் மறைத்துவிட்டு பேருந்திலிருந்து இறங்குகிறான். ஒரு சந்தியில் சிக்னலில் பேருந்து நிற்கிறது. இறங்கும் அமீரை நோக்கி ஒரு குழந்தை கை அசைக்கிறது. இவனால் நொடியில் சாகப் போகும் குழந்தையின் விடைபெறல் அது.

 

அமீர் வேகமாக பேருந்துக்குள் ஏறி, பெட்டியை இருக்கையின் கீழிருந்து எடுத்து, பேருந்திலிருந்து வெளியேறி, சாலையில் மராமத்தில் ஈடுபட்டிருக்கும் தொப்பியணிந்த பணியாளர்களுக்குச் சைகை செய்து, வெட்டப்பட்ட குழியினுள் இறங்க முயற்சி செய்ய, பெட்டிக்குள் இருக்கும் குண்டுவெடித்து அமீரின் உடல் சிதறி நெருப்புக் கங்கு பறந்து வீழ்கிறது. பொதுமக்கள் காப்பாற்றப்பட்டு விட்டார்கள். ‘அந்த பயங்கரவாதி ஏன் அந்தப் பெட்டியை பேருந்திலிருந்து எடுத்துக் கொண்டு ஓடினான்?’ என்கிற காரணம் தெரியவில்லை எனச் சொல்கிறாள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண். இது அமீரின் துயரக் கதை.

 

காவல்துறையின் பாலுறுவு வல்லுறவுக்கு உள்ளாகும் ஒரு பெண், சிறைக் கொட்டடியில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தன் தந்தையின் நினைவாகப் பழிவாங்கும் பொருட்டு, பயங்கரவாதியாக ஆவதைச் சித்தரிக்கும் திரைப்படம் தோக்கா.

 

காவல்துறையில் பணியாற்றும் ஒரு இஸ்லாமியக் காவல்துறை அதிகாரியின் மனைவியே பயங்கரவாதத் தற்கொலையாளி என்கிறது காவல்துறை. தனது மனைவி தற்கொலையாளி அல்ல என நம்பும் கணவன், அவனது மனைவியின் மரணத்தின் பின்னுள்ள காரணத்தைத் தேடிச் செல்கிறான். அவளது தாத்தாவிடம் சென்று சேரும் அவன் காரணங்களையும் விளைவுகளையும் அறிகிறான். தனது மனைவியின் தகப்பனார் எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செலலப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதை அவன் அறிகிறான். அதற்காக நியாயம் கேட்கச் சென்ற அவனது மனைவி, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதை அவளது தாத்தா சொல்கிறார்.

 

மனைவியினது சகோதரனும் அவனது தந்தையின் மரணததிற்குப் பழிவாங்குவதற்காக மும்பை சென்றிருக்கிறான் என்பதனையும் காவல்துறை அதிகாரி அறிகிறான். தனது மனைவியின் மனமாற்றத்திற்கும் அவளது சகோதரனின் மனமாற்றத்திற்கும் பழிவாஙகும் நடவடிக்கைக்கும் பின்னால் பழிவாங்கும் நடத்தைக்கான உந்துதலாக ஒரு இஸ்லாமிய மௌல்வி இருப்பதை அவன் அறிய வருகிறான். மனைவியின் சகோதரனைக் காப்பாற்றுகிறான். இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொன்றொழிக்கிறான். தனது மனைவியின் தகப்பனது மரணத்திற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையை முடிவெடுக்க வைக்கிறான். இந்த இஸ்லாமியக் காவல்துறை அதிகாரி மேற்கொண்டதுதான் ‘உண்மையான ஜிகாத்’ என அவனது மனைவியின் தாத்தா சொல்வதுடன் தோக்கா படம் நிறைவுபெறுகிறது.

