கடலூர் பாச்சாரப்பாளையத்தில் தலித் மக்கள் வீடுகள் தீக்கிறை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திடுக
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) வலியுறுத்தல்
நவ.27 அன்று காலை 6.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாரப்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதி மக்களின் 8 குடிசை வீடுகளை அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 500-ம் மேற்பட்ட ஆதிக்க சாதி வெறிக்கும்பல் எரித்து சூறையாடியுள்ளது. தலித் மக்களின் வீடுகளில் இருந்த 20 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. 6 இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கபப்டடுள்ளன. காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாச்சாரப்பாளையம் கிராமத்தில் 150 குடும்பங்கள் மட்டுமே தலித் வகுப்பை சேர்ந்தவர்கள். எஞ்சியுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிற்படுத்ப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். சமீப காலங்களில் தலித் பகுதியில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு படித்த இளைஞர்களில் பலர் காவல் துறை உள்ளிட்ட அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த வளர்ச்சியை ஆதிக்க மனோபாவம் கொண்ட கும்பல் பொறுத்துக்கொள்ள முடியாததால் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காக வந்த தீயணைப்பு வாகனம், முதலுதவி வாகனம் மற்றும் வாட்டாட்சியர் வாகனங்களை தடுத்து அதன் மீதும் தாக்குதல் நடத் தியுள்ளனர். அண்மையில்தான் தர்மபுரியில் கொடூரமான தாக்குதல் நடந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீள்வதற்கு முன்பாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இது போன்ற தாக்குதல்கள் தொடர்கதையாகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசின் வசம் உள்ளது. உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவே அதை நிறைவேற்ற முடியும். எனவே, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, முறையான நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.