
இந்த சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகிய தினத்திற்கு மறுதினம் பத்திரிகையின் உரிமையாளர் லால் விக்ரமதுங்க, அந்தச் செய்தியை வெளியிட்ட சண்டேலீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் பெட்ரிக்கா ஜெயன்ஸ் ஆகியோரை தனது அலுவலத்திற்கு அழைத்துள்ள பொன்சேக்கா தாம் கூறாத விடயங்களை வெளியிட்டமை குறித்து அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பொன்சேக்காவின் இணை ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீரவும், அநுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தனர்.
வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு இராணுவத்தினரிடம் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர்கள், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாக தான் ஒருபோதும் கூறவில்லையென சுட்டிக்காட்டிய பொன்சேக்கா, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பெயரையும் தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தவில்லையெனக் கூறியுள்ளார்.
யுத்தத்தின் இறுதி இரண்டு தினங்களில் தனது அனுபவங்களை பத்திரிகை ஆசிரியர் தன்னிடம் கேட்டதாகவும், அந்த விடயங்களைத் தான் தெளிவுபடுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைக் கொலை செய்ய பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டாரா? என ஆசிரியர் தம்மிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ள பொன்சேக்கா, தான் அதுகுறித்து எதனையும் அறியவில்லை எனவும் எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அவ்வாறான விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதால் அதனைத் திருத்தி வெளியிடுமாறு பொன்சேக்கா லால் விக்ரமதுங்கவிடம் கேட்டுள்ளார். இதன்போது அழுதுபுலம்பியுள்ள பெட்ரிக்கா ஜெயன்ஸ், அவ்வாறு செய்தால் கோதாபய தன்னைக் கொலை செய்வார் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் தன்னைக் காப்பாற்றுமாறும் பொன்சேக்காவிடம் கூறியுள்ளார்.
பெட்ரிக்கா ஜெயன்ஸ் அழுதுபுலம்பியபோது மங்கள மற்றும் அநுர ஆகியோர் சண்டேலீடர் ஆசிரியர் கட்டாயமாக மன்னிப்புக் கோரி அந்தச் செய்தியை திருத்தி வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு இல்லையெனில், உண்மையான நிலையை வெளிப்படுத்தி நீதிமன்றத்திற்குச் செல்ல தமக்கு நேரிடும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரிக்காவின் நிலை குறித்து கருத்திற் கொண்ட பொன்சேக்கா அவருக்கு அநீதி ஏற்படாத வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த இணக்கம் தெரிவித்ததுடன், இதனடிப்படையில், சண்டேலீடர் செய்தி குறித்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தும் என பெட்ரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்த இணக்கத்தின் அடிப்படையில் பொன்சேக்கா செயற்பட்ட போதிலும் பெட்ரிக்கா அதனை மீறி, பசில் ராஜபக்ச வின் கோரிக்கைக்கு அமைய பொன்சேக்காவிற்கு எதிராக அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக கடந்த வாரம் வெளியான செய்தியை திருத்தி வெளியிடாவிட்டால், அடு த்த வாரம் அந்தப் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த தீர்மானித்துள்ளதாக பொது வேட்பாளரின் அலுவலகச் சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.