Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடும் மழையால் சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிவு :மக்கள் தவிப்பு.

மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஐ.நா.வின் உயர்மட்ட அறிக்கை சி.என்.என்.க்கு கிடைத்திருப்பதாகவும் அந்தச் செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

உள்நாட்டு யுத்தத்தில் இரு தரப்பு மோதல்களுக்கிடையில் தப்பிப் பிழைத்து சிலமாதங்களே கடந்துள்ள நிலையில் மழையிலும் வெள்ளத்திலும் இந்த முகாம்களிலுள்ள மக்கள் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14 இல் பெய்த கடும் மழையால் பல கூடாரங்களும் மலசல கூடங்களும் மூழ்கிவிட்டதுடன், அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

300 க்கும் அதிகமான குடும்பங்கள் ஒன்றுகூடி வலயத்தின் பிரதான வாயிலை நோக்கி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் வன்முறைகளற்ற விதத்தில் தமது துன்பத்தை வெளிப்படுத்தியதாகவும் தமது எதிர்ப்பை சத்தமிட்டு வெளியிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்தால் நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும். முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாமல் பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலைமைக்கு அது இட்டுச் செல்லும் என்றும் அந்த அறிக்கை குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முட்கம்பி வேலியால் சூழப்பட்டுள்ள முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. விருப்பத்துக்கு மாறாக குற்றவாளிகள் போன்று அவர்கள் வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version