கொழும்பு வெள்ளவத்தை 57வது ஒழுங்கையை “கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை” என பெயரிடுவதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அனைத்து தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதி செவ்வாய்கிழமை காலை மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான எஸ் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மாகாணசபை உறுப்பினர் எஸ் ராஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக மேல்மாகாணசபை முதல்வர் பிரசன்னா ரணதுங்கவுடன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையை அடுத்து இந்த திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர், மேல்மாகாணசபையின் ஜமமு உறுப்பினர்கள் உட்பட அனைத்துகட்சி உறுப்பினர்கள், கொழும்பு மாநகரசபை மேயர், மாநகரசபையின் ஜமமு உறுப்பினர்கள் உட்பட அனைத்துக்கட்சி உறுப்பினர்கள், மாநகரசபையினதும், மாகாணசபையினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
நமது தலைவர் மனோ கணேசனால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் ஆளுநர் அலவி மௌலானாவின் சார்பாக அவரது அலுவலக இயக்குனர் ஹேமசந்திர கலந்துகொள்வார் என ஆளுநர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த பேச்சுவார்த்தையில் சமூமளித்து கருத்துகளை தெரிவிப்பார்கள். இதன்போது இந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.