Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒபாமா நோபல் பரிசை பெறுவதை கடுமையாக விமர்சித்துள்ள காஸ்ட்ரோ!

ஆப்கானிஸ்தானில் மேலதிக துருப்புகளை நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை ஏற்றுக்கொள்ளவிருப்பதை கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ விமர்சித்துள்ளார். இரு மாதங்களுக்கு முன்னர் ஒபாமாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது இதுவொரு சாதகமான நடவடிக்கையெனக் கூறியிருந்த காஸ்ட்ரோ தற்போது இதனை விமர்சித்துள்ளார்.

பொதுவாக ஒபாமா தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி காஸ்ட்ரோ தற்போது அரசாங்கப் பத்திரிகையொன்றில் எதிர்வரும் பத்தியில் ஒபாமாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இப்பத்திரிகையில் காஸ்ட்ரோ எழுதியுள்ளதாவது;ஆப்கானில் நீண்டகாலத்திற்குப் போரைத் தொடருவதென ஏற்கனவே தீர்மானித்த பின்னர் ஒபாமா ஏன் அமைதிக்கான நோபல் பரிசை ஏற்க வேண்டும்? நம்பிக்கையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கடப்பாட்டை ஒபாமா கொண்டிருக்கவில்லை.

ஆப்கானிலும் ஈராக்கிலும் சிறுவர்கள் மற்றும் அப்பாவி முதியவர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஒபாமா ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. அமெரிக்காவின் தற்போதைய கொள்கையும் முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் கொள்கையைப் போன்றதே எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,கொபன்ஹேகனில் நடைபெறும் ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு குறித்தும் குறிப்பிட்டுள்ள காஸ்ட்ரோ இம் மாநாட்டில் நடைபெறும் பேச்சுகளின் போது செல்வந்த நாடுகள் தம்மால் முடிந்த தியாகத்தைச் செய்ய முன்வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நோபல் பரிசைப் பெற்ற பின்னர் ஒபாமா நிகழ்த்தவுள்ள ஏற்புரையில் ஆப்கான் போர் குறித்த விடயங்களும் உள்ளடங்கியிருக்குமென வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version