08.08.2008.
பீஜிங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை நடைமுறையில் உள்ள ஊக்க மருந்துகளைக் கண்டறியும் முறைகளால் கண்டறிய முடியாத 2 புதிய ஊக்க மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் முதல் வகை ஊக்க மருந்துக்கு ஏ.ஐ.சி.ஏ.ஆர். (அஐஇஅகீ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை ஊக்க மருந்தை எலிகளுக்கு செலுத்தி சோதித்துப் பார்த்ததில், சாதாரண எலிகளைவிட ஊக்க மருந்து செலுத்தப்பட்ட எலிகள் 44% வேகமாக செயல்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் சால்க் இன்ஸ் ரிரியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் ரொனால்ட் இவான்ஸ் கூறியுள்ளார்.
இரண்டாவது வகை ஊக்க மருந்துக்கு ஜி.டபிள்யூ. 1516 (எஙி1516) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஏ.ஐ.சி.ஆர். மருந்தை விட அதிக சக்தி வாய்ந்தது என்றும், இதனை உட்கொண்ட எலிகள் 77% துரிதமாக செயல்பட்டதுடன், ஊக்க மருந்து உட்கொள்ளாத எலிகள் ஓடிக் கடந்த தூரத்தை விட, 68 சதவீதம் கூடுதல் தூரம் ஓடியதும் தெரியவந்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஊக்க மருந்து தடுப்பு சோதனைகளில் இந்த 2 மருந்துகளையும் கண்டறிய முடியாதென்பதால், இதனை ஒலிம்பிக் தடகள வீரர்கள் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது மறுக்க முடியாத வாதமாக உருவெடுத்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனம், உலக ஊக்க மருந்து தடுப்பு முகாமையுடன் இணைந்து ஜி.டபிள்யூ. 1516, ஏ.ஐ.சி.ஏ.ஆ.ர். ஊக்க மருந்துகளை கண்டறியும் சோதனையை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இது சாத்தியமில்லை என இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சோதனையில் கண்டறிய முடியாத 2 புதிய ஊக்க மருந்துகள் குறித்து, இங்கிலாந்து ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைமை மருத்துவ அதிகாரி ஏற்கனவே அறிந்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.