அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் இந்தியாவுக்கு நவம்பர் மாதம் வருகிறார்.அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், ஒபாமா இந்தியா வருவது இதுவே முதல் தடவை ஆகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு வருவது சிறப்பானது என்று அவர் கருதுகிறார்.நவம்பர் 9ந் தேதி ஒபாமா இந்திய பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் பாராளுமன்றம் மற்றும் மேல் சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.ஒபாமாவின் இந்திய வருகை, இரு நாடுகள் இடையே நல்லுறவை மேலும் பலப்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் 2 வது வாரத்தில் தொடங்கும். ஒபாமாவின் வருகையையொட்டி இந்த தொடர் முன்னதாகவே கூட்டப்படும்.கடந்த 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் இந்தியா வந்தபோது, பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால் ஈராக் போரை காரணம் காட்டி, இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக இடதுசாரிகள் அறிவித்தனர். எனவே பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் புஷ் பேசவில்லை.அவருக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் 2000வது ஆண்டில் இந்தியா வந்தபோது, பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசினார்.ஜப்பான் பிரதமர் ஷினோ அபே 2007ம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தபோது பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.