கஜேந்திரன் குழு – சந்தர்ப்ப வாதிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் : குட்டி
இனியொரு...
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த ஒடுக்கு முறைக்கெதிரான அரசியல் என்பதை யார் முன்னெடுப்பது என்பது மிக முக்கியமான விடயம். ஆரம்பத்தில் இந்த அரசியல் தவறான சக்திகளால் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே போராட்டம் என்பது சரியான திசையில் நகராமல் சீர்குலைக்கப்பட்டது. இறுதியில் முள்ளிவாய்க்காலில் அழிந்து போனது. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற தவறான சக்திகள் தேசியப் போராட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொண்டதன் பலன் தான் அதன் தொடர்ச்சியான தவறுகளும் அழிவுகளும். இதே தவறு மறுபடி உருவாகிறது. தமிழ் காங்கிரஸ் கஜேந்திரன் குழுவினர் நிலைமைகளைப் புரிந்து கொண்டு தேசியக் கோஷங்களைத் தமது கைகளில் எடுத்துக்கொண்டுள்ளனர். இவர்களோடு பல தேசிய உணர்வுள்ளவர்கள் இணைந்து கொள்ளும் அபாயம் உள்ளது. போராட்டம் இவ்வாறான பதவியை நோக்கமாகக் கொண்ட கஜேந்திரன் குழுவினரின் கைகளிற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்கோ மாறும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் பதவிய நோக்காகக் கொள்ளாமல் தேர்தலை மக்களை அணிதிரட்டும் கருவியாகப் கையாள வேண்டும் என்ற சுலோகத்தின் அடிப்படையில் போட்டியிடும் புதிய ஜனநாயக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை சந்தர்ப்பவாதக் கட்சிகளின் பிடியிலிருந்தும் பின்னணியிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும் லண்டனில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வொன்றில் அரசியற் செயற்பாட்டாளர் குட்டி தெரிவித்தார்.
புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பலர் கருத்துத் தெரிவித்தனர்.