22.12.2008.
ஓரினச்சேர்க்கையாளருக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திட இலங்கை மறுத்துள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கும் இப்பிரகடனம் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாக நோக்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. வின் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகின்றது.
இலங்கையின் குற்றவியல் கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை குற்றச் செயலாகக் கருதப்படுவதுடன் இதற்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இவ் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திட மறுத்துள்ள இலங்கை அரசின் நடவடிக்கையை தாம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை ஓரினச் சேர்க்கைக் குழுவின் தலைவரும் ஸ்தாபகருமான சேர்மன் டி.ரோஸ்;
எமது மண்ணில் நாம் ஒரு குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
நாங்கள் குற்றவாளிகள் அல்ல. இந்நாட்டின் குடிமக்கள். ஒரு குற்றவாளியாக எம்மை அழைப்பது முற்றிலும் தவறானது. சாதாரண மனிதர்களைப் போல் வாழும் உரிமை எமக்குண்டு. காலனித்துவ சகாப்தத்தில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எம்மை நியாயப்படுத்தும் உரிமை எமக்கில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் அனுசரணையுடனான இப் பிரகடனத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் பிரேஸில், இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
ஆனால், அமெரிக்கா, வத்திக்கான், ரஷ்யா மற்றும் சீனா என்பவற்றுடன் இணைந்து அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இதில் கைச்சாத்திட மறுத்துள்ளன.
இதேவேளை, சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 8 நாடுகளில் நேபாளம் மட்டுமே இப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் இப்பிரகடனத்தை முதன் முறையாக ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பித்த ஆர்ஜென்ரீனா தூதுவர் ஜோர்ஜ் ஆர்கெல்லோ ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுவதை குறிப்பாக மரணதண்டனை , கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுவதை தடுப்பதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் பால் அடிப்படையிலான சுதந்திரம் என்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தும் இப்பிரேரணையில் 66 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
ஓரினச் சேர்க்கைக்கு 77 நாடுகள் தொடர்ந்து தடை விதித்துள்ள அதேவேளை, ஈரான் , மௌறிரேனியா, நைஜீரியா, சவூதி அரேபியா, சூடான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யேமன் போன்ற நாடுகளில் இது மரண தண்டனைக் குற்றமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.