ராஜப்கச குடும்பத்தினதும் அதன் பாதுகாப்பு அரணான கிரிமினல்களதும் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள அடிமைகளாகவே இப் புத்திசீவிகள் கூட்டம் செயற்படும். சில வேளைகளில் தமது மேதாவித்தனத்தைக் காட்ட முற்பட்டால் புத்திசீவிகளின் தலைகளும் சீவப்படும். ராஜபக்ச அரசின் ஊதுகுழலாகச் செயற்படும் பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் கிரிஸ் நோனிஸ் என்பவரும் இந்த அடிமைகள் கூட்டத்தின் ஒரு அங்கம். பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு லைக்கா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் பணக்கொடுப்பனவிற்கு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் சீ.என்.என் தொலைக்காட்சிக்கு கிரிஸ் நோனிஸ் வழங்கிய நேர்காணல் பிரபலமானது. நேர்த்தியான ஆங்கிலத்தில் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒடுக்கப்படவில்லை என சீ,என்,என் தொலைக்காட்சியில் நோனிஸ் தனது ஆங்கிலப் புலமையைக் காட்டியபோது சிங்கள மேட்டுக்குடிகள் தமது வீட்டுத் தொலைக்காட்சிகளின் முன்னால் அமர்ந்து விசிலடித்தன.
ராஜபக்ச அரசின் கிரிமினல் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரத் துறையின் கண்காணிப்புக்குழு உறுப்பினருமன சஜின் வாஸ் குணவர்த்தன ஊதுகுழல் கிரிஸ் நோனிஸ் ஐத் தாக்கியதில் நோனிஸ் பதவி விலகியதாக இலங்கை ஊடங்கள் பரபப்பாகச் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சஜின் வாஸ் துபாயில் இலங்கையிலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பொருட்களை அனுப்புவதற்கான முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். ராஜபக்ச எதிர்கட்சியிலிருக்கும் போது சஜின் வாசை அங்கு சந்திததிலிருந்து ஏற்பட்ட நட்பு விரிவடைந்தது. ராஜபக்ச சர்வாதிகாரியாகப் பொறுப்பெடுத்துக்கொண்டதும் சஜின் வாசை இலங்கைக்கு அழைத்து பொறுப்புக்களை வழங்கினார். ஏற்கனவே சட்டவிரோதத் தொழில்களிலிலும் வன்முறைகளிலும் புகழ்பெற்ற சஜீன் குணவர்த்தன தனது கிரிமினல் வலையமைப்புடன் ராஜபக்சவிடம் இணைந்துகொண்டார்.
சஜின் வாஸ் குணவர்த்தனவும், கிரிஸ் நோனிசும் நியூ யோர்க்கில் இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட விவாதத்தில் சஜின் வாஸ், கிரிஸ் நோனிசை நையப்புடைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கிரிஸ் நோனிஸ் தனது தூதர் பதவியைத் துறப்பதாக நியூ யோர்க்கிலிருந்த ராஜபக்சவிற்கு எழுதிக்கொடுத்துவிட்டு லண்டனுக்குச் சென்றுள்ளார்.
வன்னியில் லட்சக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்ட போது வராத கோபம் கிரிஸ் நோனிசை ஆட்கொண்டதில் பதவி விலகியுள்ளார். ஆங்கிலம் பேசத் தெரிந்த கலாநிதி கண்கலங்கியதைக்கண்ட தமிழ் சிங்கள உயர்குடிமக்கள் சஜின் வாசைக் கண்டிக்கவும் நோனிஸ் நோகாமல் பாதுகாக்கவும் தமது ஊடகச் சுதந்திரத்தைப் பயனபடுத்தியுள்ளனர். சஜின் என்ற கிரிமினலும் கிரிஸ் என்ற கிரிமினல்களின் ஊதுகுழலும் மோதிக்கொள்வது வெறும் செய்திமட்டுமே. இதில் யாருக்காகவும் அழமுடியாது.