Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கட்சி- எந்தவொரு இனத்தின் அல்லது சமூகத்தின் அடிப்படையிலான பெயரைக் கொண்டிருப்பின் அக் கட்சி அங்கீகாரமற்றதாகும்!:திருத்தச் சட்டமூலம்.

அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்திலுள்ள பிரிவுகளில் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு சபைக்கு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்று புதன்கிழமை உயர் நீதி மன்றத்தில் தனித் தனியாக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக் கல் செய்யவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய பல கட்சிகளும் இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அறியவருகிறது.

பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்து வதற்கானதொரு சட்டமூலம் எனும் பெயரில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கவினால் கடந்த 6 ஆம் திகதியன்று இந்த திருத்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

எந்தவொரு சட்டமூலமும் முதலாம் வாசிப்புக்கென பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அது குறித்து ஆட்சேபனைகள் எதுவும் இருப்பின் அதை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் குறித்துரைக்கப்பட்டிருப்பதற்கு அமையவே இந்த பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல்மனுக்களை தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் முன் வந்திருக்கின்றன.

இதற்கமைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமென அக் கட்சியின் பிரதிச்செயலாளரும், சட்டத்தரணியுமான நிஷாம் காரியப்பர் நேற்று தெரிவித்தார்.

யாதுமொரு கட்சி எந்தவொரு இனத்தின் அல்லது சமூகத்தின் அடிப்படையிலான பெயரைக் கொண்டிருப்பின் அக் கட்சியை அங்கீகாரமற்றதாக்கும் அதிகாரம் இந்த திருத்தச் சட்டமூலத்தின் மூலம் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்படவிருப்பதாக சுட்டிக்காட்டிய நிஷாம் காரியப்பர், இது சிறுபான்மை இனங்களுக்கு மட்டுமல்லாது சகல இனங்களுக்கும் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை மீறும் செயலென்றும் தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் 10ஆம் மற்றும் 14 ஆம் சரத்துக்களின் பிரகாரம் கலாசார மற்றும் இனரீதியாக கூட்டமைப்பு வைத்துக்கொள்ள வழங்கப்பட்டிருக்கும் உரிமையும் கருத்து வெளிப்பாட்டு உரிமையும் இதன் மூலம் மீறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த சட்ட மூலத்தை சாதாரண சட்ட மூலங்களை நிறைவேற்றுவது போல் பாராளுமன்றத்தில நிறைவேற்ற இடமளிக்காது இதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டுமென்றும் அத்துடன், இதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டு மக்களின் கருத்து பெறப்பட வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்குமாறு உயர் நீதிமன்றிடம் கோரப்போவதாகவும் நிஷாம் காரியப்பர் மேலும் கூறினார்.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை உரிமை மீறல் மனுவும் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் கள் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக செயற்படுவது தொடர்பாக ஐ.தே.க. சார்பில் அதன் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோர் நேற்று கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதில் ஐ.தே.க. இன்று நடைபெறவிருக்கும் அதன் செயற்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து இறுதி முடிவெடுக்குமென தெரிவிக்கப்பட்டது. இநேநேரம், நாளை வியாழக்கிழமைக்குள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன், தனியாக மனு எதனையும் தாக்கல் செய்யாது இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கவிருப்பதாக மனோகணேசன் கூறினார். இந்த நிலையில், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இது பற்றி கலந்தாலோசித்துள்ளதுடன், இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இக் கட்சிகள் சட்ட நடவடிக்கைகளில் இறங்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அத்துடன், லலித் முன்னணியும் (லலித் பெரமுண) பாராளுமன்ற தேர்தல்கள் சட்ட மூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம் ஆகக் குறைந்தது இரு பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிடாத அரசியல் கட்சியொன்றை அங்கீகாரத்திலிருந்து நீக்கக் கூடிய சரத்தொன்றும் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மங்கள சமரவீரவும் நிஷாம் காரியப்பரும் சுட்டிக் காட்டியதுடன், 1989 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனது பெயரில் போட்டியிட்டிருக்காமையால் அந்த கட்சிக்கே இதில் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தன.

Exit mobile version