 

அனுராக் கேஸ்யாப்பின் ‘பிளாக் பிரைடே’ 1993 இல் துவங்கி, 1993-1992 என முன்னும் பின்னுமாக நகர்கிறது. வேகமான காடசி மாற்றங்கள் கொண்ட இந்தத் திரைப்படம் இன்று வரையிலான இந்து-முஸ்லீம் பிரச்சினையின் அரசியல் வேர்களையும், அதனது பற்பல பரிமாணங்களையும் பேசுகிறது. அதே வேளை, ஒரு திரில்லர் படத்திற்கான அத்தன அமசங்களையும் கொண்டிருக்கிறது. மும்பையில் 1993 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி, பற்பல இடங்களில் குண்டு வெடிக்கிறது. காவல் துறையினர் ஆதாரங்களுக்காகத் தேடித் திரிகிறார்கள். கைவிடப்பட்ட வாகனங்கள் கிடைக்கிறது. கைவிடப்பட்ட வேன் ஒன்றும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வெடிக்காத ஸ்கூட்டர் ஒன்றும் கிடைக்கிறது. வாகனங்கள் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனும் விவரம் கிடைக்கிறது. டைகர் மேமனின் முகவரி கிடைக்கிறது. சமவேளையில், திட்டத்திற்கு ஏற்பாடு செய்த டைகர் மேமன் குண்டுவெடிப்புகள் நிகழ்வதற்கு முன்பாகவே குடும்பத்துடன் துபாய்; சென்று விடுகிறான்.

 

தாவூத் இப்பராகிமும் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்களில் முக்கியமானவன் எனும் தகவல் தெரிகிறது. சுங்க இலாக்கா அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அனைவருமே பாகிஸ்தானிலிருந்து, ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை இந்தியாவுக்குள் கடத்தி வருவதற்காக மேமனிடம் லஞ்சம் பெற்றுக் கொள்கிறார்கள். இந்தக் கும்பலுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதி முதலாளி ஒருவர், தன் கண்ணெதிரில்; தனது மனைவியும் மகளும் போலிசினால் துகிலுரிவதைப் பார்த்து தற்கொலை செய்து கொள்கிறார். டைகர் மேமன் வாக்குக் கொடுத்தபடி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட சிலரைக் காப்பாற்றாமல் அவர்களைக் கைவிடுகிறான். மாநிலம் மாநிலமாக அலைந்து திரியும் பாதே கான் காவல் துறையின்; அப்ரூருவராக ஆகிறார்.திட்டம் தீட்டியவரகள் டைகர் மேமனும் தாவுத் இப்ராஹிமும் என்பது நிரூபணமாகிறது. துபாயில் அவர்கள் திட்டம தீட்டினார்கள் என்கிற செய்தியும் நிருபணமாகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் ஐ..எஸ்.ஐ.மூலம் குண்டு வெடிப்ப்பாளர்கள் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றது நிரூபணமாகிறது. படம் ஒரு துப்பறியும் படம், அல்லது போலீஸ் கதை சொல்லும் ஒரு சாகசப்படம என்றால், கதை இத்துடன் நின்றிருக்க வேண்டும்.

 

‘பிளாக் பிரைடே’ திரைப்படம், இந்து-முஸ்லீம் என இரண்டு அடிப்படைவாதம் பற்றியும் கேள்வியெழுப்புகிறது. அதே வேளையில், இஸ்லாமியத் தீவிரவாதம் வேர்கொண்டெழுந்ததற்கான திட்டவட்டமான காரணமாக, பாப்ரி மஜீத் இடிப்பையும், 1992 மற்றும் 1993 ஜனவரி மாதங்களில் இஸ்லாமிய வெகுமக்கள் மீது, மும்பையில் நடந்த திட்டவட்டமான தாக்குதல்களும் காரணம் எனப் படம் திட்டவட்டமானச் சொல்கிறது. இந்தக் குண்டுவெடிப்பின் பின்னிருந்த மனிதர்களின் மனநிலைக்குக் காரணம் என்ன? பாப்ரிமஜீத் பிரச்சினையின் பின் மும்பையில் நிகழந்த இந்துத்துவாதிகளின் தாக்குதல் தீவிரமாகிறது. தமது கண்களின் முன்பேயே தமது சகோதரியரும் தாயார்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதை விவரிக்கிறார்கள்;. தம் கண்ணெதிரிலேயே தமது உறவுகளும் உடமைகளும் எரிக்கப்பட்டதை அவர்கள் நினைவு கூர்கிறார்கள். டைகர் மேமனது உடமைகளும் இந்தக் கலவரத்தில் தீக்கிரையாக்கப்படுகிறது. சொந்த இழப்பும், அரசியல் இஸ்லாமின் ஜிகாதிய போதனைகளும், பாகிஸ்தான் உளவுத்துறையும் சேர்ந்து தர்க்கபூர்வமாக குண்டுவெடிப்பாகப் பரிமாணம் பெறுகிறது. சதித் திட்டத்தில் பங்கு பற்றியவர்கள், காவல்துறையின் தேடுதலில் இன்னும் சிக்காதவர்கள் எனும் பட்டியல் திரையில் தோன்றப் படம் முடிகிறது.

