Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடந்த சில ஆண்டுகளில் 111 என்கவுன்டர் மரணங்கள்:தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட 111 என்கவுன்டர் மரணங்கள் குறித்து ஏன் அறிக்கை அளிக்க வில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த 2004 ம் ஆண்டு மணிப்பூர் காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஒரு என்கவுன்டர் மரணம் குறித்து ஆசிய மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் சுஹாஸ் சக்மா என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து ஆணையத்தால் நடத்தப்பட்ட விசாரணைகளில் அம்மாநிலத்தில் நடந்த பல்வேறு என்கவுன்டர்கள் குறித்து தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக கடந்த 2004 ம் ஆண்டு நடந்த ஒரு என்கவுன்டர் மரணம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஆணையம், உண்மையில் அந்த என்கவுன்டரில் அப்பாவி ஒருவரை போலீசார் கொன்றுள்ளனர் என்று கூறியுள்ளது.

ஆர்.கே.சஞ்சோபா என்ற அந்த நபர் முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் ஜெய்சந்திர சிங்கின் உறவினராவார். அவர் கடந்த 2004 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ம் தேதி தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இம்பால் நகரின் சகோல்பந்த் என்ற இடத்தில் பட்டப்பகலில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என்று அம்மாநில போலீசார் விசாரணை அறிக்கையில் கூறியுள்ளதை மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது.

‘போலீசாரின் விசாரணை அறிக்கையில் சம்பவத்தன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகாத வார்த்தைகளைப் பேசியபடி சென்றதற்காக அந்த நபரை வழிமறித்து நிறுத்தியதாகவும், அதன் பின்னர் அந்நபர் அவர்களிடம் தகராறு செய்து, போலீசாரின் துப்பாக்கியையே எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பத்தில் துப்பாக்கி வெடித்து மரணம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு நபர் தகாத வார்த்தைகள் பேசுவதற்காக போலீசார் வழிமறித்து நிறுத்தினார்கள் என்று கூறுவதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது. மேலும் போலீசாரின் கைத்துப்பாக்கியை அந்நபர் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பத்தில் துப்பாக்கி வெடித்திருந்தால் மிக அருகிலிருந்தே சுடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டு சிறிது தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது தெளிவாகிறது. மேலும் ஆயுதம் எது வும் அற்ற ஒரே ஒரு நபரை ஆயுதத் துடன் கூடிய மூன்று போலீசாரால் கட் டுப்படுத்த முடியவில்லை என்பதையும் நம்ப இயலவில்லை. எனவே போலீ சாரின் அந்த அறிக்கை மீது எங் களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை,’ என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், உயிரிழந்த சஞ்சோபாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்குவதுடன், வழங்கியதற்கான ஆதாரத்தையும் ஆறு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் அரசு மட்டுமல்ல, இஸ்லாமிய மக்கள் அடுக்கடுக்காகக் கொன்று குவிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும் என்கவுன்டருக்கு பெயர் போனதுதான். கல்லூரி மாணவியான இஸ்ராத் ஜஹான், சோராபுதீன் சேக் போன்ற அப்பாவி இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்ற பொய்யான காரணத்
தைக் கூறி என்கவுன்டர் செய்த குஜராத் அரசின் காவல்துறை தற்போது நீதிமன்றங்களின் முன்பு விழிபிதுங்கி நிற்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

Exit mobile version