ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தேசிய இனங்கட்கும் எதிரான மிரட்டல் : சி.கா.செந்திவேல்
இனியொரு...
ஊடகங்களுக்கான அறிக்கை 16 ஓகஸ்ட் 2010 ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு காலியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களையும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் ஜனநாயக நடவடிக்கைகள் மீது நடாத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாகவே புதிய – ஜனநாயக மாக்சிச -லெனினிசக் கட்சி கருதுகிறது. அரசின் வழிகாட்டலில் பொலிசார் நடாத்தியதாக நம்பப்படும் மேற்படி தாக்குதலை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கட்சியின் மத்திய குழுவின் சார்பாக விடுத்த அறிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் அவ்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசாங்கத்தை விமர்சித்தும் கோரிக்கைகளை முன்வைத்தும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவும் மக்கள் போராட்டங்களை முளையிலேயே களையவும் அரசாங்கம் பயன்படுத்தி வந்துள்ள அரச வன்முறை, போர் முடிந்ததன்; பின்பு கூடியுள்ளதே ஒழியக் குறைந்ததாகத் தெரியவில்லை. அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் முன்னர் எவ்வாறு தமிழ் இளைஞர் இயக்கங்களை அடக்குவதற்காகப் புகுத்தப்பட்டுப் பின்னர் சிங்கள மக்களுக்கெதிராகப் பயன்பட்டனவோ, அவ்வாறே விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முறியடிக்கிற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளும் நாட்டின் அனைத்து மக்களுக்குமெதிராகப் பயன்படுமென்று புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி முதலிலிருந்தே எச்சரித்து வந்துள்ளது. இன்று ஜே.வி.பிக்கு எதிராகப் பயன்படும் அரச வன்முறையை இயலுமாக்;குகிற சட்டங்கட்கும் அரச அடக்குமுறை இயந்திரத்தின் வலுப்படுத்தலுக்கும் அன்று ஜே.வி.பி. முழு ஆதரவு வழங்கியது. போர் மூலம் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணுகிற அரசாங்கக் கொள்கையையும் ஆதரித்துத் தூண்டி நின்ற ஜே.வி.பி.. இன்றுவரை தன் நிலைப்பாட்டின் தவறை ஏற்க ஆயத்தமாக இல்லை. தென்னிலங்கையில் அதன் ஆர்ப்பாட்டங்களிற் பெரும்பான்மையானவை ஜெனரல் சரத் பொன்சேகாவை மையப்படுத்தி உள்ளனவே ஒழிய, எங்கேனும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றிச் சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கிலானவையாகக் கூட இல்லை. எனினும் அரசாங்கம் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது வன்முறையைப் பிரயோகித்ததையும் ஜே.வி.பியினரை இலக்கு வைத்து அதன் தலைவர்களை மட்டுமே கைது செய்ததையும் மிக ஆபத்தான ஜனநாயக விரோதப் போக்காகவும் இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தேசிய இனங்கட்கும் எதிரான மிரட்டலாகவும் புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி காணுகிறது. எனவே புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களையும் அரசியல் நோக்கங் கொண்ட கைதுகளையும் வன்மையாகவும் நிபந்தனையின்றியும்; கண்டிக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான அல்லது மேலும் மோசமான தாக்குதல்கள் மக்களின் நியாயமான போராட்டங்கட்கு எதிராக மேற்கொள்ளப்படும் அபாயங் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் ஐக்கியப்பட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முன்வருமாறும். சகல ஜனநாயக, இடதுசாரி, முற்போக்குச் சக்திகளையும் அனைத்து மக்களையும் எமது கட்சி கேட்டுக் கொள்கிறது.