Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா விசாரணைக் குழுவிற்குப் 12 பேர் நியமிக்கப்பட்டனர்:தண்டிக்கப்படும் வரை அகதிகளை அனுப்பக்கூடாது

navi_pillayஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருக்கின்றார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பெடஸ் sandra beidas இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக தொழிற்பட உள்ளார்.. இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிரண்டு பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதியரசரான டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் பணி இந்த மாதம் (ஜூன்) நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் தொடர்ந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறான விசாரணைகள் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதை விட அவர்களைக் காப்பாற்றியிருப்பதே வரலாறு. தவிர, இவற்றின் அடிப்படை நோக்கம் மக்கள் போராட்டங்களைப் பிந்தள்ளுவதும் மக்களை விரக்திக்குள்ளாக்குவதுமே ஆகும். இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் அகதிகளை அழிக்கவும், சிங்கள பௌத்த குடியேற்றங்களைத் தடுக்கவும் இந்த விசாரணைக் காலப்பகுதி இலங்கை அரசிற்கு உதவும். ஆக, விசாரணை முடிவடைந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அகதிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்ப்பு ஆகியன நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தலைமைகள் கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

இந்தக் குழுவின் பணி இந்த ஜூன் நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் கடந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version