 

பிளாக் அன்ட அன்ட வொய்ட், பிளாக் பிரைடே, அமீர், தோக்கா என இந்த நான்கு திரைப்படங்களிலும் இந்தியச் சூழலில், மிகச் சாதாரணமான வாழ்க்கையை மேற்கொள்கிற இந்திய இஸ்லாமிய ஆண்களும்; பெண்களும் பயங்கரவாதிகளாக ஆவதற்கான வரலாற்றுரீதியான காரணங்கள் சொல்லப்படுகிறது.

 

குஜராத், காஷ்மீர், மும்பை போன்ற இடங்களிலான இஸ்லாமிய வெகுஜனங்களின் மீதான அரச வன்முறை இந்த உணர்வுக்கான ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. எந்தவிதமான திட்டவட்டமான குற்றச்சாட்டுக்களும் அற்ற வகையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடியில் சித்திரவதைக்குள்ளாகும் நபர்களது மரணம் பிறிதொரு காரணமாக இருக்கிறது.

 

இந்த நான்கு படங்களிலும் ஒரு அரசியல் நடவடிக்கையாக பயங்கரவாதத்தைத் தேர்வதற்கான உளவியலை மத அடிப்படைவாதிகளே உருவாக்குகிறார்கள். இந்த மத அடிப்படைவாதிகள் தம்மளவில் சொகுசான ஆடம்பரமான பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்கள் மதபீடங்களில் அதிகாரம் செலுத்துபவர்களாக, வியாபாரிகளாக, பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஸ்தூலமாக பாதிப்புக்குள்ளான இளைஞர்களையும் இளம்பெண்களையும் இவர்கள் தமது அடிப்படைவாத அரசியல் நோக்குகளுக்குப் பாவிக்கிறார்கள். மரணத்திற்கு ஒரு இறையியல் விளக்கமும் கொடுத்து, சொர்க்க நம்பிக்கையை உருவாக்குபவர்கள் இத்தகைய அடிப்படைவாதிகளே என்பதனை இந்த நான்கு படங்களும் முன்வைக்கின்றன.

 

தத்தமது வாழ்நிலத்தின் ஸ்தூலமான அரச அடக்குமுறை மற்றும் காவலதுறை வன்முறைகளால், வெகுசாதாரணமான இஸ்லாமிய இளைஞர்களும் பெண்ளும் எதிர்ப்புக்குத் தள்ளப்படுகிறார்கள். அதற்கான வடிகால்களை மத அடிப்படைவாதிகள் வழங்குகிறார்கள். சொர்க்க மீட்சியையும் அவர்கள் தருகிறார்கள். இந்தக் ‘கருத்தமைவு’ – நிஜமான துயரம் அதற்கான வடிகாலாக மத அல்லது இனமீட்சி எனும் கருத்தியல் – அனைத்து விதமான பயங்கரவாதத் திரைப்படங்களிலும் இருக்கிறது.

 

ஹாம்பர்க் ஸெல்லில் அவர்களை வழிநடத்துவது சொர்க்க நம்பிக்கைதான். பாரடைஸ் நவ்வில் மரணித்த அடுத்த நொடியில் அவர்கள் சொர்க்கம் அடைவார்கள் எனப் போராளி அமைப்பின் தலைவர் தெரிவிக்கிறார். அமீரைத் தொடர்ந்து ஜிகாத்துக்காக நீ நிற்க வேண்டுமெனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார் மதப் பெரியவர். தோக்காவில் இளம்பெண்ணும் அவளது சகோதரனும் அவர்களது நடவடிக்கைத் தேர்வின் முன்பாக இஸ்லாமிய மௌல்வியிடம் போதம் பெறுகிறார்கள். தி வார் வித்தின் தற்கொலையாளியும் அவ்வாறே உளவியலில் தகவமைக்கப்படுகிறார்.

