Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடைசி மாணவன் கைது செய்யப்படும் வரை தமது போராட்டம் தொடரும்

இலங்கை அரசு கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தும் போராட்டம் இன்று ராஜபக்ச ஆட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உடுவெடுத்துள்ளது. மாணவர்கள் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்னவைக் கைதுசெய்துள்ளது. கடைசி மாணவன் கைது செய்யப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என ஒன்றியத்தின் பிரதித் தலைவர் ராஜீவ பண்டார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

எமது ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன எந்தவொரு காரணம் இன்றியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் விடுறை தினங்கள் என்பதாலும் அத்தினங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் இல்லாததாலும் அதனைப் பயன்படுத்தி அவரை தடுத்துவைப்பதற்காக சந்தர்ப்பம் பார்த்து கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். எமது நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுள்ளது.

இந்நாட்டில் அமுலில் உள்ள இலவச கல்வித்திட்டத்தை சீரழிக்கும் வகையில், உயர் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்ற திட்டங்களை நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஏனெனில், எமது எதிர்கால சந்ததியினருக்கான கல்வியைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.அந்த வகையில், நாம் செயற்பட்டமையினாலேயே உதுல் பிரேமரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிக்கு மாணவர்கள் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, இது வரையில் மொத்தமாக 80 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தை எவராலும் தடுத்துவிட முடியாது.

இறுதி மாணவரைக் கைதுசெய்யும் வரையில் எமது போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும். என்றார்.

Exit mobile version