அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளரான பராக் ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது. ஆங்கில நடையும் மிக நளினம். மாற்றுச் சிந்தனைக்கு அமெரிக்காவில் மிக அவசரத் தேவை இருப்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். “Change!” [ மாற்றம் ] என்பதே அவரது கோஷம்.
அதிசயமாக இருக்கிறது ஒபாமா போன்ற ஒரு இளம் கருப்பர் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதும் பெருவாரியான வெள்ளை அமெரிக்கர்களின் ஆதரவைப் பெற்று வருவதும். அவருக்கும் குடியரசுக்கட்சியின் போட்டி வேட்பாளர் மக்கேய்னுக்கும் உள்ள மக்கள் ஆதரவு கணிப்பில் ஓபாமா 10% முன்னணியில் இருப்பதால் ஒபாமா நிச்சயம் அதிபர் தேர்தலில் வென்று விடுவார் என்று சொல்லப்படுகிறது.சென்ற நூற்றாண்டில் கருப்பர் சிவில் உரிமைக்காகக் கடுமையானப் போராட்டம் நடந்த அமெரிக்காவில், இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு கருப்பர் அதிபர் ஆவது ஒரு அற்புதம்போல் இருக்கிறது.
ஆனால், இப்பவும் நிற பேத உணர்வு உள்ள வெள்ளையர் கொண்ட அந்த மாபெரும் நாட்டில் ஒபாமா அதிபர் பதவிக்குத் தன்னை கட்சியும் பல மாநிலங்களும் அங்கீகரிக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது ஒரு அற்புதத்தால் நிகழ்ந்ததல்ல. அவரது கடுமையான உழைப்பு , நேர்மை, பொது வாழ்வில் காண்பித்துவரும் அடக்கம், கருத்துக்களில் தெரிவிக்கும் தொலைநோக்குப் பார்வை , அறிவுக் கூர்மை, ஆகியவையே மக்களை ஆகர்ஷிப்பதாகப் படுகிறது. கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை. அத்தகைய பேச்சு தன்னைத் தனிமைப் படுத்திவிடும் என்கிற கவனமான வியூகம் என்று தோன்றமுடியாத அளவுக்கு அவரது பேச்சிலும், எழுத்திலும் நாட்டுப்பற்று வெளிப்படுகிறது. அதுவே ஒரு தலைவரின் ஆளுமைக்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன்.
அமெரிக்க பொருளாதாரம் படு வீழ்ச்சியை அடைந்திருப்பதும் அவருடைய தேர்வுக்கு உதவக்கூடிய அம்சமாகிப் போனது. மிக அமைதியாக பொருளாதரமீட்பைப் பற்றி தெளிவாகவும் அழுத்தமாகவும் அவர் பேசுவது மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாலேயே அவருடைய ‘popularity rating’ அதிகரித்து வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எட்டு ஆண்டுகளாக நடந்த புஷ் அரசு மக்களின் பார்வையில் பொய்த்துவிட்ட ஆட்சி.
வெள்ளசேதம், வேலை இழப்பு, ஈராக் போரினால் பிள்ளைகளைப் பறிகொடுத்தது, இப்போது சந்தை வீழ்ச்சி எல்லாமாக மக்கள் வெறுத்து விட்டார்கள். மெக்கேய்ன் வந்தால் அந்த ஆட்சி தொடரும் என்று அஞ்சுகிறார்கள். அதனாலேயே ஒபாமாவை ‘ரட்சிக்க வந்தவர்’ என்கிற அளவுக்கு அவரது வரவை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்க நாடு.
அவருடைய புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு மகத்தான தலைவராக உருவாகக் கூடிய சகல குணங்களும் அவருக்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சுலபத்தில் ஏற்பட்ட வளர்ச்சி இல்லை அது. அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினாலேயே அது சாத்தியமாயிற்று என்று சொல்லவேண்டும். அவர் ஒரு ஆஃப்ரிக்க முஸ்லிமுக்கும் வெள்ளை அமெரிக்கபெண்ணுக்கும் பிறந்தவர். அவருடைய தந்தை அவர் குழந்தையாக இருந்த போதே பிரிந்து ஆஃப்ரிக்கா சென்றுவிட்டார் என்றாலும் செப் டம்பர் 9 தில் நியூ யார்க்கின் இரட்டை கோபுரம் வீழ்ந்தபிறகு ஒபாமாவின் முஸ்லிம் பின்னணி அவருக்கு ஆபத்தாகிப் போனது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் எதிரிகள் அவரது நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்பினார்கள். ஒசாமா ஒபாமா என்று கோஷமிட்டார்கள். பிரபல , செல்வாக்குள்ள, செல்வம் மிகுந்த பின்புலம் ஏதும் இல்லாமல் அமெரிக்க செனேட்டுக்குத் தான் போட்டியிட்டபோது பட்ட சிரமங்களை அவர் புத்தகத்தில் விவரிக்கும்போது அவர் அந்தத் தேர்தலில் ஜெயித்தது எத்தனை பெரிய விஷயம் என்று புரிகிறது.
புத்தகம் முழுவதும் சாமான்ய அமெரிக்கரின் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகளை மிக நேர்மையுடன் , புரிதலுடன் விளக்குகிறார். ஏற்கனவே அடிவாங்கிவிட்ட அமெரிக்க முதலாளித்துவம் அவர் ஆட்சிக்கு வந்தால் பல மாற்றங்களை சந்திக்கும் என்று தோன்றுகிறது. இந்தியர்களுக்கு அவுட் சோர்ஸிங்கினால் கிடைத்த வேலை வாய்ப்பு குறையும் என்று சொல்லப்படுகிறது. எனக்கு அது கவலை அளிக்கவில்லை. வேறு வாசல்கள் திறக்காதா என்ன? அமெரிக்காவுக்கு ஒபாமா இன்று தேவை.
மாற்றம் என்பது ஒரு மந்திரச் சொல். நம்பிக்கை தருவது. புதிய சுவாசம்போல். மாற்றம் முதலில் சிந்தையில் ஜனிக்கவேண்டும்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது. கண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை. புதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை. பலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன. யாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை. நாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன. அரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது. எல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது. உண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.
நமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது. காலத்தின் பிடியில் உறைந்து போனது போல. மாற்றுச் சிந்தனை , புதிய கருத்துக்கள் தோன்றாததே அதற்குக் காரணம். எந்தக் கொள்கையும் , அரசு அதிகாரமும் பூர்ணத்துவம் பெற்றதில்லை. ஜனநாயக மரபு அதற்கு இடம் கொடுப்பதில்லை. அதனாலேயே சாமான்ய மக்கள் அற்பர்கள் அல்ல. பாசாங்கைக் கண்டறியும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களிடையே ஒபாமாவைப் போல ஒரு மாற்றுச் சிந்தனை உள்ள ஒரு தலைவர் உருவாகவேண்டும் . நமக்கு அவசரமாகத் தேவை.
நன்றி : உயிர்மை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx? cid=402