 

இந்தத் திரைப்படங்களில் அனைத்திலுமே மேவியிருக்கிற மிக முக்கியமான ஒரு பிரச்சினை இதுதான் : தற்கொலையாளிகள் எவரும் உயிர்க்கொலை புரிவதை மனமுவந்து ஏற்பதில்லை. அது தொடர்பான தார்மீக நெருக்கடி அவர்களிடம் இருக்கிறது. அந்தத் தார்மீக நெருக்கடியையும் தாண்டிச் செய்லபடுவதற்கு உந்துவதாக அவர்களது துயரம் தோய்ந்த கையறுநிலை அனுபவங்கள் அவர்களுக்கு இருக்கிறது. அடிப்படைவாதிகள் இந்த வெளியைத் தமது அதிகார நோக்கங்களுக்குச் கச்சிதமாகப் பாவிக்கிறார்கள்.

 

நிஜத்தில் பயங்கரவாதிகள் மனநோயாளர்கள் அல்ல. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். சித்திரவதைக்கு உள்ளானவர்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள். பலவீனர்களாக ஆக்கப்பட்டவர்கள். கையறுநிலைக் கடவுளர்கள் அவர்கள். அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிற மத அடிப்படைவாதிகள்தான் மனநோயாளர்கள். தத்தமது அதிகார வெறியைத் ஸ்தாபிக்கும் ஆசை கொண்டவர்கள் இவர்கள்தான். ஸ்தூலமான துயருக்கு ஸ்தூலமான அரசியல் பாதையைக் காட்டாத இந்த அடிபபடைவாதிகளே அடிப்படையில் பயங்கரவாதிகள்.

 

4

 

பயங்கரவாதம் குறித்த திரைப்படங்களிலேயே பெருவெற்;றி பெற்ற திரைப்படம் நீரஜ் பாண்டேவின் எ வெட்னஸ்டே. குறிப்பான அரசியல் ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘விலக்கிய’ ஒரு மிக மோசமான இந்த்துவப் பயங்கரவாதப் படம் என்றால், அது எ வெட்னஸ்டே படம்தான்.

 

எ வெட்னஸ்டே திரைப்படத்தின் கதைதான் என்ன? பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியப் பொதுமகன், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களின் உதவியுடன், தானும் ஓரு இஸ்லாமிய பயங்கரவாதி போல் வேடமிட்டு, அறியவரப்பெற்ற, விசாரணையில் இருக்கிற, நான்கு பயங்கரவாதிகளை விடுவிக்கச் செய்வதற்காக ஒரு இடத்திற்குக் கொண்டுவரச் சொல்லி பாசாங்கு காட்டி, அவர்கள் நால்வரையும் கொலை செய்து முடிக்கிறான்.

 

இந்த இவனது நடவடிக்கைக்கு அரசின் முதலமைச்சர், முழுமையான காவல்துறை அமைப்பு, தொலைக்காட்சி நிறுவனங்கள் என அனைத்தும் அணுசரனை வழங்குகின்றன. இந்திய அரசு, ராணுவம்,போலீஸ், பாராளுமன்றம் என எல்லாம் கைவிட்டாலும், இம்மாதிரியான வீரதீரமான, விவேகமான ‘தலைவன் இருக்கின்றான்’, கவலைப்படாதீர்கள், இந்திய முட்டாள் பொதுஜனங்களே என்று நமக்குச் சொல்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. நல்லது, நிரம்பவும் நல்லது.

