முன்நாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சுதந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டபியின் ஆதரவு நகரான ஷெர்த் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களின் மீதும், சந்தேகத்திற்கு இடமான பகுதிகளிலும் நேட்டோ விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும், அதிலிருந்து தப்பிச் செல்லும் நோக்கோடு வாகனத் தொகுதி ஒன்றில் கடாபி பயணம் செய்த போதே அவர் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக அரேபிய ஊடகங்கள் நேரடிச் சாட்சிகளை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கடாபியால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நாளாக அவரது மரண நாள் அமையட்டும் என்றார்.
இவ்வாறே அமரிக்க மற்றும் ஐரோப்பிய அரச தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துக் கருத்து வெளியிட்டனர். இதே வேளை 2000ம் ஆண்டுகளுக்குப் பின்னர் கடாபி அரசுடன் ஐரோபிய – அமரிக்க அரசுகள் நட்பு அடிப்படையிலானா அரச மட்ட உறவுகளைப் பேணி வந்தமையை குறிப்பிடத்தக்கது. இதே அரசுகள் லிபியாவிற்கு பெருமளவில் ஆயுதங்களை விற்பனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.