Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒசாமா பின் லேடன் இருப்பிடம் கண்டுபிடிப்பு?

வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணத்தில் உள்ள குர்ராம் ஏஜென்சி (Kurram Agecny) பகுதியில் பதுங்கி இருப்பதாக செயற்கை கோள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள் பலவற்றால் தேடப்பட்டு வரும் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க அமெரிக்கா கடந்த 8 ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து வருகிறது.

இதற்காக அமெரிக்க புவியியல் ஆய்வாளர் தாமஸ் கில்லஸ்பி தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், செயற்கோள் மற்றும் நவீன புவிவியல் கொள்கைகளை வைத்து தேடி வருகின்றனர். இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருப்பதாக தாமஸ் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள குர்ராம் ஏஜென்சியில் அமைந்துள்ள பராச்சினர் நகரில் (Parachinar town) ஒசாமா இருக்கிறார். இந்நகரம் இஸ்லாமாபாத்தில் இருந்து 290 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செல்லும் முக்கிய வழியில் இந்நகரம் இருக்கிறது. மேலும் ஒசாமா கடைசியாக நேரில் தோன்றிய டோரா போரா மலை பகுதி பராச்சினர் நகருக்கு அருகில் இருக்கிறது.

ஒசாமாவின் பழக்கவழக்கம் மற்றும் அவரின் தேவைகள் ஆகியவை இந்த ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவின. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடனேயே அவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டார்.

அவரது உயரம் 6 அடி 4 அங்குலம் என்பதால் அவரால் குகைகளில் தொடர்ந்து நீண்டநாள் வாழ்வது கடினம். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதால் தினமும் ‘டையலசிஸ்’ செய்ய வேண்டும். இதற்கான மருத்துவ சாதனம் இயங்க வேண்டுமென்றால் தினமும் அதிக மின்சாரம் தேவைப்படும்.

ஆளில்லாத இடங்களில் தான் அவர் தங்குவார் என்றாலும் அங்கு பலத்த பாதுகாப்பு உடைய குடியிருப்பு தேவைப்படும். இந்த அனைத்து கூறுகளும் கொண்ட மூன்று கட்டிடங்கள் பராச்சினர் நகரில் இருக்கிறது என்றார் தாமஸ் கில்லஸ்பி.

அவரது மறைவிடம் இது தான் என உறுதிப்படுத்தப்பட்டாலும் அங்கு அமெரிக்க ராணுவம் சென்று அவரை பிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். ஏனென்றால் தற்போது இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ளது.

Exit mobile version