 

பொதுவாக வெகுஜனம் எனக் குறிப்பிடுவதே ஒரு அயோக்கியத்தனம். வெகுஜனம் என்பவன் இங்கு மதம்,சாதி,இனம்,மொழி என்கிற தன்னிலையாகவும் அடையாளம் கொண்டவனாகவும்தான் இருக்கின்றான். பாப்ரிமஜீத், குஜராத், மும்பை, தில்லி எனும் நிகழ்வுகளின் பின், இந்தியச் சூழலில் இவன் இந்துவாகவும் இஸ்லாமியனாகவும் கிறிஸ்தவனாகவும்தான் இருக்கின்றான். இதில் மதநீக்க மனநிலை என்பது ஒரு அரசியல் சார்ந்த நிலைபாடு கொண்ட மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். இவ்வாறான மதநீக்க மனநிலை கொண்டவன், எ வெட்னஸ்டே பட நாயகன் மாதிரியில் பொத்தாம் பொதுவாகக் குஜராத், தில்லி, மும்பை, நியூயார்க்,இலண்டன், மலாகான் அனைத்தையும் மொட்டையாக ‘பயங்கரவாதத் தாக்குதல்கள்’ என்று சொல்ல மாட்டான்.

 

குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் படுகொலைகளை இஸ்லாமியர்கள் செய்யவில்லை. அதற்குப் பின்னான படுகொலைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் இந்துத்துவவாதிகளால் செய்யப்பட்டது.

 

மலாகானில் இஸ்லாமிய மக்களின் புதைகுழிகளை, மசூதிகளைக் குண்டுவைத்துத்; தகர்த்தவர்கள் இஸ்லாமிய மக்கள் இல்லை. இந்துத்துவ அடிப்படைவாதிகள்தான் இப்படுபாதகச் செயல்களைச் செய்தார்கள் என இப்போது திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த இரு பயங்கரவாதச் செயல்களையும் செய்தவர்கள் இந்துத்துவவாதிகள். ஆர்.எஸ்.எஸ்.சினர் மற்றும் பஜ்ரங் தளத்தினர் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியினர். இவை எல்லாவற்றுக்கும் முதலாக பாப்ரி மஜீத் இடிப்பு பயங்கரவாதத்தைச் செய்தவர்கள் இந்துத்துவவாதிகள். தில்லி பாராளுமன்றப் பயங்கரவாதத்தையும் தாஜ்கொரமேண்டல் பயங்கரவாதததையும் செய்தவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள்தான்.

 

இந்தியாவில் பயங்கரவாதத்தின் தோற்றம் இந்துத்துவவாதிகளால் நிகழத்தப்பட்ட பாப்ரிமஜீத் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்த சிவசேனாவின் இஸ்லாமிய மக்கள் மீதான மும்பைப் படுகொலைகளும்தான்.

 

ஆகவே, இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய உரையாடல் என்பது பாப்ரிமஜீத் துவங்கி, பிற்பாடாக மும்பை, குஜராத், தில்லி என எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

 

இது இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய ஒரு பரிமாணம். பிறிதொரு முக்கியமான பரிமாணமும் உண்டு. அது சர்வதேசிய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டது. இதன் பங்காளிகள் இருவர். முதலாமவர் ஜோர்ஜ் புஸ். இரண்டாமவர் பின்லாடன். பின்லாடனின் வழித்தோன்றல்கள்தான் மும்பை சுரங்க ரயில்களில் குண்டு வைத்தவர்கள். தாஜ்கொரமேண்டலில் படுகொலை செய்தவர்கள். ஆகவே இந்து-இஸ்லாம் என இரண்டு வகையிலான மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தையும் எடுத்துக் கொண்டுதான் இங்கு ஒரு கலைஞன் பேச வேண்டும்.

 

ஆக, இஸ்லாம், இந்து, கிறிஸ்தவன் எனும் அடையாளங்களை மீறிய ஒரு பொதுமகன் இங்கு இருப்பானானால், அவன் இரண்டு பயங்கரவாதங்களையும் குறித்த விமர்சன உணர்வுள்ளவனாகத்தான் இருப்பான். இந்த அரசியல் தெளிவுடனான உரையாடலைத் தான் இந்தப் பொது மகன் வைப்பான். இதுவன்றி குஜராத், மலாகான்,மும்பை,தில்லி என எல்லாவற்றையும் கலந்து கட்டி பொத்தாம் பொதுவாகப் பயங்கரவாதம் எனப்பேசுவது ஓரு வகையான அரசியல் பம்மாத்து.

 

எ வெட்னஸ்டே கதாநாயகனின் மத அடையாளத்தைக் காவல்துறை அதிகாரி கேட்கிற போது, நான் ‘முட்டாள் பொதுமகன்’ ((stupid common man) என்று அவன் தன் அடையாளம் குறித்துச் சொல்கிறான். சரி. கதையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்துபவன் மத அடையாளங்கள் அரசியல் அடையாளங்கள் அற்ற பொது மகன்.

