ஒபாமா தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதை உடனடியாக வரவேற்ற தலைவர்களில் ஒருவரான காஸ்ட்ரோ தற்போது ஒபாமாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.ஹவானாவில் நடைபெற்ற இடதுசாரி தலைவர்களின் சந்திப்பில் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷினால் வாசிக்கப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளதாவதுசாவேஷ் போன்ற பிராந்தியத்திலிருக்கும் ஏனைய தலைவர்களை பலவீனமாக்குவதற்காக அமெரிக்கா வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
இந்த வல்லாதிக்க அரசின் உண்மையான நோக்கம் வெளிப்படையானது. இது இம்முறை ஆபிரிக்க அமெரிக்கரான பராக் ஒபாமாவின் முகத்தின் இதமான புன்னகையூடாக வெளிப்படுத்தப்படுகிறது.இந்த வல்லரசு தற்போது வெனிசூலா போன்ற இடதுசாரி அரசுகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்துவதற்காக தென் அமெரிக்காவிலுள்ள வலதுசாரிப் படைகளைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொலம்பிய இராணுவ முகாம்களில் அமெரிக்க துருப்புகளை அனுமதிப்பதற்கான உடன்படிக்கை மற்றும் ஹொண்டுராஸின் இராணுவப் புரட்சி குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு என்பவற்றையும் காஸ்ட்ரோ விமர்சித்துள்ளார்.ஆப்கானில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதையும் கடந்த வாரம் காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, ஒபாமா போருக்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பதாக சாவேஷ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை விமர்சித்துள்ளார்.