Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

gajendrakumarதேர்தலைப் நிராகரித்து யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று வாக்குக் கட்சிகளே கூறுகின்றன. ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரஸ் என்ற பாரம்பரிய வாக்குக் கட்சியின் புலம்பெயர் நீட்சிகள் அதற்கு ‘ஓ’ போட ஆரம்பித்தன. ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசின் வெகுஜன அமைப்பே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்கள் வாக்குக் கேட்கும் போது கூட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சின்னத்திலேயே கேட்கிறார்கள்.

தமிழ்த் தேசியமும் ‘அகில இலங்கையும்’ என்ற எதிர் எதிர் கருத்துக்கள் எப்படி ஒன்றாகி உருவமாகின என்றெல்லாம் கேட்டுவைக்கக்கூடாது.

இந்த ‘அகில இலங்கை’ தான் புலம்பெயர் ‘கடும்போக்கு’ தமிழ் உணர்வாளர்களின் ரிமோட் கன்ரோல் அமைப்பு. ‘தேசியத் தலைவரின்’ பெயரால் ‘ அகில இலங்கையை ‘ தமது தேசிய வியாபாரத்தின் மறுமுனை வடிகாலாக்கிக் கொண்ட புலம்பெயர் தமிழர்களும் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருகின்றனர்.

‘அகில இலங்கை’ சொல்வதைக் கேட்டு நீங்கள் ஏன் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருகிறீர்கள் என்று கேட்டால், மூச்.. தேசியத் தலைவரின் பேரால் இதைச் செய்கிறோம். தேசியத் தலைவர் கடவுள்… என்று ஆரம்பித்துவிடுகின்றனர்.

மந்தைகளாகவே மக்களை வைத்துப் பார்த்து ரசித்தவர்கள் தொடந்தும் அப்படியே வைத்திருக்க விரும்புவதில் வியப்பேதுமில்லை.

கஜேந்திர குமார் லிமிட்டட் உம் அதனது அமைப்புக்களான இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன உம்  தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரினாலென்ன, தலைகீழாக நின்று வாக்களிகக் கோரினால் என்ன மக்கள் அதனைக் கண்டுகொள்வதில்லை. தென்னிந்தியாவிலிருந்து மீசை துடிக்க ஈழம் பேசும் வை.கோ, சிமான் உட்பட ‘ஈழம் மட்டும்’ அரசியல் வாதிகளைப் போன்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும். இவர்கள் அனைவரதும் அரசியல் புலம் பெயர் நாடுகளை நோக்கியது.

இவர்கள் மந்தைகளாக எண்ணும் புலம்பயர் மக்களை சூடாறவிடாமல் பார்த்துக்கொண்டு தேசிய வியாபாரத்தின் ஊள்ளூர் இணைப்பதிகாரி போலத்தான் கஜன் பொன்னம்பலம் செயற்படுகிறார்.
தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்பதற்கு மக்கள் மீது நியாயமாகவே பற்றுள்ளவர்களுக்கு நியாயமான காரணங்கள் உண்டு. இந்த தேர்தல் அமைப்பே தவறானது என்றும் சமூக மாற்றத்திற்கான மக்களை அணிதிரட்டிப் போராடுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்கிறார்கள் அவர்கள். ஆனால், வாக்குச் சேர்ப்பதையே நம்பி வாழும் கட்சியான கஜேந்திரகுமாரின் குடும்பச் சொத்தான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வாக்குப் போடவே வேண்டாம் என்னும் போது தான் சந்தேகமே எழுகிறது.

வடக்கில் நிலைகொண்டிருகும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவரும், கொழும்பு உயர் குடி செல்வந்தர்களில் ஒருவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதால் அவருக்கு என்ன பலன்? மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான, மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவான வாக்குகள் குறைவடையும்.

கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் வடக்கில் மக்கள் வாக்களித்தால் மைத்திரி வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகமாகும் என்கிறார்கள். ஆக, மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகும். ஆக, மகிந்தவின் வெற்றியைக் கஜன் விரும்புகிறார் என்பதே இங்கு தெளிவாகிறது.

புலம்பெயர் அமைப்புக்களின் ஒரே அரசியல் ‘மகிந்தவைத் தூக்கில் போடவேண்டும்’ என்பதே. மகிந்தவைத் தூக்கில் போடவேண்டும் என்று அரசியல் நடத்தவேண்டுமானால் மகிந்த ஆட்சியிலிருக்க வேண்டும். இதனால் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் புலம்பெயர் அமைப்புகளும் ஒரே புள்ளியில் இணைந்து கொள்கின்றன. இதே போன்ற சமாந்தரமான காரணங்களுக்காக இந்த இரண்டு பகுதிகளும் பல்வேறு தளங்களில் இணைந்து செயற்படுகின்றன.
இதற்குக் கூட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய முலாம் பூசி விற்பனை செய்கிறது.

மைத்திரிபாலவோ மகிந்தவோ தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுகும் எதிரானவர்கள் தான். சிங்கள பௌத்த பேரினவாதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து தமிழ் மக்களையும் சிங்கள அப்பாவி மக்களையும் சுரண்டிக் கொழுத்தவர்களே இவர்கள்.

இதனைச் சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமானால் தமிழ்ப் பேசும் மக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது.

மகிந்தவைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திவிட்டு மைத்திரியை பயன்படுத்தி முழு இலங்கையையும் சுரண்டத் திட்டமிடும் ஏகாதிபத்திங்களே இன்று தேர்தலை நடத்துகின்றன. பரம்பரை பரம்பரையாக கட்சி அரசியல் நடத்தும் கஜனுக்கு இது கூடத் தோன்றவில்லை

இதே பாராளுமன்றத்திற்குச் செல்வதற்காக வாக்குக் கேட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி(அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இன்று தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருவது பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போலியை நிராகரிப்பதற்காக என்றால் இனிமேல் வாக்குப் பொறுக்கவே மாட்டோம் என அறிக்கைவிடத் தயாரா?

இனிமேல் நாங்கள் வாக்குக் கேட்க மாட்டோம் என்றும், மக்களை அணிதிரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று தம்மைச் சுய விமர்சனை செய்துகொண்டு கஜேந்திரகுமார் தெருவில் இறங்கிப் போராடுவாரானால் அவரின் பகிஷ்கரிப்புக் கோரிக்கை மீது சந்தேகங்ல்கள் எழாது.

அதற்கெல்லாம் அவர்கள் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குக்களைத் தட்டிப் பறிப்பதும், புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளைத் திருப்திப்படுத்துவதுமே ‘அகில இலங்கையின்’ ஒரே நோக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாங்களது கருத்தை வெளிப்படையாகவே முன்வைக்கிறார்கள். சுய நிர்ணைய உரிமை வேண்டாம் என்று காட்டிக்கொடுத்தாலும் நேரடியாகவே காட்டிக்கொடுக்கிறார்கள். கஜேந்திரகுமாரின் கதையோ வேறு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற கட்சி தமிழ்த் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகச் செயற்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்திலாவது தம்மிடம் மக்கள் சார்ந்த அரசியல் இல்லை என்றும், இனிமேல் தான் அரசியல் திட்டம் வரையப்பட வேண்டும் என்றும் இக்கட்சிகள் கூறவேண்டும், அல்லது இத் தேர்தலில் வாக்குப் பொறுக்கிகளின் மோதல்களிடையே நசுங்கிச் செத்துப்போகும் விலை மதிக்க முடியாத தியாகங்களை காப்பற்ற முடியாது. இத்தேர்தலை அனுபவமாகக் கொண்டு அடுத்த தேர்தலுக்கு முதல் மக்களின் முன்னணிப்படையான அரசியல் தலைமை உருவாக்கப்பட வேண்டும்.

Exit mobile version