 

எதிரியான நால்வரதும் அடையாளம் என்ன? நால்வரும் இஸ்லாமியர்கள். பாகிஸ்தானோடு தொடர்பு பட்டவர்கள். கதையில் அவர்களது பாத்திரக் கட்டமைப்பு என்ன? விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். எ வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் ஏன் அவர்களைக் கொல்லத் திர்மானிக்கிறான்?. இந்திய அரசு, காவல்துறை, உளவமைப்பு அனைத்தும் தோற்றுப் போய்விட்டது. முழுமையான இந்;திய அமைப்பும் விரயம். விசாரித்து தண்டனை வழங்க பத்து வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். காலதாமதம். வீட்டில் புகுந்த கரப்பான் பூச்சியை சுத்தப்படுத்துகிறான் கதாநாயகன். பூச்சிக் கொல்லி மருந்தைப் பாவிக்கிறானாம் கதாநாயகன். அப்படித்தான் அவர் சொல்கிறார்.

 

இஸ்லாமிய மக்கள் மலாகானில் இந்துத்துவப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு இதே காரணத்தைத் தான் சொல்கிறார் சிவசேனாத் தலைவர் மனோகர் ஜோசி. இது அப்பட்டமான பாசிச மனோ நிலை. ஹிட்லரின் அதிமனிதன் தான் இவன். இந்தியாவைத் தூய்மை செய்யப் புறப்பட்ட, சட்டத்திற்கு அப்பலான, பாஸிஸ்ட் மனநிலையிலுள்ள ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஒரு பாசிச திரைப்பட இயக்குனராகவே எனக்கு நீரஜ் பாண்டே தென்படுகிறார்.

 

நிஜத்தில் உலகெங்கிலும் அன்றாடம் பயணம் செய்கிற வெகுமக்களின் மனநிலை என்பது தற்போது மிகவும் பதட்டமானதாகவே இருக்கிறது. விமானப் பயணங்கள் பாதுகாப்பற்றதாகிவிட்டது. இரயில் பயணங்கள் பாதுகாப்பற்றதாகிவிட்டது. பேருந்துப் பயணங்களும் பாதுகாப்பற்றதாகிவிட்டது. உலகெங்கிலுமே சக மனிதனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் கூடிய ஒரு மனநிலை அனைவருக்குமே உருவாகிவிட்டது என்பது ஒரு நிஜம். இதற்கான காரணங்கள் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள்தான். ஜோர்ஜ் புஸ், பின்லாடன், அத்வானி என இவர்கள்தான் இதற்கான காரணம். இது உலகெங்கிலும் குடிமக்களாக அவரவரது சொந்த அனுபவங்களில் இருந்து உருவாகியிருக்கிற ஒரு பீதி. திகில். பயங்கரம்.

 

இந்த மனோ நிலையை நிசிகாந்த் காமத்தின் மும்பை மேரி ஜான் அதியற்புதமாகச் சித்தரிக்கிறது. பரஸ்பரம் மனித சந்தேகம் ஏற்படுத்தும் பேரழிவை அந்தப்படம் சித்திரிக்கிறது. அந்தத் திரைப்படத்தில் பாத்திரங்களுக்கு இந்து முஸ்லீம் என்கிற தெளிவான அடையாளங்கள் உண்டு. சந்தேகப்படுபவன் இந்து. சந்தேகத்திற்கு உள்ளாகிறவன் முஸ்லீம். பாசிச மனோநிலைக்கு உள்ளாகிறவன் இந்துவாக இருக்கிறான். தாக்குதலுக்கு இறையாகிறவராக அப்பாவி இஸ்லாமியப் பெரியவர் இருக்கிறார். இஸ்லாமிய இளைஞர்கள் இருக்கிறார்கள். கடைசியில் தனது வெறிகொண்ட நடத்தைக்காக வெட்கமடைகிறார் இந்து இளைஞர்.

