ஐ.நா.:இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் அலுவலகங்களை மூடுமாறும் நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் ஏனைய அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் ராஜபக்ஷ நிர்வாகம் உத்தரவுகளை வழங்கியிருக்கும் நிலையில், ஐ.நா.வும் அதனுடைய மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகமும் இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை என்று நியூயோர்க்கிலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது.ஜூலை 8 இல் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மிச்சேல் மொண்டாஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. உதாரணமாக 150 பணியாளர்களைக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அதன் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பணிக்கப்பட்டிருப்பது குறித்து இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. டார்பரில் இருந்து சூடான் சுமார் 200 பணியாளர்களை வெளியேற்றிய போது உடனடியாகவே ஐ.நா. அதனை விமர்சித்திருந்தது. இங்கு ஐ.நா. எதனையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கேட்கப்பட்டபோது “நாம் அதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறோம்’ என்று மொண்டாஸ் கூறியுள்ளார்.
ஜூலை 8 இல் 7 வாரங்கள் தடுப்புக் காவலிலிருந்த மருத்துவர்கள் வெளியே கொண்டுவந்து காண்பிக்கப்பட்டனர். இவர்கள் வடக்கில் மோதல் பகுதியிலிருந்து சிகிச்சையளித்ததுடன், இழப்புகள் தொடர்பாக விபரங்களையும் வெளியிட்டிருந்தனர். ஆயினும், ஐ.நா.விடம் இது தொடர்பாக ஒன்றும் கூறுவதற்கு இல்லை என்று இன்னர் சிற்றி பிரஸின் ஐ.நா.விலுள்ள நிருபர் மத்யூ ரசல் லீ நேற்று முன்தினம் தனது செய்தியாய்வில் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் இந்த மருத்துவர்கள் மற்றும் அவர்கள் அளித்த சிகிச்சை என்பன தொடர்பாக பான் கீ மூனும் அவருடைய மனிதாபிமான விவகாரத்திற்கான உயர் அதிகாரியான ஜோன் ஹோம்ஸும் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் வெளியே காண்பிக்கப்பட்டது குறித்தும் பின்னர் அவர்கள் அரசாங்கத்திற்குச் சார்பான விதத்தில் அறிக்கை விடுத்திருப்பது தொடர்பாகவும் ஐ.நா.விடம் கூறுவதற்கு எதுவுமில்லாத நிலை காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது. ஜூலை 9 இல் மருத்துவர்கள் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் மிச்சேல் மொண்டாஸிடம் கேள்வியெழுப்பியிருந்தது. அவர்களுடைய முன்னைய அறிக்கைகளையும் சிறையில் இருந்து வந்ததன் பின்னரான அறிக்கைகளையும் தாங்கள் பெற்றிருப்பதாகவும் ஆனால், தன்னால் எது உண்மை என்று கூறமுடியாதிருப்பதாகவும் மிச்சேல் மொண்டாஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபையும் ஏனையவர்களும் இந்த அறிக்கைகள் நம்பகரமானவையாக இல்லையென்று கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது தொடர்பாக நீண்ட காலத்திற்கு ஐ.நா. கவனிக்காத தன்மையே தென்படுகிறது. மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டாமென பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளாரா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. அதற்கு பதிலளித்த மொண்டாஸ், “அவர் விசாரணை பற்றி குறிப்பிட்டிருக்கவில்லை. ஏனெனில், விசாரணை தொடர்பாக கேள்விக்கிடமில்லை. நான் அறிந்த வரை அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார். ஐ.நா.வானது அதிகளவில் முயற்சிக்கின்றது. பரந்தளவில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பொழுது இலங்கையின் அனர்த்த வேளையின் போது வெட்கப்படத்தக்கவகையில் செயற்படாமல் இருந்த தனது கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குழப்பகரமான முன்னேற்றங்கள் குறித்து அவற்றுக்கு தீர்வுகாணப்படுமென அண்மைய நாட்களில் ஐ.நா. உறுதிமொழி அளித்திருந்தது. ஆயினும் அதற்குரிய பதில்களை இன்னமும் அது வழங்கவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது. ஐ.நா.வின் நிதியுதவியுடன் இயங்கும் முகாம்களில் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளியான அறிக்கைகள் குறித்து இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. எமக்கு அது பற்றித் தெரியாது என்று கூறிய பான் கீ மூனின் பேச்சாள் மிச்சேல் மொண்டாஸ், இப்பொழுது எமக்கு அங்கு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். தனது பயன்பாட்டிற்கு நிச்சயப்படுத்திக்கொள்வதற்கும் உரிய பதிலைப் பெற்றுக்கொள்ள முடியாதுவிடில் ஐ.நா. ஏன் நிதியுதவியை அளிக்கின்றது என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. இது எவ்விதம் செயற்படுகின்றது என்பதைத் தான் கவனிப்பதாக மொண்டாஸ் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னர் எந்தத் தகவலோ பதில்களோ வழங்கப்படவில்லை. அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் வரி அறவிடுவது தொடர்பாக கேட்கப்பட்டபோது, ஐ.நா.வின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகமும் எதனையும் கூறவில்லை. பர்மா விவகாரம் குறித்து அது நடவடிக்கை எடுத்து வந்தது. இப்பொழுது செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஏனைய உதவி அமைப்புகளின் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கின்றது. இது தொடர்பாக எந்தக் கருத்தையும் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவிக்கவில்லை. பான் கீ மூனிற்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தும் கூட அது தொடர்பாக ஐ.நா. தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது.
|