08.11.2008.
ஓசாமா பின் லேடனின் மகனான ஓமர் பின் லேடன், ஸ்பெயின் நாட்டு அரசிடம் அரசியல் புகலிடம் கோரியுள்ளார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க ஸ்பெயின் அரசு மறுத்து விட்டது.
ஓசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவர் ஓமர். 20 வயதுகளில் இருக்கும் ஓமர்,தீவிரவாதத்தைக் கைவிடுமாறு தனது தந்தைக்கு கோரிக்கையும் விடுத்தார். அமைதிக்காக பாடுபடப் போவதாகவும் அறிவித்தவர். சவூதி நாட்டு பாஸ்போர்ட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இங்கிலாந்து அரசிடம் புகலிடம் கோரியிருந்தார் ஓமர். ஆனால் அதை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் புகலிடம் கோரியிருந்தார் ஓமர்.
இதற்காக திங்கள்கிழமை மாட்ரிட் வந்தார் ஓமர். விமான நிலையத்தில் வைத்து அரசியல் புகலிடம் கோரும் மனுவைத் தயாரித்தார். பின்னர் அதை ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இருப்பினும் இந்தக் கோரிக்கையை ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது. அதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. அதேபோல, ஓமர் என்ன காரணத்தைக் கூறி அரசியல் புகலிடம் கோரியிருந்தார் என்பதையும் ஸ்பெயின் அரசு தெரிவிக்கவில்லை.
இருப்பினும் ஓமர் பின் லேடன் அரசியல் புகலிடம் கோரியது தங்களை ஆச்சரியப்படுத்தியதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.