அவற்றில் இரண்டை சபையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் மூன்றாவது பிரேரணையாகிய இராணுவ சேர்ப்பு தொடர்பிலான கண்டனப் பிரேரணை முன்னர் நீக்கப்பட்டு இருந்தது. நேற்று நடைபெற்ற உள்மட்டக் கூட்டத்தில் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட வாதங்களின் பின்னர் சில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு இன்று முன்மொழிவுக்காக அதுவும் அனுமதிக்கப்பட்டது. அப்பிரேரணையின் முழுவடிவம் வருமாறு – “எமது மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு இருக்கிற நிலையில் ஓரளவேனும் தமது இன்னல்களுக்காக குரல் கொடுப்பவர்களும் குடும்ப வாழ்வாதாரத்தின் அத்திவாரமாக இருப்பவர்களும் தேசத்தின் இளைய சமூகம்தான். பல்வேறு வழிகள் மூலமும் அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டு நிமிர்ந்து நிற்பவன் இன்று பயங்கரவாதியாக்கப்பட்டு அவனின் குடும்ப வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. சொந்த மண்ணில் இருந்து வெளிநாடு செல்லும் தமிழர்களில் பெரும்பான்மையினரின் பின்னணியில் இங்கு நடைபெறும் அடக்குமுறைகளின் தடயங்களே காணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு சென்றும் சிறைப்படுபவர்களின் குடும்ப வாழ்வாதாரம் இன்னும் நலிவடைந்தே செல்லும் நிலை. “இவ்வாறு தமிழின அடக்குமுறைகள் எந்த வடிவத்தில் வருகின்ற போதிலும் அதனை எதிர்த்து நிற்கவேண்டியவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய நாம்தான் என்பதை இங்குள்ள அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
“வீடுகளில் சென்று மிரட்டியும் சில பொய்யான தகவல்களை கூறியும் நடைபெறும் கடும் இராணுவ அழுத்தங்களுடன் கூடிய இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையாகும். அழுத்தங்களுக்கு உள்ளாகின்ற தமிழ் குடும்பங்கள் இத்தகவல்களை வெளியில் யாரிடமாவது முறையிடும் நிலையில் பொய்க்குற்றச்சாட்டுகள் தம்மீது பாய்ந்து தாம் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற கலக்கமும் இன்று ஏராளமான குடும்பங்ளுக்கு ஏற்பட்டுள்ளது. “இந்நிலையில் இவ்வாறான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டிய கடப்பாடு உடைய நாம் இச்சபையில் இது தொடர்பிலான கண்டனத்தை தெரிவித்தலும் அவசியமாகிறது. “இராணுவம் அண்மைக்காலத்தில் முறையற்ற விதத்தில் இளைஞர், யுவதிகள் சம்பந்தமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளன.
இத்தகைய செயல்களில் இராணுவம் தொடர்ந்து நடந்து கொள்வதை இச்சபை கண்டிக்கிறது” என்று இருந்தது. இது தவிர ரவிகரனால் முன்மொழியப்பட்டு சபையிரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றயை இரண்டு பிரேரணைகளும் வருமாறு:- “2009ம் ஆண்டு வரை வன்னியில் வசித்து இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் சொந்த இடங்களில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் மூலம் 25,000 ரூபாவும் ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பில் 25,000 ரூபாவும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டன.
இதில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இரண்டாவதாக விநியோகிக்கப்படவேண்டிய 25,000 ரூபா இன்று வரை வழங்கப்படவில்லை. இதேநேரம் குடாநாட்டில் உள்ள சில பிரதேச செயலகங்கள் அப்பணத்தை வழங்குவதாக மக்களிடம் கையொப்பம் பெற்ற போதும் இன்னமும் பணம் வழங்கப்படவில்லை. எனவே வழங்கப்படாத மிகுதிப்பணத்தை வழங்கவேண்டிய அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு மத்திய மீள்குடியேற்ற அமைச்சை இச்சபை கோருகிறது.” என்ற பிரேரணையும் – “முள்ளிவாய்க்கால் மீனவர்கள் ஏற்கனவே பாவித்த இறங்குதுறையை அவர்களுக்கு விடுவித்துக்கொடுக்க வேண்டும். கொக்கிளாய் தமிழ் மீனவர்களுக்கான இறங்கு துறையை பொருத்தமான இடத்தில் அமைத்துக்கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பணிப்பாளரை இச்சபை கோருகிறது” – என்ற பிரேரணையும் இன்றைய எட்டாவது அமர்வில் ரவிகரனால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.