Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா விசாரணை : போராளிகளைக் காட்டிக்கொடுத்த புலம்பெயர் அமைப்புக்கள்

un-investigationஇலங்கையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து, வன்னிப் படுகொலைகள் ஈறாக நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மூன்று வெவ்வேறு நாடுகளை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு விசாரணைகள் நடைபெறவுள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையே நடைபெற்றவுள்ளது. இதுவரைக்கும் விசாரணைக் குழுவிற்குக் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளில் 70 வீதமானவை விடுதலைப் புலிகள் தொடர்பானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா,பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் துணையோடு வன்னியில் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னரான சுத்திகரிப்பு நடவடிக்கையாக இப் போர்க்குற்ற விசாரணை அமையுமா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்குத் தாமே காரணம் எனப் புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்கள் உரிமை கோருகின்றன. அமெரிக்கா உட்ப்ட தேசிய விடுதலைப் போராட்டங்களை அழிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் விசாரணை நாடகத்தை எந்த முன்நிபந்தனையுமின்ற ஏற்றுக்கொண்ட இந்த அமைப்புக்கள் இன்று மற்றொரு அழிப்பிற்குத் துணை செல்கின்றன.

முன்னைநாள் போராளிகள் உட்பட அனைவரையும் அழிக்கப்படுவதற்கும் இவர்களின் பிழைப்புவாத அரசியல் காரணமாக அமைகிறது.

உலகின் மிகப்பெரும் பயங்கரவாதிகளில் ஒருவரான மகிந்த ராஜபக்சவும் இலங்கை அரச இராணுவக் கட்டமைப்பில் பதவியிலிருப்பவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பது மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கு அவசியமானதே.

ஆனால், போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் ஒரு சில இலங்கை அரச இராணுவ அதிகாரிகளையும், பெரும்பாலான முன்னை நாள் போராளிகளையும் தண்டிக்கும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன.
போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்குத் தாமே காரணம் என்று கூறும் புலம்பெயர் அமைப்புக்கள் ஏன் முன்நிபந்தனைகள் விதிக்கவில்லை? உலகில் போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் கிரிமினல்கள் காப்பாற்றப்பட்டது தொடர்பாகவும், போராளிகள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் இனியொரு போன்ற இணையங்கள் முன்னமே எச்சரித்திருந்தன.

குறைந்தபட்சம், மகிந்த ராஜபக்ச உட்பட இலங்கை அரசின் உயர்மட்ட இனக்கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், போராளிகள் தற்காப்பு யுத்தம் நடத்தியவர்கள் என்றவகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முன்நிபந்தனைகளை ஏன் புலம்பெயர் அமைப்புக்கள் முன்வைக்கவில்லை?

புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதால் எஞ்சிய போராளிகளைப் போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யக்கூடாது என முன்னிபந்தனைகளை ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் போது ஏன் வலியுறுத்தவில்லை? பிரபாகரனும் புலிகளும் வாழ்வாதாகப் பிழைப்புநடத்தும் இவர்களுக்கு இந்த உண்மைய வெளியில் சொல்ல முடிவதில்லை.

இவை பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன. ஏற்கனவே பல முன்னை நாள் போராளிகள் போர்க்குற்றவாளிகள் என்ற தலையங்கத்தில் ஐரோப்பா, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் வாழும் முன்னை நாள் போராளிகளின் அழிவிற்குத் துணை செல்லப்போகிறோமா?

இனியாவது ஐ.நா விசாரணைக் குழுவிடம் நிபந்தனைகளை விதிப்பதற்கு புலம்பெயர் அமைப்புகள் முன்வரவேண்டும்.

Exit mobile version