 

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னான ஓராண்டு நினைவின் போது நியூயார்க், இலண்டன், மும்பை நகரங்களில், அந்தத் துயர நிகழ்வின் தருண நொடிகளில் மூன்று நகரத்தின் சகல மத இன மொழி மக்களும் இரண்டு நிமிடம் உறைந்து போய் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். ஆயிரம் வயலின்கள் உருவாக்க முடியாத அற்புதமான இணைந்த இசைத் தருணம் அந்த மௌனத் தருணம். இந்தத் தருணத்தை அரத்தமள்ளதாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் கிறித்தவர்கள் யூதர்கள் என அனைத்து மதத்தவர்களும்தான். இதுதான் நிஜம்.

 

5

 

மகத்தான கலைஞன் ஒரு போதும் வெறுப்பை விதைப்பதில்லை. மும்பை மேரி ஜான் வேறுபட்ட மனிதர்க்கிடையில் அன்பை விதைத்திருக்கிறது. எ வெட்னஸ்டே படம் வெறுப்பை விதைத்திருக்கிறது.

 

எ வெட்னஸ்டே படத்தில் வரும் ஆரிப் என்கிற இஸ்லாமிய காவல்துறை அதிகாரியை ‘ஸைக்கோ’ என்கிறார் சக அதிகாரி. விசாரணைக் கைதிகள், காவல்துறை ஊழியர் என குற்றவாளி எனத்தான் கருதுகிறவர்கள் அனைவரையும் நையப் புடைக்கிறவராக அவர் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். கடுமையான இந்திய தேசபக்தராக அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். உதாரணமான காவல்துறை அதிகாரியாக அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். படத்தின் திரைக் கதையில் இது ஒரு தந்திரமான நகர்வு. அவரை உந்திச் செல்வது காவல்துறை அதிகாரமும் வன்முறையும் தானேயொழிய, எந்த விதமான தார்மீக நிலைபாடுகளும் அவரை உந்திச் செலுத்துவதில்லை.

 

இந்திய சமூகமும் இந்திய அரசும் உத்தரவாதப்படுத்துகிற நீதித்துறை அமைப்பின் சுயாதீனத் தன்மையும், இந்திய சமூகத்திலுள்ள ஒப்பீட்டளவிலான தகவல் தொழில்நுட்ப ஊடகங்களின் சுயாதீனத்தன்மையும்தான் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள். இதனைத் துச்சமாக உதாசீனப்படுத்திவிட்டு, நிராகரித்துவிட்டு, தமது கொலைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட்டு, ஜனநாயகவாதிகளாக முதலமைச்சர்களாக இந்தியாவில் இருக்கிறார்கள்.

 

இவர்களும் பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தைத்தான் தாங்கள் நடத்துவதாகச் சொல்கிறார்கள். தமது எதிரிகள் இஸ்லாமியர்கள் என்றும், இவர்கள் பாகிஸ்தானால் வழிநடத்தப்படபவர்கள் எனவும் அவர்கள் சொல்கிறார்கள். லால் கிருஷ்ண அத்வானியும், நரேந்திரமோடியும் இத்தகைய அரசியல்வாதிகள் தான். ஏ வெட்னஸ்டே படத்தின் இந்திய முட்டாள் பொதுமகனாக, கதாநாயகனாக வருபவரும் இத்தகையவர்தான். அவரது படுகொலை நடவடிக்கைகளை பொதுமக்களிடமிருந்து மறைக்கும் முதலமைச்சரும், காவல்துறை மேலதிகாரியும் இத்தகையவர்கள் தான். இதற்குத் துணை போகும் தொலைக் காட்சி நிறுவனத்தினரும் இத்தகையவர்கள் தான். இதுதான் குஜராத்தில் நடந்தது. இதையே நாடெங்கும் நடத்துமாறு கோருகிறார் நீரஜ் பாண்டே.

