Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒட்டச் சுரண்டப்படும் தோட்டத் தொழிலாளர்கள் : மனோ கணேசன்

மலையக தேயிலை தோட்டங்களில் மூன்று அல்லது நான்கு கிலோ நிறை அதிகமாக கொழுந்து கொண்டுவரவேண்டுமென தோட்டத் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 95 ரூபாய் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டதன் விளைவாக இத்தகைய மேலதிக கொழுந்தை தொழிலாளர்கள் தினசரி கொண்டுவரவேண்டுமென, தோட்ட நிர்வாகங்கள் பிடிவாதம் பிடிக்கின்றன.

இதுதொடர்பில் கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியவை பதில்கூற வேண்டுமென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி நிலைமை தொடர்பில் மனோ கணேசன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தொடர்ந்து நஷ்ட கணக்கை காட்டிவரும் தோட்ட நிறுவனங்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ள கையெழுத்து தொழிற்சங்க தலைவர்கள், இந்த புதிய விதியை ஏற்றுக்கொண்டுள்ளார்களா? இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டுதான் தற்போதைய நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக 500 ரூபாய் தரமறுத்துள்ள தோட்ட நிர்வாகங்கள், தற்போது இந்த புதிய விதியை அமுலாக்கி தோட்டத் தொழிலாளர்களை கசக்கிப்பிழிவது நியாயமில்லை.

தொழிலாளர்கள் ஏற்கனவே விலைவாசி உயர்விற்கு ஏற்ற சம்பளம் கிடைக்காத காரணத்தினால் துன்பத்தில் துவழ்கிறார்கள். உழைப்பதற்கு தேவையான உணவு அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் மேலதிக கொழுந்து பறிக்கவேண்டும் என்ற நிர்பந்தம், தொழிலாளர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தோட்டங்களில் தற்சமயம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பல தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

தோட்ட நிறுவனங்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை குறைத்து காட்டுவதற்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளின் போது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இன்று மேலதிக அடிப்படை சம்பளத்தை சரி செய்வதற்கு தோட்ட கம்பனிகள் முயல்கின்றன. வழங்கப்பட்டுள்ள சிறுதொகை சம்பள உயர்வு வாழ்க்கை செலவை சமாளிப்பதற்கே போதுமானது அல்ல.

இந்த சிறு தொகைகூட வழங்கப்பட்டது மேலதிக வேலை செய்வதற்காக என்பது தற்சமயம் அம்பலமாகியுள்ளது. எனவே தோட்டத் தொழிலாளர்களை தோட்ட நிர்வாகங்கள் இவ்விதமாக கசக்கி பிழிவதற்கு இந்த கூட்டு ஒப்பந்தமே வழியேற்படுத்தி கொடுத்துள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கங்கள் தோட்ட நிறுவாகங்களின் இந்த புதிய நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனவா என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்களுடன் இதுதொடர்பில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் கலந்தாலோசனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. என மனோ கணேசன் கூறியுள்ளார்.

Exit mobile version