 

பயங்கரவாதம் எனும் கருத்தமைவு உலக அளவில் புழங்குவதற்குத் துவங்கிய பின்னால் இப்பிரச்சினை குறித்த வரலாற்றுரீதியான மீள்வாசிப்பாக அதிக அளவிலான முழுநீளப் படங்கள் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. ஸ்டீபன் ஸ்பீல்பர்க் (Munich : 2007),யுலி எடல் (The badar mainhalf complex : 2008) போன்ற இயக்குனர்கள்; பாலஸ்தீனப் பிரச்சினை குறித்தும், ஜெர்மனியில் அறுபகளில் செயல்பட்ட சிவப்புப் படையணி குறித்தும் இயக்கிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அரசியல் வன்முறை, தற்கொலைப் போராளிகள் குறித்ததாக இந்தத் திரைப்படங்கள் இருக்கிறது. செப்டம்பர் சம்பவத்தின் பின்பு, உலக அளவில் பயங்கரவாதம் குறித்துத் தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் நியூயார்க்-இலண்டன்-மும்பை சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.

 

இந்திய அளவில் பயங்கரவாதம் குறித்த திரைப்படங்கள் என்பதனை மூன்று பரிமாணங்களில் இருந்தே நாம் பார்க்க வேண்டும். பாப்ரி மஜீத்திற்குப் பின்பான உளவியலின் அடிப்படையில் அமைந்த மும்பையை மையமாகக் கொண்ட சம்பவங்கள் முதலாவது பரிமாணம். காஷ்மீர் பிரச்சினையும் அதில் பின்லாடன்வகை அரசியலும் நுழைந்த பின் தோன்றிய அரசியல் யதாரத்தம் சம்பந்தமானதும், இந்திய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பானதும் இரண்டாவது பரிமாணம். மூன்றாவது பரிமாணம் பஞ்சாப்பில், குஜராத்தில், தில்லியில், நடந்த சம்பங்களை முன்வைத்துப் பார்ப்பது தொடர்பான பரிமாணம்.

 

மும்பையில் நடந்த சம்பவங்களையும், காஷ்மீரில் நடப்பதையுமே இந்தியாவின் பெலும்பாலுமான வெகுஜன இயக்குனர்கள் பயங்கரவாதம் எனும் வகையிலான சினிமா என வகைப்படுத்துகிறார்கள். ஆனால், குஜராத்திலும் தில்லியிலும் இஸ்லாமிய மக்கள் மீதும் சீக்கிய மக்கள் மீதும் நடந்திருப்பது அப்பட்டமான அரச பயங்கரவாதம் மற்றும் இந்துத்துவ பயங்கரவாதம்.

 

ராகுல் தொலாக்கியாவின் பர்ஸானியா(2005), நந்திதா தாஸின் ஃபிராக்(2008), சசிகுமாரின் காயா தரன்(2004), ஸோனாலி போஸின் அமு(2005), கவிஞரும்; இயக்குனருமான குல்ஸாரின் மச்சீஸ்(1996), போன்ற படங்களையும் நாம் இவ்வகையில் அரச பயங்கரவாதம் தொடர்பான படங்கள் என்றே வைத்து மதிப்பிட வேண்டும்.

 

பயங்கரவாதம் என்பது தொடர்பான பிரச்சினையை ஜோர்ஜ் புஸ்ஸினதும், டோனி பிளேரதும், மகிந்த ராஜபக்சேவினதும், லால் கிருஷ்ண அத்வானியினதும், நரேந்திர மோடியினதும் பார்வையிலிருந்து முன் வைக்கிற இயக்குனர்களாகவே உலகினதும் இந்தியாவினதும் பெரும்பாலுமான வெகுஜன சினிமா இயக்குனர்களது திரைப்படங்கள் இருக்கின்றன. அதனது உச்சபட்டசமான இந்தித் திரைப்பட வடிவம்தான் எ வெட்னோஸ் திரைப்படம். வெறுப்பும் விஷமும் கொண்ட இம்மாதிரியான படங்கள் குறித்து நாம் விமர்சன உணர்வும் எச்சரிக்கையும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

 

அதே நேரத்தில் உலக அளவில் ஹாம்பர்க் ஸெல் போன்ற படங்களும், இந்திய அளவில் மும்பை மேரி ஜான் போன்ற மனசாட்சியுள்ள மக்களின் மீது பேரண்பு கொண்ட இயக்குனர்களது படைப்புகளும் வந்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் நம்பிக்கையுடன் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். வெறுப்பை விதைக்க அல்ல, அன்பை விதைக்கவே இன்று கலைஞன் அவசியம்.

 

—————————————————————-

நன்றி : உயிர்மை : ஏப்ரல் 2009

Exit mobile version